மேலும் அறிய

CM Stalin: பாஜகவினர் வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டிகளாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் - முதலமைச்சர் ஸ்டாலின்

CM Stalin: சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாடு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சேலத்தில் நேற்று அதாவது ஜனவரி 21ஆம் தேதி திமுக இளைஞரணி சார்பாக 2வது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆளுநருக்கு எதிராகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாடு தொடர்பாக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 

”இளைஞர் பட்டாளத்தின் எழுச்சி மாநாடு வெற்றி.. வெற்றி.. நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் நன்றி மடல்.

இது தந்தை பெரியார் மண்! பேரறிஞர் அண்ணா மண்! முத்தமிழறிஞர் கலைஞர் மண்! அதுமட்டுமா, அருட்பிரகாச வள்ளலார் மண்! பண்டிதர் அயோத்திதாசர் மண்! பெருந்தலைவர் காமராசர் மண்! கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மண்! பொதுவுடைமைத் தோழர் ஜீவா மண்! சுருக்கமாகச் சொன்னால், சமூகநீதிக் கொள்கை வழியில் பயணிக்கும் மதநல்லிணக்க மண்தான் தமிழ்நாடு என்பதை சேலத்தில் எழுச்சியுடன் நடந்தேறிய கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் உணர்த்தியிருக்கிறது.

கடல் இல்லா சேலத்தில் கழக இளைஞரணியினரின் தலைகளே கடலாக, மாநகரத்திலிருந்து மாநாடு நடைபெற்ற இடம் வரை 30 கிலோ மீட்டர் நீளத்திற்கு அசைந்தாடிய கருப்பு சிவப்பு இருவண்ணக்கொடிகளே அலைகளாக இருந்ததைக் கண்டபோது, மாநாட்டினை எழுச்சியும் உணர்ச்சியுமாக நடத்திக்காட்டிய இளைஞரணிச் செயலாளர் அமைச்சர் தம்பி உதயநிதி , மாநாட்டு ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டிருந்த கழகத்தின் முதன்மைச் செயலாளரான அமைச்சர் கே.என்.நேரு , சேலம் மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும், இளைஞரணியின் மாநிலத் துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கண்துஞ்சாமல் அயராது பாடுபட்டதன் அறுவடையைக் காண முடிந்தது. மாநாட்டு முகப்பில் சேலத்துச் சிங்கம் வீரபாண்டியார் நினைவுக் கொடி மேடையில் இருவண்ணக் கொடியை உயர்த்தி வைத்த கழகத் துணைப் பொதுச்செயலாளர் அன்புத் தங்கை கனிமொழி எம்.பி. அவர்களுக்கும், மாநாட்டுத் திறப்பாளர் மாணவரணிச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் அவர்களுக்கும், மொழிப்போர்த் தியாகிகள் படத்தைத் திறந்து வைத்த சட்டமன்றக் கொறடா திரு. கோவி. செழியன் உள்ளிட்ட அனைவருக்கும் கழகத் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான  என் நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

மாநாட்டுப் பந்தலைக் கடந்து, வளாகம் நிறைந்து, நெடுஞ்சாலை முழுவதும் திரண்டிருந்த இளைஞர் பட்டாளம், கழகத்தின் எதிர்காலம் குறித்த பெரும் நம்பிக்கையை விதைத்தள்ளது.   நாடாளுமன்றத் தேர்தல் களத்திற்கு ஆயத்தமாக்கும் பயிற்சி அரங்கமாக இளைஞரணியின் மாநாடு அமைந்திருந்த அதேவேளையில், வெறும் தேர்தல் அரசியலை மட்டுமே திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுப்பதில்லை என்பதையும், தேர்தல் களத்திலும் கொள்கை வழி அரசியலையே முன்னெடுக்கும் என்பதையும் மாநாட்டின் மையப் பொருளாக அமைந்த, ‘மாநில உரிமை மீட்பு முழக்கம்’ அமைந்திருந்தது.

தம்பி உதயநிதி முன்மொழிந்த மாநாட்டின் 25 தீர்மானங்களும் திராவிட மாடல் அரசு எந்தளவுக்கு மக்களுக்கான நன்மைகளைச் செய்து, மாநிலத்தின் வளர்ச்சியைப் பெருக்கியிருக்கிறது என்பதுடன், மாநில உரிமைக்கானப் போராட்டத்தில் நாம் முன்னெடுக்க வேண்டியவற்றையும் தீர்மானங்கள் வாயிலாகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இழந்த மாநில உரிமைகளை மீட்கவும், இருக்கின்ற மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும், மாநிலங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெறவும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் வகுத்தளித்த மாநில சுயாட்சிக் கொள்கையை நிறைவேற்றிட வேண்டும் என்பதையும், கல்வி - சுகாதாரம் இரண்டையும் மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டியதன் தேவையையும், பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சரே வேந்தராக இருக்க வேண்டும் என்பதையும், எல்லாவற்றுக்கும் மேலாக அரசியலமைப்பில் தொங்கு சதையாக உள்ள நியமனப்பதவியான ஆளுநர் பதவி முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும் என்பதையும் இளைஞரணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் உரக்கச் சொல்லியுள்ளன.

மதவெறி அரசியலால்  மக்களைப் பிளவுபடுத்துகிற ஒன்றிய பா.ஜ.க. அரசு தனது பத்தாண்டு கால ஆட்சியில் மக்களின் அடிப்படைத் தேவைகள் எதையும் நிறைவேற்றாமல் முழுமையாகத் தோல்வி அடைந்திருப்பதை மறைப்பதற்காக ஆன்மீகத்தையும் அரசியலாக்கும் வகையில் அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழாவை நடத்துகிறது என்பதை கழகத்தின் பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்கள் ஏற்கனவே அறிக்கையாக வெளியிட்ட நிலையில், இளைஞரணி மாநாட்டில் அதனைத் தீர்மானமாகவே முன்மொழிந்து, சிறுபான்மை மதத்தினருக்கு மட்டுமின்றி, இந்து மதத்தில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட - மிக பிற்படுத்தப்பட்ட - பட்டியல் இன - பழங்குடி மக்களுக்கும் துரோகம் இழைத்து, உண்மையான இந்து விரோதியாக செயல்பட்டு வரும் பா.ஜக. அரசை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்திட சூளுரை மேற்கொண்டிருக்கிறது தம்பி உதயநிதி வழிநடத்துகிற இளைஞரணி.

இலட்சக்கணக்கில் இளைஞர் பட்டாளம் திரண்டிருந்த சேலம் மாநாட்டின் எழுச்சிகரமான வெற்றியைக் கண்டு மிரண்டு போன கழகத்தின் அரசியல் எதிரிகளும், வலிமைமிக்க திராவிட இயக்கத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது என்பதை அறிந்துள்ள கொள்கை எதிரிகளும் தங்களுக்கேயுரிய கேவலமான உத்தியான வதந்தி பரப்பும் வேலையை, மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே தொடங்கிவிட்டனர்.

இராமர் கோயில் திறக்கப்படும் நாளில், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின்கீழ் உள்ள கோயில்களில் சிறப்பு பூசைகள் செய்தவற்கும் அன்னதானம் வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக அவதூறு நிறைந்த பொய்ச் செய்தியை ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரப்பினர். மாநாட்டு அரங்கில் இருந்தாலும், தன் துறையின் பணிகளை ஒவ்வொரு நொடியும் மேற்கொண்ட செயல்பாபு எனப்படும் அமைச்சர் சேகர்பாபு அவர்கள் உடனடியாக இந்த அவதூறு பரப்புரைக்கு மறுப்பு தெரிவித்து, உண்மை நிலையை விளக்கி அறிக்கை வெளியிட்டார்.

ஒரு வதந்தியை வாட்ஸ்அப், இதர சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் எனப் பரவச் செய்து அதனை உண்மை போல ஆக்கும் பணியை பா.ஜ.க.வில் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களே பொறுப்பின்றி செய்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதில் தலைநகரம் டெல்லி முதல் தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க.வினர் வரை யாரும் விதிவிலக்கு கிடையாது.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக்கோயிலில் பஜனை நிகழ்ச்சிகளின் போது காணொளி காட்சி ஒளிபரப்புக்கு அறநிலையத்துறை தடை விதித்திருப்பதாகவும் ஒன்றிய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் அம்மையார் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அந்த பஜனை நிகழ்ச்சிக்கு அனுமதி கோரியவர்களே, காணொளி காட்சிகள் எதையும் திரையிடமாட்டோம் என்று குறிப்பிட்டுதான் அனுமதியே கோரியுள்ளனர். இதனை மறைத்துவிட்டு, ஒன்றிய நிதியமைச்சர் பரப்பிய உண்மைக்கு மாறான செய்தி.. அல்ல, அல்ல, திட்டமிடப்பட்ட வதந்தி, பொழுது விடிவதற்குள் பொய் என அம்பலமானது. 

அதுமட்டுமல்ல, இந்தப் பொய்ப் பரப்புரைக்குச் சென்னை உயர்நீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளதையும், தமிழ்நாட்டை என்றென்றும் அமைதிப் பூங்காவாகத் திகழச் செய்யும் மதநல்லிணக்க எண்ணம் கொண்ட மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். “பக்தி என்பது மகிழ்ச்சிக்கும் அமைதிக்கானதும் மட்டுமே. சமூகத்தில் நிலவும் சமநிலையைச் சீர்குலைப்பதற்காக அல்ல” என்றும், சிறப்பு பூஜைகளுக்கு எந்தத் தடையும் விதிக்கப்படாத நிலையில், தவறான பரப்புரையால் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டிற்கு வழி வகுத்திடக்கூடாது என்றும் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசியல் சட்டத்தையே மதிக்காத போக்குடன் நடந்துகொள்ளும் பா.ஜ.க.வின் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களும், பா.ஜ.க.வால் உயர்ந்த பொறுப்பைப் பெற்றவர்களும் தொடர்ந்து வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டிகளாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் ஆளுநராக நியமனப் பதவியில் உள்ள ஆர்.என்.ரவி அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் சென்னை மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர்  கோயிலுக்கு வழிபாடு செய்யச் சென்றபோது, பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களிடம் கண்ணுக்குப் புலப்படாத பயம் தெரிந்ததாகவும், அயோத்தி இராமர் கோயிலில் பால இராமர்  சிலை நிறுவப்படும் நாளில், கோதண்டராமர் கோயில் வளாகம் கடுமையான அடக்குமுறை உணர்வை வெளிப்படுத்துவதாகவும் தன் மனதின் வன்மத்தைப் பதிவிட்டுள்ளார்.

காமாலைக் கண்களுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்களே அந்த நிலையில்தான் இருக்கிறார், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் கொஞ்சமும் அறியாமல் தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பில் உள்ள மதிப்பிற்குரிய ஆர்.என்.ரவி அவர்கள். அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில் அர்ச்சகர்களே, எவ்வித பயத்திற்கோ அடக்குமுறை உணர்வுக்கோ இடமில்லை என்று தெரிவித்துள்ள நிலையில், ஆளுநர் அலறுவதற்குக் காரணம் அரசியலன்றி வேறென்ன இருக்க முடியும்!

தமிழ்நாட்டில் எந்தக் கோயிலிலும் பக்தர்கள் வழிபாடு நடத்தலாம். தைப்பூச நாளில் முருகன் திருக்கோயில்களிலும், சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும்போதும், திருவாரூர் ஆழித்தேரோட்டத்தின்போதும், கும்பகோணம் மகாமகம் திருவிழாவிலும், மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயில் அறுபத்து மூவர் திருவீதியுலாவிலும் ஆயிரமாயிரம் பக்தர்கள் உண்மையான பக்தியுடன் பங்கேற்பதையும், அவர்களுக்கு பிற மதத்தினரும் ஒத்துழைப்பு அளிப்பதையும் சமூகநீதிக் கொள்கை அடிப்படையிலான மதநல்லிணக்க நிலமாகிய தமிழ்நாட்டில் காணமுடியும். பா.ஜ.க. தன் தோளில் சுமக்கும் அயோத்தி இராமர் கோயில் அரசியலை, அமைதியான  கோதண்டராமர் திருக்கோயிலில் போய் ஆளுநர் தேடியிருக்கிறார் என்றால் அவரிடம் இருப்பது பக்தியா, பகல் வேடமா?

தமிழ்நாட்டின் உண்மையான பக்தர்கள், பக்தியை தங்களின் தனிப்பட்ட உரிமையாக, அகமகிழ்வாக, ஆன்மத் தேடலாகக் கொண்டவர்கள். அவர்கள் பெருமானையும் வழிபாடுவார்கள். பெரியாரின் தத்துவங்களையும் போற்றுவார்கள். பிற மதத்தினரையும் மதித்து நடப்பார்கள். இந்த அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் நோக்கில் பா.ஜ.க.வில் பல நிலைகளில் பொறுப்பு வகிப்பவர்களும் செயல்படுகிறார்கள். தலையில் குட்டு வைப்பதுபோல உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருப்பதை வரவேற்போம்.

சேலத்தில் நடந்த கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டின் மகத்தான வெற்றி கண்டு அலறுகின்ற கழகத்தின் அரசியல் எதிரிகளும், தமிழ்நாட்டின் நிரந்தர எதிரிகளும் வதந்திகளைப் பரப்பி திசைதிருப்ப நினைத்தாலும், கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும், வில்லில் தொடுக்கப்பட்ட கணை தனது இலக்கை மட்டுமே குறி வைப்பதுபோல செயல்படவேண்டும். மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள், பல்வேறு தலைப்புகளில் நடந்த சொற்பொழிவுகளில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளை முன்னெடுத்து, நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் மதவெறி பாசிச சக்திகளை முறியடிக்கும் பணியில் முனைப்பாகச் செயல்படுங்கள். நம் திராவிட மாடல் கொள்கையை இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்வோம். நாடாளுமன்றத் தேர்தலில் வெல்வோம்!” என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Breaking News LIVE: மருத்துவ கழிவுகள் விவகாரம்; தமிழகம் வந்தது கேரள குழு
Breaking News LIVE: மருத்துவ கழிவுகள் விவகாரம்; தமிழகம் வந்தது கேரள குழு
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
Embed widget