"நானும் திராவிடர்தான்" வானதி சீனிவாசன் சொன்ன பதில்.. அதிர்ந்த பிரஸ்மீட்
மேல்பாதி கோவிலுக்கு தன்னை அழைத்துச் செல்ல தயாரா என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி இருப்பது குறித்த கேள்விக்கு வானதி சீனிவாசன் மழுப்பலான பதில் அளித்துள்ளார்.

கோவை பீளமேட்டில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, முருகன் மாநாடு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
"கூட்டணியில் விரிசல் இல்ல"
முருகன் மாநாட்டு தீர்மானத்தை யாரும் ஏயக்கவில்லை என கூட்டணி கட்சியினர் தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு, "ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை, சித்தாந்தம் இருக்கிறது. அவர்கள் அந்த சித்தாந்தத்தில் தெளிவாக இருக்கின்றோம். இப்பொழுது திமுகவும் காங்கிரசும் ஒன்றாக அமர்ந்து நெருக்கடி நிலை குறித்து பேச முடியுமா?
திமுக கூட்டணி கட்சிகளுக்குள் இருக்கும் முரண்களை கேள்வி கேட்பதே இல்லையே ஏன்? அதிமுக பாஜக கூட்டணியில் எந்த விரிசலும் ஏற்படாது. எந்த கற்பனையும் நடக்காது. திமுக அரசு வீட்டுக்கு செல்வது உறுதி. பாரதிய ஜனதா கட்சி சார்பில் முருகன் மாநாடு நடக்கவில்லை. இந்து முன்னணி எல்லா அரசியல் கட்சிக்கும் அழைப்பு கொடுத்திருந்தார்கள். அதில், நாங்களும் கலந்து கொண்டு இருக்கிறோம். அதிமுகவும் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
பிரஸ்மீட்டை அதிரவைத்த வானதி சீனிவாசன்:
அதிமுகவின் கருத்தை நாங்கள் மதிக்கிறோம். அதே வேலையில் இந்து முன்னணியின் கொள்கையை சொல்வதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. இந்த உறவில் எந்த முரண்பாடும் கிடையாது. பாஜக சார்பில் இந்து முன்னணிக்கு அறிவுறுத்தல் எதுவும் கொடுத்திருக்கிறார்களா என தெரியவில்லை. இந்து முன்னணி அவர்கள் தரப்பில் சொல்லுவார்கள்" என்றார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி எம்.பியுமான ஆ. ராசா குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "தொடர்ச்சியாக தரக்குறைவான பேச்சின் மூலம் அவர் கவனத்தை ஈர்த்து வருகிறார். மத்திய உள்துறை அமைச்சரை அவர் தர குறைவாக விமர்சித்திருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இதை அவர் தவிர்க்க வேண்டும்.
அரசியல் ரீதியாக ஆட்சி ரீதியாக விமர்சனங்களை வைக்கலாம். தனிநபர் கருத்துக்கள் பேசுவது தொடர்ச்சியாக இருந்தால், உங்களை எங்கள் தலைவர்கள், தொண்டர்கள் விமர்சனம் செய்வதை தவிர்க்க முடியாது. அது போன்ற சூழ்நிலை உருவாக்கிட வேண்டாம்" என்றார்.
"அதிமுக தலைமையில் தான் கூட்டணி"
தேசிய ஜனநாயக கூட்டணி அரசை யார் நடத்துவார்கள் என்ற கேள்விக்கு, "அதிமுக தலைமையில் தான் இருக்கும். இதில், எங்கள் தலைவர்கள் உறுதியாக சொல்லி இருக்கின்றார்கள். இதை வைத்து ஏதோ செய்ய முடியுமா என சிலர் பார்க்கிறார்கள்?" என்றார்.
போதை பொருள் கலாச்சாரம் தமிழகத்தில் அதிகரித்து இருப்பதாகக் கூறிய அவர், "தமிழ்நாடு சீரழித்துக் கொண்டிருக்கிறது. தங்குதடையின்றி போதை வழக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விழிப்புணர்வு பிரச்சாரங்களை தாண்டி இதற்கென தனியாக அமைப்புகள் இருந்தாலும், பிற மாநிலங்களுடன் நல்ல தொடர்பு வைத்துக்கொண்டு போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்" என்றார்.
மேல்பாதி கோவிலுக்கு தன்னை அழைத்துச் செல்ல தயாரா என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி இருப்பது குறித்த கேள்விக்கு, இந்து முன்னணி மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான வன்னிய ராஜன் தெளிவான கருத்துக்களை சொல்லி இருக்கிறார்.
அதில் 100 வருடங்களை நிறைவு செய்யும் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தங்களது லட்சியமாக கோவில்கள், மயானம், நீர்நிலைகளில் தீண்டாமை கொடுமையை முற்றிலும் ஒழிப்பதற்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் பொதுவான கோவில் மயானம் கிணறு நீர் நிலைகள் இதை உருவாக்க வேண்டும் என்பதற்காக பணிபுரிந்து கொண்டிருக்கிறது என சொல்லி இருக்கின்றார். இந்த லட்சியத்தில் திருமாளவன் துணை நிற்க வேண்டும். இதுதான் திருமாவளவனுக்கு பதில்" என்றார்.
திருமாவளவனை பா.ஜ.க அழைத்து செல்லுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், "அந்த நிலைக்காக நாங்கள் பணிபுரிந்து கொண்டிருக்கிறோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "நான் திராவிடர்தான். இதில் என்ன சந்தேகம் இருக்கிறது. இந்த மேடையில் அமர்ந்திருக்க கூடிய அனைவரும் திராவிடர்கள் தான். கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ் என அனைவரும் திராவிடர்கள்தான். திராவிடம் என்ற பெயரால் மொழிகளுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்துவது, குறிப்பிட்ட சமூகத்தை இழிவு படுத்துவது, இந்து மக்களின் உரிமைகளை இழிவு படுத்துவது அல்ல" என்றார்.





















