Udhayanithi Stalin: முதலமைச்சர் புகைப்படத்தை இழிவுபடுத்தும் விதமாக பா.ஜ.க.வினர் நடந்தது கண்டிக்கத்தக்கது - அமைச்சர் உதயநிதி
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கொள்கையில் இருக்கிறது. அதை நாம் மாநிலத்தில், அந்த மாநிலத்தின் கொள்கையை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று கூற முடியாது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி மாநில மாநாடு வருகின்ற டிசம்பர் 17ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக இளைஞரணி மாநில மாநாடு வெற்றி மாநாடாகவும், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் நடைபெறாத அளவிற்கு மிகப் பிரமாண்டமாக நடத்தி காட்டுவோம் என்று கூறினார். இந்த மாநாட்டில் திராவிட இயக்கத்தின் கொள்கைகள், வரலாறு உள்ளிட்டவைகள் இளைஞர்களுக்கு சொல்லப்படும். குறிப்பாக திமுகவின் சாதனைகள் திட்டங்கள் இளைஞர்களுக்கு சொல்லும் வகையில் மாநாடு அமையும். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளிவந்தது உட்கட்சி தகராறு. இதனை காமெடியாக தான் பார்க்கிறேன். நாளைக்கு மீண்டும் மோடி, அமித்ஷா அழைத்தால் சென்றுவிடுவார்கள் என்றார்.
திசை திருப்ப முயற்சி:
மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டெல்லிக்கு நேரடியாக செல்லாமல் குறுக்குவழியில் யாருக்கும் தெரியாமல் சென்றனர். இதனை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள், மக்களுக்கு நன்றாக தெரியும் என்றும் கூறினார். பாஜக அலுவலகத்தில் சோதனை நடந்தபோது தலைமையிலிருந்து அழைப்பு வந்தவுடன், அமலாக்கத்துறை அதிகாரிகள் உடனே புறப்பட்டு சென்றுவிட்டார்களாம் என்றும் கூறினார்.
சிஏஜி ரிப்போர்ட்டின்படி, பாஜக 7.50 லட்சம் கோடி ரூபாய் எங்கு சென்றது என்று தெரியவில்லை. அதற்கான கணக்குகள் ஒப்படைக்கப்படவில்லை. ஒரு கிலோ மீட்டர் தூரம் சாலை செல்வதாக கூறி, 250 கோடி கணக்கு காட்டியுள்ளனர். மேலும் ஆயுஷ்மான் பாரத் என்ற திட்டத்தின் மூலம் இறந்துபோன 88 ஆயிரம் பேருக்கு மருத்துவ காப்பீடு வழங்கியுள்ளனர். பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியில் ஊழல் வெளியே வந்து அனைவரும் பேச ஆரம்பித்துள்ளனர். இதற்கு பதில் சொல்லாமல் பாஜக வேறு ஏதாவது பொய் பிரச்சாரங்களை பேசி திசை திருப்ப பார்க்கின்றனர். இந்த முறை பாஜக அரசு ஆட்சி அமைக்காது. இதற்கு ஒட்டுமொத்த இந்திய மக்களும் துணை நிற்பார்கள் என்றும் கூறினார்.
தி.மு.க. அஞ்சாது:
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளிவந்தது தொடர்பான கேள்விக்கு, நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கிறது. அதற்குள் அனைத்தும் மாறும். இதுபோன்ற சண்டைகள் பாஜக, அதிமுக கூட்டணியில் முதல் முறையல்ல. முதலில் சண்டை போடுவது போன்று போடுபவர்கள், பின்னர் இணைந்து கொள்வார்கள். அமலாக்கத்துறை வழக்குகள் அதிமுக முன்னாள் அமைச்சர் மீது நிறையவுள்ளது.
அதிமுகவினர் பயப்படுபவர்கள். ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு வந்தால் அனைத்தும் முடிந்துவிடும். ஆனால் திமுக எந்த மிரட்டலுக்கும் அஞ்சாது என்றும் தெரிவித்தார். திமுக தேர்தலுக்கான கூட்டணி கிடையாது, கொள்கை கூட்டணி. தொடர்ந்து 8 ஆண்டுகளாக கூட்டணி அமைத்து ஒவ்வொரு தேர்தலிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணியை அரவணைத்து சென்று கொண்டிருக்கிறார் என்றார்.
கண்டிக்கத்தக்கது:
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்டவர்கள், மீண்டும் மேல்முறையீடு செய்தால் தகுதியானவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும். விண்ணப்பித்த கிட்டத்தட்ட 80 சதவீதம் பேர்களுக்கு பணம் வங்கிக்கணக்கில் பற்று வைக்கப்பட்டுவிட்டது எனவும் கூறினார். கர்நாடகாவில் காவிரி குறித்த கேள்விக்கு, ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கொள்கையில் இருக்கிறது. அதை நாம் மாநிலத்தில், அந்த மாநிலத்தின் கொள்கையை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று கூற முடியாது. ஆனால் கர்நாடகாவில் காவிரி விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் புகைப்படத்தை வைத்து பாஜகவினர் இழிவுபடுத்தும் விதமாக நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.