Stalin: தோழி விடுதிகளை அறிவித்த ஸ்டாலின்: மகளிர் தினத்தில் குட் நியூஸ் சொன்ன முதல்வர்...
Stalin- Thozhi Hostel: ரூ. 72 கோடி மதிப்பில் 700 படுக்கைகளுடன் கூடிய தங்கும் வகையில் தோழி விடுதிகள் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

காஞ்சிபுரம், ஈரோடு, தருமபுரி, சிவகங்கை, கடலூர், நாகை ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் ரூ. 72 கோடியில் 700 படுக்கைகளுடன் கூடிய தங்கும் வகையில் தோழி விடுதிகள் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
”பெண்கள் இல்லாமல் நாங்கள் இல்லை”
தமிழ்நாடு அரசின் மகளிர் நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, உலக மகளிர் தினத்தை ஒட்டி, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பிங்க் ஆட்டோ திட்டத்தை தொடங்கி வைத்தார். அவர் பேசிய்தாவது, “ பெண்கள் நமக்காகத் தியாகம் செய்ய பிறக்கவில்லை. ஆணாதிக்க மனோபாவம் மறைய வேண்டும்.
பெண்கள் இல்லாமல் நாங்கள் இல்லை என்பதை உணர்ந்த நாங்கள். திராவிட இயக்கத்தின் நோக்கமே , ரத்த பேதமே இல்லை, பாலின பேதம் இல்லை என்பதுதான். பெண்களை அடிமையாக்க நினைக்கும் எண்ணம் ஒழிந்தால்தான் முன்னேற்றம். திராவிட ஆட்சி காலத்தில்தான் பெண்களுக்கான உரிமைகள் மீட்டு தரப்பட்டுள்ளன.
தோழிகள் விடுதி:
பெண்களின் அதிக பணிப் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் பணிபுரியும் பெண்களுக்காகக் குறைந்த கட்டணத்தில் பிரத்யேக மகளிர் விடுதிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டன. தற்போது சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, வேலூர், தஞ்சாவூர், பெரம்பலூர் , திருநெல்வேலி, சேலம், திருச்சி ஆகிய பகுதிகளில் தோழி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
பெண்கள், இந்த விடுதிகளில் 15 நாட்களுக்குக் குறுகிய காலமாகவும் தங்கிக் கொள்ளலாம். வாடகையோடு, திரும்பப் பெற முடியும் பாதுகாப்புக் கட்டணத்தைச் செலுத்தி, ஒரு நாள் வேண்டுமானாலும் தங்கலாம். இருவர் தங்கும் அறையில், கூடுதல் கட்டணம் செலுத்தி தனியாகவும் தங்கிக் கொள்ளலாம். இந்த விவரங்கள் அனைத்தும் https://www.tnwwhcl.in/ என்ற இணையதளத்தில் விவரமாக வழங்கப்பட்டுள்ளன.
கட்டணம்:
ஏற்கனவே இருக்கும் தோழி விடுதிகளில் தனி அறைகள் உள்ளன. அதேபோல இரண்டு பேர், நான்கு பேர், 6 பேருடன் பகிர்ந்து வசிக்கும் அறைகளும் உள்ளன. அடையாறு தோழி விடுதியில் ஏசி அல்லாத தனி அறைக்கு மாதம் 6,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரண்டு பேர் பகிர்ந்துகொள்ளும் அறைக்கு 5,500 ரூபாயும் 4 பேர் இருக்கும் அறைக்கு 4,500 ரூபாயும் மாதக் கட்டணம். 6 பேர் வசிக்கும் அறைக்கு மாதம் 4 ஆயிரம் ரூபாய் கட்டணம் ஆகும். இவை அனைத்துமே அடுக்குக் கட்டில்களாக இல்லாமல், தனித்தனிக் கட்டில்களாகவே அமைக்கப்பட்டுள்ளன. வாஷிங் மெஷின், ஏ.சி., ஆர்.ஓ. தண்ணீர் வசதி, ஃப்ரிட்ஜ், இலவச வை- ஃபை வசதி, உணவு, தொலைக்காட்சி, 24 மணிநேர பாதுகாப்பு, பார்க்கிங், எனப் என பல வசதிகள் தோழி விடுதிகளில் உள்ளன. அதேபோல அயர்னிங், கெய்சர் வசதியும் இங்கு உண்டு.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள விடுதிகளிலும், கட்டணமானது இதே அளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















