தவெக - வில் கோஷ்டி மோதல் ; மாவட்ட செயலாளர் Vs மகளிர் அணி, பதவி மோதலில் காவல் நிலையத்தில் புகார்
தவெக மாவட்ட செயலாளர் மற்றும் மகளிர் அணி இணை அமைப்பாளர் இடையே கோஷ்டி மோதல். இருதரப்பிலும் காவல் நிலையத்தில் புகார்

" வெயிட் பண்ணுங்க " என காத்திருக்க வைத்ததாக புகார்
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் கஸ்தூரி பாய் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பல்லவி ( வயது 35 ) இவர் தமிழக வெற்றி கழகத்தில் சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். இதே போன்று புளியந்தோப்பு பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் கலைச் செல்வி ( வயது 44 ) இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் சென்னை வடக்கு மாவட்ட மகளிர் அணி இணை அமைப்பாளராக இருந்து வருகிறார்.
கலைச் செல்வி என்பவர் தன்னுடன் சில கட்சி உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு மாவட்ட செயலாளர் பல்லவி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பல்லவியை பார்க்க வேண்டும் என்னுடன் வந்துள்ள நிர்வாகிகளுக்கு கட்சியில் பொறுப்பு வேண்டும் என கலைச் செல்வி கூறியுள்ளார். அப்போது வீட்டில் இருந்த பல்லவி அவர்களை " வெயிட்பண்ண சொல்லுங்க " என்று கூறி இரவு 10 மணி வரை வெளியே வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இரு தரப்புக்கும் இடையே மோதல்
சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்த கலைச் செல்வி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சத்தம் போட்டு உள்ளனர். அப்போது அங்கு வந்த பல்லவி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும் கலைச் செல்வி மற்றும் இவரது ஆதரவாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டுள்ளனர்.
அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்தனர். இரு தரப்பிலும் இது குறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரு புகார்கள் மீதும் புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கலைச் செல்விக்கு அமைப்பாளர் பதவியும் , கலைச் செல்வியின் தோழி அஸ்வினிக்கு துணை அமைப்பாளர் பதவியும் வழங்குமாறு கலைச்செல்வி பல்லவியிடம் வலியுறுத்தி வந்ததாகவும் , ஆனால் அஸ்வினியின் கணவர் திமுகவில் பொறுப்பில் உள்ளதாகவும் அவர் த.வெ.க வில் குழப்பம் விளைவிக்க கலைச்செல்வியையும் அஸ்வினியையும் இயக்குவதாக பல்லவி சந்தேகம்படுவதால் அவர்களுக்கு அவர்கள் கேட்கும் பொறுப்பு அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும் இதனால் தான் கலைச் செல்வி பிரச்சனை ஏற்படுத்தியதாக பல்லவி தரப்பில் கூறப்படுகிறது.
விசாரணைக்கு பின்பு , காவல் துறையினர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.





















