234 தொகுதிகளை சரியாக குறிவைக்கும் விஜய்.. இன்று பொறுப்பாளர்களுடன் சந்திப்பு.. அவசர ஆலோசனை ஏன்?
சென்னை பனையூரில் இன்று மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்த திரைப்படம் ’லியோ’. இந்த திரைப்படத்தில் திரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் என ஏகப்பட்ட திரைபிரபலங்கள் நடித்து வருகின்றன.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரிக்க, ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். வருகின்ற அக்டோபர் 19ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்த நிலையில், படத்தின் பாடல்கள் இரண்டு வெளியாகி தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.
இந்தநிலையில் லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேற்று நடிகர் விஜயின் காட்சிகள் நிறைவடைந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அந்த ட்வீட்டில், “விஜய்யின் காட்சிகள் நிறைவடைந்தன. இந்த இரண்டாவது பயணத்தை மீண்டும் சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி!” என்றார்.
இப்படியான ஒரு சூழலில் சமீபத்தில்தான் நடிகர் விஜயின் காட்சிகள் நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதற்காக இந்த திடீர் ஆலோசனை கூட்டம், 234 தொகுதிகளில் உள்ள முக்கிய நபர்களுக்கு மட்டுமே அழைப்பு ஏன் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து நிலவி வருகிறது. சமீப காலமாக நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக தகவல்கள் வெளிவருகின்றன. அதற்கு ஏற்றாற்போல கடந்த ஜூன் 17ம் தேதி கடந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த 234 தொகுதி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார்.
தொடர்ந்து படம் முடிந்த கையோடு 234 தொகுதி பொறுப்பாளர்களை இன்று நடிகர் விஜய் சந்திப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பானது இன்று காலை 9 மணிக்கு பனையூரில் உள்ள விஜய்யின் இல்லத்தில் நடைபெறுகிறது என்றும், 234 தொகுதி பொறுப்பாளர்களை சந்தித்து போட்டோஷூட் நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
234 தொகுதிகளை சரியாக குறிவைக்கும் விஜய்:
கடந்த சில மாதங்களாகவே அரசியல் பாதையை முன்னெடுக்கும் நடிகர் விஜய், சரியாக 234 சட்டமன்ற தொகுதிகளை குறிவைக்கிறார். உதாரணத்திற்கு உலக பட்டினி தினத்தன்று 234 தொகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கு தங்களது விஜய் மக்கள் இயக்கத்தினர் மூலம் மதிய உணவினை வழங்கினார். தொடர்ந்து, 234 தொகுதிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கௌரவம் செய்தல், இன்று 234 தொகுதிகளை சார்ந்த பொறுப்பாளர்களை சந்தித்தல் என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.