அத்வானிக்கு பாராட்டு.. நேரு, இந்திராகாந்தி மீது விமர்சனம் - காங்கிரசை காண்டாக்கிய சசிதரூர்!
பாஜக மூத்த தலைவர் அத்வானியை பாராட்டி முன்னாள் பிரதமர்கள் நேரு மற்றும் இந்திரா காந்தியை சசிதரூர் விமர்சித்தது காங்கிரசார் மத்தியில் கோபத்தை உண்டாக்கியுள்ளது.

பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில், ராகுல் காந்தி மிகத் தீவிரமாக தனது பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். தொடர்ச்சியாக 3 மக்களவைத் தேர்தல்களில் பாஜக-விடம் தோல்வியைத் தழுவி வரும் காங்கிரசை மீண்டும் வலுவாக மீட்டுக்கொண்டு வர ராகுல்காந்தி போராடி வருகிறார். ஆனால், அவருக்கு சொந்த கட்சியினரே தலைவலியாக அவ்வப்போது மாறி வருகின்றனர்.
அத்வானியை வாழ்த்திய சசிதரூர்:
தற்போது ராகுல்காந்திக்கும், காங்கிரசுக்கும் தலைவலியாக மாறியிருப்பவர் அக்கட்சியின் முக்கிய தலைவரும், எம்பி - யுமான சசிதரூர் ஆவார். நாட்டின் முன்னாள் துணை பிரதமர் அத்வானிக்கு 98வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், காங்கிரஸ் எம்பி சசிதரூரும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

சசிதரூரின் வாழ்த்தில் மக்களுக்கு சேவை செய்ய அவர் காட்டிய அர்ப்பணிப்பு, கண்ணியம் மற்றும் நவீன இந்தியாவுக்கான பாதையை வடிவமைப்பதில் அவரது பங்கு அழியாதவை என்று புகழாரம் சூட்டியிருந்தார். முன்மாதிரியான ஒரு உண்மையான அரசியல்வாதி என்றும் பாராட்டியிருந்தார். சசிதரூரின் இந்த பாராட்டு காங்கிரஸ் கட்சியினரை மிக கடுமையான கோபத்தில் ஆழ்த்தியது.
நேரு, இந்திரா மீது விமர்சனம்:
காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் மிக கடுமையாக சசிதரூரை விமர்சித்த நிலையில், அதற்கு சசிதரூர் அளித்த பதில் காங்கிரஸ் கட்சியினரை மேலும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, அத்வானியின் நீண்ட நெடிய சேவையை ஒரே ஒரு அத்தியாயத்தை வைத்து குறைத்து மதிப்பிடக்கூடாது. நேருவின் வாழ்க்கையில் சீன விவகாரத்தால் ஏற்பட்ட பின்னடைவை வைத்தோ, இந்திரா காந்தியின் வாழ்க்கையை எமர்ஜென்சி காலத்தை வைத்து மட்டுமே எப்படி வரையறுக்க முடியாதோ அதே நியாயத்தை அத்வானிக்கும் காட்ட வேண்டும் என்று சசிதரூர் பதிவிட்டுள்ளார்.

சசிதரூரின் இந்த பதிவு ஒட்டுமொத்த காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியிலும் மிகப்பெரிய ஆதங்கத்தையும், கோபத்தையும் உண்டாக்கியுள்ளது. கடந்த சில காலமாகவே சசிதரூர் காங்கிரஸ் தலைமையை கோபமூட்டும் வகையில் பல கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். மேலும், அவர் பாஜக-விற்கு அந்தர்பல்டி அடிக்க உள்ளார் என்ற தகவல்களும் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
தொண்டர்கள் கோபம்:
கடந்த சில வாரங்களுக்கு முன்பு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தியின் செயல்பாடு குறித்து விமர்சித்திருந்தார். அந்த விவகாரம் பெரும் அதிருப்தியை கட்சிக்குள் ஏற்படுத்தியது. இந்த சூழலில், சசிதரூர் தற்போது இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். இதனால், சசிதரூர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.




















