காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை - பாதுகாப்பாக இருங்கள்!
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

திருச்சி காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு மாவட்ட கலெக்டர் சரவணன் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காவிரியில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக அணைகள் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு சற்று முன் கூட்டியே தொடங்கியது. பருவ மழை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்த நிலையில் கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதி கனமழை வெளுத்து வாங்கியது. மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்கு பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றன. இதனால் அணைகள் வேக வேகமாக நிரம்பி வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்த வரை கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை நிரம்பும் நிலை உள்ளது. உபரி நீர் காவிரியில் திறக்கப்பட உள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆற்றில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து வினாடிக்கு 70,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கபினி அணையிலிருந்து வினாடிக்கு 25,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணை விரைவில் நிரம்பும். மேட்டூர் அணையின் அதிகபட்ச கொள்ளளவு 120 அடி. அணையிலிருந்து உபரி நீராக 50,000 முதல் 70,000 கன அடி வரை காவிரியில் திறக்க வாய்ப்புள்ளது. இதனால் காவிரியில் நீரின் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. சலவை தொழிலாளர்கள் உட்பட அனைவரும் தங்கள் உடமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ, பொழுதுபோக்கவோ பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. "கரையோரங்களில் அல்லது ஆபத்தான இடங்களில் நின்று செல்பி எடுக்கக் கூடாது" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் ஆற்றில் இறங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கால்நடைகளை குளிப்பாட்ட நீர்நிலைகளுக்கு அழைத்துச் செல்லக்கூடாது. பாலங்களை தவிர்த்து பாதுகாப்பற்ற இடங்களில் ஆற்றைக் கடக்கவும் கூடாது. பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைக் கேட்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





















