(Source: ECI/ABP News/ABP Majha)
H Raja: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பிரதமர் என்று அழைத்த எச்.ராஜா..! நடந்தது என்ன?
பிரதமர் ஸ்டாலினுக்கு நிர்வாகத்தின் மீது கண்ட்ரோல் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலினை தவறுதலாக பிரதமர் ஸ்டாலின் என எச்.ராஜா குறிப்பிட்டுப் பேசினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை பிரதமர் ஸ்டாலின் என எச்.ராஜா அழைத்தது இணையத்தில் கேலிக்குள்ளாகியுள்ளது.
பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினரும் பாஜக மூத்த தலைவருமான எச்.ராஜா மதுரையில் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
“முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நிர்வாகத்தின் மீதும், தனது மந்திரிசபை மீதும், ஏன் தனது குடும்பத்தின் மீதுமே கன்ட்ரோலில் இல்லை. தமிழ்நாட்டுக்கு ஒரு நல்ல நாள் வராதா? ஒரு சந்திரபாபு நாயுடு வரமாட்டாரா? என நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். முதல்வரின் நிலை அவ்வளவு மோசமாக உள்ளது. நான் பரிதாபப்படுகிறேன்.
கேடு விளைவிக்கும்:
முதல்வர் என்னுடைய நண்பர் . தினமும் காலை கண் விழிக்கும்போது மூத்த அமைச்சர்கள் ஏதாவது ஒன்றை பேசி சர்ச்சையை கிளப்புகின்றனர். அவர் கூட நாள்தோறும் அமைச்சர்கள் ஏதாவது பேசி பிரச்சனையை ஏற்படுத்தக்கூடாது என சிந்தித்து கொண்டே விழிப்பதாக கூறுகிறார். ஆனால் அவர் அருகில் அமைச்சர் பொன்முடி அமர்ந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்.
நேரு கவுன்சிலரை அடிக்கிறார். நாசர் கல்லைக் கொண்டு திமுகவினரை அடிக்கச் செல்கிறார். திருச்சி சிவா வீட்டுக்கு கத்தி கம்போடு நுழைந்து அடித்து நொறுக்கி காவல் நிலையத்தையும் தாக்கிவிட்டுச் செல்கின்றனர். கண்ட்ரோல் இல்லை. தடி எடுத்தவன் தண்டல்காரனாக உள்ளனர். இது தமிழ்நாட்டுக்கு கேடுவிளைவிக்கக்கூடிய விஷயம்.
ராகுல்காந்தி:
தமிழ்நாட்டில் NO DMK எனும் நிலைபாட்டை எடுக்க வேண்டும். அதானி குழுமத்தால் என்ன நஷ்டம் வந்துள்ளது? ஒரு பொதுத்துறை வங்கியாவது பாதிக்கப்பட்டதா? அவ்வாறு நஷ்டம் ஏற்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன்.
ராகுல் காந்தி நல்ல மனநிலையுடன் எப்போதும் பேச மாட்டார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ராகுல் காந்த தகுதியிழப்பு செய்யப்பட்டு உள்ளார். அவர் மீது பிரதமரோ மத்திய அரசோ பாஜகவோ வழக்கு தொடரவில்லை.
ராகுல் காந்தி தீர்ப்பு உறுதி செய்யப்பட்டால் வீரமணி, திருமாவளவன் ஆகியோர் ஒரு சமூகத்துக்கு எதிராக பேசி வருவதால் அவர்களும் தகுதி நீக்கம் செய்யப்படலாம். தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்ய டெல்லியில் குழு உள்ளது” என எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசினார்.
பிரதமர் ஸ்டாலின்:
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசுகையில், “திராவிட கழகம் குறித்து உண்மையை சொல்ல வேண்டுமென்றால், பிரதமர் ஸ்டாலினுக்கு நிர்வாகத்தின் மீது கண்ட்ரோல் இல்லை” என முதலமைச்சர் ஸ்டாலினை தவறுதலாக பிரதமர் ஸ்டாலின் என எச்.ராஜா குறிப்பிட்டுப் பேசினார்.
இந்நிலையில் இந்த வீடியோ இணையத்தில் கேலிக்குள்ளாகி வருகிறது.
மேலும் படிக்க: Anbumani: 'ஸ்டெர்லைட்டை விட 100 மடங்கு பிரச்சினை.. அனைவருக்குமே என்.எல்.சி.யால் சிக்கல்' - அன்புமணி ராமதாஸ்