மத்திய அரசின் பட்ஜெட் கார்ப்பரேட் நலனுக்கானதே தவிர மக்கள் நலனுக்கானது அல்ல - ஜி.ராமகிருஷ்ணன்
தமிழக முதல்வர் பிறந்த நாள் கூட்டத்துக்கு பீகார் துணை முதல்வர் வந்ததால் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பீகார் சட்டப்பேரவையில் பாஜக கூச்சல், குழப்பம் செய்தனர் என ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு பார்லிமென்ட் கமிட்டி அமைக்க மறுப்பது அதானியை பாதுகாக்கும் முயற்சி என்றும், ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்தவர்களின் குடும்பத்தை அழைத்துப் பேசாமல், ஆன்லைன் சூதாட்டத்தை நடத்துபவர்களை ராஜ்பவனுக்கு அழைத்து ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்தி மசோதாவை கையெழுத்திடாமல் திருப்பி அனுப்புகிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு:-

மயிலாடுதுறையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, துறைவாரி நிதி ஒதுக்கீடு தொடர்பான கூட்டத்தில் அதானி மோசடி குறித்து ஜாயிண்ட் பார்லிமென்ட் கமிட்டி அமைத்து விசாரிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், மத்திய அரசு அதற்கு மறுப்பது அதானியை பாதுகாப்பதற்கான முயற்சி ஆகும்.

பாஜக ஆளாத மாநிலங்களில் அரசை கவிழ்க்கவும், சீர்குலைக்கவும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை ஆளுநர் மூலம் மேற்கொள்கிறது. தமிழக ஆளுநர் இதுவரை 21 மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அவசர சட்டத்தில் கையெழுத்திட்டாமல் தமிழக ஆளுநர் அதன் மசோதாவை திருப்பி அனுப்பி உள்ளார். இரண்டு ஆண்டில் 44 பேர் ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால், ஆளுநருக்கு அதைப் பற்றி கவலை இல்லை. ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்தவர்களின் குடும்பத்தை அழைத்துப் பேசாமல், ஆன்லைன் சூதாட்டத்தை நடத்துபவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி மசோதாவை கையெழுத்திடாமல் திருப்பி அனுப்புகிறார்.

திருச்சி குமர வயலூர் முருகன் கோயிலில் பிராமணர் அல்லாத இரண்டு அர்ச்சகர்களை தமிழக அரசு நியமனம் செய்தது. இதனை ஆகமத்துக்கு எதிரானது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ரத்து செய்துள்ளார். இதனை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். சுங்கச்சாவடி கட்டணம் 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள 32 காலாவதியான டோல்கேட்டில் பணம் வசூல் செய்யப்படுவதை உடனடியாக மூட வேண்டும்.

மத்திய அரசின் பட்ஜெட் கார்ப்பரேட் நலனுக்கானதே தவிர மக்கள் நலனுக்கானது அல்ல. அது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கானது. உரம் மானியம் மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்துக்கான மானியத்தை பாதியாக குறைத்துள்ளனர். மேலும், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கான மானியங்களும் குறைக்கப்பட்டுள்ளன. இந்தியா ஜனநாயகத்தின் தாய் என பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் பேசியுள்ளார். இதனை அவர் பேசியுள்ளது வேடிக்கையாக உள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநில அரசுகளை கவிழ்ப்பது, சீர்குலைப்பது என ஜனநாயகத்துக்கு விரோதமாக மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதற்கு சி.பி.ஐ, அமலக்காத்துறை போன்ற நிறுவனங்களை பயன்படுத்தி வருகிறது.

தமிழக முதல்வர் பிறந்த நாள் கூட்டத்துக்கு பீகார் துணை முதல்வர் வந்தார் என்பதற்காகவே வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக பீகார் சட்டப்பேரவையில் பாஜகவினர் கூச்சல், குழப்பம் செய்தனர். பாஜகவை சேர்ந்தவர்கள் எப்படியெல்லாம் பொய் சொல்வார்கள் என்பதற்கான சிறந்த உதாரணம் இது. இரு மாநில மக்களிடையே மோதலை உருவாக்கும் வகையிலான மோசமான நடவடிக்கை இது என்றார். அப்போது, கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் துரைராஜ், ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.





















