’மு.க.ஸ்டாலின்’ தமிழர்களிடமிருந்து அரசியல் அதிகாரங்கள் பறிக்கப்படும் சூழலில் முதல்வராக பதவியேற்றியிருக்கிறார்..!
மாநிலங்களின் அதிகாரமே கேள்விக்குறியாக ஆக்கப்படுகிற நேரத்தில் ஒரு முதல்வர் இவற்றையெல்லாம் செய்வதற்கு அசாத்தியமான துணிச்சல் வேண்டும் !
தமிழ்நாட்டின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களைப் பற்றி ஒரே வரியில் சொல்லவேண்டுமானால், அவர் காலம் நமக்களித்த காவல் அரண் என்று சொல்லிவிடமுடியும். ஒரு நூற்றாண்டு காலம் நமது முன்னோடிகள் வென்றெடுத்துக் கொடுத்த அரசியல் அதிகாரங்கள் எல்லாம் நம்மிடமிருந்து வலுக்கட்டாயமாக பறிக்கப்படும் ஒரு காலத்தில், அவர் பொறுப்பேற்றிருக்கிறார். உரிமைகள் பறிபோவதைத் தடுக்க முடியாமல் போனது மட்டுமல்ல, தாம்பாளத் தட்டில் வைத்து அவற்றைத் தாரைவார்த்த “தலைவர்களின்” ஆட்சிக்குப் பிறகு, அவர் பொறுப்பேற்றிருக்கிறார்.
ஒரே நேரத்தில் உலகளாவிய வைரஸ் ஒன்றையும் உள்ளூர் வைரஸ்கள் சிலவற்றையும் எதிர்கொண்ட இன்றைய முதலமைச்சர், தமிழ்நாட்டின் முகமாகவே இன்று உலகறியப்படுகிறார். இந்தியாவின் தலைவர்களால் செய்யமுடியாததை தமிழ்நாட்டின் தலைவர் செய்துமுடிக்கிறார் என்று உலகப்புகழ் பெற்ற எகானமிஸ்ட் இதழ் கூறியபோது, அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்று நெடுங்காலம் ஆகிவிடவில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திட்டம் அறிவிக்கப்படுவதை மக்கள் பார்க்கிறார்கள். தலைமைச் செயலகத்தில் புதிய உற்சாகமும் வேகமும் உருவாகியிருப்பதைப் பத்திரிகையாளர்கள் சொல்கிறார்கள். காலம்காலமாக திராவிட எதிர்ப்பில் ஊறிப்போன ஒரு சிலர் கூட, தப்பித்தோம் என்று பெருமூச்சுவிடுகிறார்கள். எல்லாம் முடிந்துவிட்டது என்று சோர்ந்து போனவர்கள் நிமிர்ந்து உட்காட்கார்ந்திருக்கிறார்கள்.
என்ன மாயமந்திரத்தைச் செய்துவிட்டார் ஸ்டாலின்? வேறொன்றுமில்லை. ஒரு குடும்பத்தின் தலைவர் அல்லது முதலுதவி செய்ய வரும் ஒரு மருத்துவர் என்ன செய்வார்களோ அதைத்தான் செய்தார் அவர். நம்பிக்கையை அவர் அளித்திருக்கிறார். தேர்தல் பரப்புரையின்போது தமிழ்நாடு முழுக்க ஒலித்த ஒரு பாடல் - ஸ்டாலின்தான் வறாரு, விடியல்தரப் போறாரு என்பது. அந்த நம்பிக்கையைப் பொய்யாக்காத வகையில் ஒரு புதிய படையோடு முதலமைச்சர் களமிறங்கியிருக்கிறார் என்பதை மக்கள் கண்கூடாகப் பார்த்தார்கள். ஒரு புறம் கட்சியின் மூத்த தலைவர்கள் அமைச்சர்களாக ஆனார்கள், மறுபுறும் புதிய முகங்கள் பல பொறுப்புகளை ஏற்றன. அனுபவம் மிக்கவர்கள், இளையவர்கள், அறிவுத்திறமை படைத்தவர்கள் செயல்வீரர்கள் எனத் தேர்ந்தெடுத்து அவர் அமைத்த அமைச்சரவையே காலம் மாறிக்கொண்டிருக்கிறது என்பதைக் காட்டியது. அதைப் போலவே அவர் தனக்கெனத் தேர்ந்தெடுத்த அதிகாரவர்க்கப்படையும் உற்சாகத்தை ஊட்டியது.
ஒரு பக்கம் கொரானாவுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த அதே நேரத்தில், மறுபக்கம் ஆகவேண்டிய பல முக்கியப் பணிகளையும் அவர் தொடங்கிவைத்தார். அதில் இரண்டு முக்கிய நகர்வுகளை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறுகிற போராட்டம் முதலாவது. சீரழிந்து போயிருக்கும் தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அவர் வகுத்திருக்கும் உத்தி இரண்டாவது. இந்த நகர்வுகளைப் பற்றி நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இந்த நகர்வுகளுக்குப் பின்னுள்ள அசையாத கொள்கைகளைப் பற்றி நாம் அதிகம் தெரிந்து வைத்திருக்கவில்லை.
நீட் விவகாரத்தில் நீதியரசர் ஏ கே ராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்தது ஒரு சரியான முடிவாகும். மாநில அரசுக்குள்ள உரிமையை மதிக்காமல் ஒன்றிய அரசு ஒரு முடிவை எடுக்கும்போது, அது அரசியல்சாசனச் சிக்கலாக மாறுகிறது. அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் பம்மிக் கொண்டிருந்தார்கள். ஒரு திட்டத்தை எதிர்க்கும்போது அதை எதிர்க்க வெறுமனே சட்டசபை தீர்மானங்கள் அல்லது மசோதாக்கள் மட்டும் போதாது. மாறாக எதிர்ப்பதற்கானக் காரணத்தை புள்ளிவிவர அடிப்படையில், சான்றுகளோடு, சட்ட நுணுக்கங்களோடு முன்வைக்க வேண்டும். அதைத்தான் இன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் செய்திருக்கிறார். ஒரு முன்னாள் நீதியரசர் தலைமையில், அதுவும் நீட் விவகாரத்தில் ஒரு திராவிட அரசு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து வழிகாட்டக்கூடிய அறிவும் நோக்கமும் உள்ள ஒருவரின் தலைமையில், ஒரு குழுவை அமைத்து அவர் அதைச் செய்திருக்கிறார். இனி இதன் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது மற்றுமொரு போராட்டத்துக்கான களமாக மாறலாம். ஆனால் ஒன்றிய அரசின் முன்பு தமிழ்நாட்டரசு வைக்கப்போகும் வாதங்களுக்கு ராஜன் குழுவின் ஆதாரங்கள் வலுவாக இருக்கும். அல்லது, புதிய உத்திகளை அமைக்க அது வழிவகுக்கும். இப்படித்தான் ஒரு பெரிய பிரச்சினையைக் கையாளவேண்டும். அதுதான் அனுபவம் மிக்க ஒரு தலைவருக்கு அழகு. அதைத்தான் முதலமைச்சர் செய்கிறார்.
பொருளாதார விவகாரத்தை எடுத்துக்கொள்வோம். ஒரு கிரிக்கெட் ஆட்டத்தின் தொடக்க ஓவர்களிலேயே அடுத்தடுத்து மூன்று சிக்ஸர் அடித்திருக்கிறார் ஸ்டாலின். முதலாவதாக, திரு பிடிஆர் பழநிவேல் தியாகராஜன் நிதி அமைச்சராக ஆக்கப்பட்டார். அவர் திராவிட இயக்க. பாரம்பரியத்தைச் சார்ந்தவர் என்பது நமக்கெல்லாம் பெருமை என்பது ஒரு புறமிருக்க. தன் பொருளாதார அறிவாலும் நிதித்துறை அனுபவத்தாலும் கூர்மையான வார்த்தைகளாலும் ஏற்கனவே தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக்கொண்டவர் என்பது முக்கியம். (அவர் வாயைத் திறந்த பிறகுதான் தமிழ்நாட்டில் பல ஜந்துக்கள் வாயை மூடிக்கொண்டன). அதிமுக ஆட்சியாளர்கள் ஐந்து லட்சம் கோடி கடனுக்குள் சிக்கியிருக்கும் தமிழ்நாட்டை மீட்கும் உத்தியில் முதல்முடிவே சிறப்பாக இருந்தது. ஜிஎஸ்டி கூட்டத்தில் பிடிஆர் முன்வைத்த வாதங்களின் காரணமாக, அவரை இந்தியாவே தலைநிமிர்ந்து பார்த்தது! அவரது பட்ஜெட்டுக்காக இப்போது காத்துக்கொண்டிருக்கிறோம்.
இரண்டாவதாக, பேராசிரியர் ஜெயரஞ்சன் தலைமையிலான மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு. பொறுப்பாகவும் உத்திபூர்வமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவை அமைத்ததும் மிக முக்கியமான நடவடிக்கைதான். வளர்ச்சி என்பது மக்களுக்கானது, மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதே தொழில்துறை மேம்பாடு என்பதுதான் திராவிட மாடல். ஏதோ நாலு அம்பானிகள் அதானிகள் உலகின் முதல் பத்துப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெறுவதற்காக அவர்களுக்கு அடிபணிந்து வேலைசெய்வதல்ல அரசின் கடமை என்பதுதான் திராவிட மாடல். சமூகத்தின் அடிமட்டத்தில் இருப்பவர்கள் ஓரிரு தலைமுறைகளில் சமூகத்தின் மேல்மட்டத்துக்கு வருவதற்கு என்னவெல்லாம் ஒரு அரசாங்கம் செய்யமுடியுமோ அதைச் செய்வதுதான் திராவிடத்தின் பொருளாதார முன்மாதிரி. அதை நன்கு அறிந்தவர் பேராசிரியர் ஜெயரஞ்சன்.
நூற்றுக்கு எண்பது மதிப்பெண் எடுத்த ஒருவரிடம் சென்று, உனக்குத் தெரியுமா நான் பாஸ் மார்க் வாங்கிவிட்டேன் என்று ஒருவன் கித்தாப்பு பேசினால் அது எவ்வளவு நகைச்சுவையோ, அவ்வளவு நகைச்சுவைதான் தமிழ்நாட்டுக்கு வந்து குஜராத் மாடலைப் பற்றிப் பேசுவது. அப்படிப் பேசிய “ பொருளாதார மேதைகளை” சின்னத்திரைகள் தோறும் வறுத்தெடுத்தவர் ஜெயரஞ்சன். உண்மையில் சங்கிகளின் மாயவலையில் தமிழ்நாடு சிக்காமல் போனதற்கு ஜெயரஞ்சன் போன்றோரின் பணி மிகப்பெரியது. ஆனால் அவர் பேச்சாளர் மட்டுமல்ல, சீரிய ஆய்வாளர். கொள்கை வகுக்கத் தெரிந்த அனுபவசாலி. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அவரது தலைமையிலான குழு சிறப்பாக பங்களிக்கும் என நம்பலாம்.
மூன்றாவதாக, முதலமைச்சருக்கென உருவாக்கப்பட்ட பொருளாதார ஆலோசகர்கள் குழு. நோபல் விருது வென்றவரான பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்ளோ, முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநரும் பொருளாதார மேதையுமான ரகுராம் ராஜன், வளர்ச்சிப் பொருளாதார அறிஞர் ஜீன் டிரெஸ், பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியம், முன்னாள் நிதி செயலரும் திராவிட ஆட்சிக்காலம் பற்றி நூலெழுதியிருப்பவருமான நாராயணன் ஆகியோர் முதலமைச்சருக்கான ஆலோசனைக் குழுவாக நியமிக்கப்பட்டவர்கள்.
இந்தக் குழு அமைக்கப்பட்டதே பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது. எதற்காக பல குழுக்கள், எதற்காக அதில் பல உறுப்பினர்கள் என்பதைப் பற்றி டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து யோசித்தால் பதில் கிடைக்காது.ரகுராம் ராஜன், எஸ்தர், ஜீன் ஆகிய மூவரும் மக்கள் சார்ந்து சிந்திக்கும் பொருளாதார நிபுணர்களாக உலகறியப்பட்டவர்கள். சொல்லப்போனால் அவர்கள் பொருளாதார திராவிட ஸ்டாக்குகள்! மூவரும் தமிழ்நாட்டோடு பொருளாதாரம் சார்ந்து தொடர்புடையவர்கள். எஸ்தரும் ஜீனும் தமிழ்நாட்டுப் பொருளாதார மாடலை ஆராய்ந்தவர்கள் என்றால், ரகுராம் ராஜனுக்கு பூர்வீகமே தமிழ்நாடுதான். அத்துடன் இன்றைய நியோ-லிபரல் பொருளாதார மாடலை கடுமையாக விமர்சிப்பவர் ராஜன். எஸ். நாராயணன் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற மக்கள் நலத் திட்டங்கள் பற்றி ஒரு நிதி அதிகாரியின் அனுபவங்களாகப் பதிவுசெய்தவர். அரவிந்த் சுப்பிரமணியம் பிரதமர் மோடிக்கு ஆலோசகராக இருந்து பிறகு வெளியேற்றப்பட்டவர். இப்படிப்பட்ட நிபுணர்கள் நமது முதலமைச்சருக்கு என்ன அறிவுரை சொல்வார்கள்?
தமிழ்நாட்டின் தனித்துவம் மிக்க சமூக நீதிப் பொருளாதாரத்தை மேம்படுத்த, அதை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச்செல்ல, 21 ஆம் நூற்றாண்டுக்கு தமிழ்நாட்டைத் தயார்ப்படுத்த அவர்களால் முதலமைச்சருக்கு வழிகாட்ட முடியும். பணத்தோட்டம் என்கிற சின்னஞ்சிறிய காதிக வடிவிலான அணுகுண்டில் அண்ணா எவற்றை வெடிமருந்தாகப் பொதிந்து வைத்திருந்தாரோ அது இன்னும் வெடிக்கவில்லை என்பதை இன்றைய முதலமைச்சர் நன்கு அறிந்திருக்கிறார். எனவேதான் தமிழ்நாட்டின் சமூகநீதி இயல்புக்கு பொருந்திய பொருளாதாரக் குழுக்களை அறிவிக்கிறார். சீனாவில் டெங் ஷியாவ்ப்பிங்கின் பொருளாதாரச் சீர்த்திருத்தங்களை Socialism with Chinese characteristics என்பார்கள். சீன இயல்புகளுடன் கூடிய சோசலிசம். நாம் இப்போது காண்பது திராவிட இயல்புகளுடன் கூடிய வளர்ச்சிப் பொருளாதாரம் (Development economics with Dravidian characteristics)!
ஒடு நெடுநோக்குப் பார்வை இல்லாமல் இதையெல்லாம் ஒரு முதலமைச்சரால் செய்யமுடியாது. மாநிலங்களின் அதிகாரமே கேள்விக்குறியாக ஆக்கப்படுகிற நேரத்தில் ஒரு முதல்வர் இவற்றையெல்லாம் செய்வதற்கு அசாத்தியமான துணிச்சலும் வேண்டும். தமிழ்நாட்டின் முதலமைச்சர் தன் வழியை நன்கு அறிந்திருக்கிறார் என்பதுதான் நமக்கெல்லாம் ஆறுதலை அளிக்கிறது. இங்கே ஒன்றைச் சுட்டிக்காட்டவேண்டும். அறிவுடையோன் வழியில் அரசும் செல்லும் என்பது சங்கத்தமிழ். நான்கு வர்ணங்களின் அடிப்படையில் சமூகம் இருப்பதாகச் சொன்னாலும் அதில் இந்த வர்ணம்தான் உயர்ந்தது என்று வேதம் சொன்னாலும், அந்த நான்கு பேரில் யார் உண்மையான அறிவாளியோ அவன் வழியில்தான் என் அரசாங்கம் செல்லும் என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அடித்துப் பேசினான் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்கிற பாண்டிய மன்னன்.
நவீன காலத்தில் தமிழ்மக்களுக்கான அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்கும் கொள்கையை முன்னிறுத்தி, வியூகம் வகுத்து வென்று 1967 இல் திராவிட முன்னேற்றக்கழகத்தை ஆட்சியில் அமர்த்திய பேரறிஞர் அண்ணாவின் வழியில்தான் அதன் பிறகு திமுக ஆட்சிகள் சென்றன. அண்ணாவின் சுட்டுவிரல் காட்டிய திசையில் தமிழ்நாட்டை இயக்கிச்சென்றவர் தலைவர் கலைஞர். அண்ணாவின் அரசியலை, கொள்கைகளாக ஆக்கி, அதன் வழி திட்டங்களை உருவாக்கினார் கலைஞர். அவரது அமைச்சரவையில் அதற்கான அனுபவங்களைப் பெற்றவர் தளபதி. அண்ணாவும் கலைஞரும் பொறுப்புடன் அமர்ந்த நாற்காலியில் இப்போது தளபதி அமர்ந்திருக்கிறார்.
அண்ணாவின் அரசியல் வாரிசாக கலைஞரின் கொள்கை வாரிசாக நான் இருப்பேன் என்று முதலமைச்சர் கூறிய அந்த வார்த்தைகளை எண்ணிப் பார்க்கிறேன். அது “எகனை மொகனையாகச்” சொன்ன வார்த்தைகள் அல்ல என்பதை அவர் நிரூபித்து வருவதையும் பார்க்கிறேன். எவ்வளவு ஆழமான வார்த்தைகள் அவை! அந்தச் சொற்கள் உயிர்பெற்றுலவும் காலத்தில் நாம் மீண்டும் தலைநிமிர்ந்து நடப்போம்.
(குறிப்பு : இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் முழுக்க முழுக்க கட்டுரையாளருடையதே)