மோடி காலில் விழ முயன்ற நிதிஷ் குமார்.. பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பரபர!
என்டிஏ கூட்டத்தில் உரையை முடித்து விட்டு நாற்காலியை நோக்கி வந்த நிதிஷ் குமார், சட்டென மோடியின் காலில் விழு முயற்சித்தார். ஆனால், அதை மோடி தடுத்து நிறுத்திய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியாகி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்கு தேவையான ஆதரவு கிடைத்துள்ள நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை இன்று மாலை சந்தித்து ஆட்சி அமைக்க அவர்கள் உரிமை கோருவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
என்.டி.ஏ கூட்டம்: அதற்கு முன்பு பாஜக கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம், பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று நடந்தது. அதில், மோடி, ராஜ்நாத் சிங், அமித் ஷா, நட்டா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் மட்டும் இன்றி அக்கட்சி எம்பிக்கள், பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதோடு, ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவரும் பிகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார், தெலுங்கு தேச கட்சி தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண், மகாராஷ்டிர முதலமைச்சரும் சிவசேனா கட்சி தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி மூத்த தலைவரும் கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் இந்தியா கூட்டணியை மறைமுகமாக விமர்சித்த நிதிஷ் குமார், "எங்களுடைய கட்சி ஐக்கிய ஜனதா தளம் இந்தியாவின் பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடியை ஆதரிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்த அவர் மீண்டும் பிரதமராகப் போகிறார் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
நிதிஷ் குமார் செய்த செயல்: நாட்டுக்கு சேவை செய்த அவர், எஞ்சியிருப்பதை இந்த முறை நிறைவேற்றுவார். நாங்கள் அவருடன் இருப்போம். ஒரு சிலர் தேவையில்லாத விஷயங்களைச் சொல்லி அங்கொன்றும் இங்கொன்றுமாக (லோக்சபா தேர்தல்) வெற்றி பெற்றதை நான் கவனிக்கிறேன். அவர்கள் எந்த வேலையும் செய்யவில்லை, நாட்டுக்காக சேவை செய்யவில்லை. அடுத்த முறை நீங்கள் வரும்போது, அவர்கள் அனைவரும் தோற்கடிக்கப்படுவார்கள்" என்றார்.
உரையை முடித்து விட்டு நாற்காலியை நோக்கி வந்த நிதிஷ் குமார், சட்டென மோடியின் காலில் விழு முயற்சித்தார். ஆனால், அதை மோடி தடுத்து நிறுத்தினார். இந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவு இந்த முறை 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க 272 எம்பிக்களின் ஆதரவு தேவைப்படுவதால் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
இவர்கள் அளித்த ஆதரவை திரும்ப பெறும் பட்சத்தில் ஆட்சி கவிழும் அபாயமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.