ADMK vs BJP: ”வருங்கால முதல்வரே” காலரை தூக்கும் நயினார் எடப்பாடியை சீண்டும் பாஜக
NDA Alliance: அதிமுக - பாஜக இடையே சலசலப்பு ஏற்ப்பட்டுள்ள சூழலில் தான் பாஜகவின் புதிய தலைவர் நயினார் நாகேந்திரனை குறிப்பிட்டு “வருங்கால முதல்வரே” என்று போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக - பாஜக கூட்டணியில் 2026-ல் கூட்டணி ஆட்சி அமையுமா என்று விவாதம் அக்கூட்டணிக்குள் புயலை கிளப்பியுள்ள நிலையில், நயினார் நாகேந்திரனை வருங்கால முதல்வரே என குறிப்பிட்டு பாஜகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களை இப்போதே கட்சிகள் தொடங்கி விட்டன. அதன்படி, ஆளும் திமுக தங்களது கூட்டணியில் உறுதியாக இருக்கிறது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி தொடர்பாக இன்னும் எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. அதே நேரம் பல்வேறு குழப்பங்களுக்கு இடையே அதிமுக - பாஜக கூட்டணியும் உறுதிசெய்யப்பட்டுவிட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை வந்த அமித்ஷா அதிமுக-பாஜக கூட்டணி அமைத்து 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்றும் தெரிவித்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ கூட்டணி ஆட்சி இல்லை என்றும் பாஜக உடன் கூட்டணி மட்டுமே என்றும் கூட்டணி ஆட்சி கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
இது அதிமுக - பாஜக கூட்டணிக்குல் விவாதத்தை கிளப்பிய நிலையில் நேற்று முன் தினம்(16.04.25) பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “கூட்டணியை பற்றி பேசியது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தான். எனவே, தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா என்பது குறித்து, அந்த நேரத்தில், அமித் ஷா முடிவெடுப்பார். அது பற்றி என்னால் கருத்து கூற முடியாது” என்று சொன்னார். இதனிடையே அதிமுக எம்.பி தம்பிதுரையும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்ததில்லை. 2026-ல் இபிஎஸ் தனியாகத்தான் ஆட்சி அமைப்பார் என்று கூறினார்.
கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக அதிமுக - பாஜக இடையே சலசலப்பு ஏற்ப்பட்டுள்ள சூழலில் தான் பாஜகவின் புதிய தலைவர் நயினார் நாகேந்திரனை குறிப்பிட்டு “வருங்கால முதல்வரே” என்று போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் செட்டிக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் என்பவர் ஓட்டிய போஸ்டர் தான் இந்த சலசலப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது.