Bihar Election 2025: பீகார் சட்டமன்ற தேர்தல்.. NDA கூட்டணி தொகுதி பங்கீடு எப்படி? மோடியின் கணக்கு என்ன?
Bihar Election 2025: பீகார் சட்டமன்ற தேர்தலில் சம எண்ணிக்கையிலான தொகுதி பங்கீடு செய்து கொள்ள பாஜக மற்றும் ஜேடியு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது.

பீகார் சட்டமன்ற தேர்தலில் சம எண்ணிக்கையிலான தொகுதி பங்கீடு செய்து கொள்ள பாஜக மற்றும் ஜேடியு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது.
சூடுபிடிக்கும் பீகார் தேர்தல்:
பீகாரில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில் பீகாரில் எப்போது தேர்தல் என்று எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்த சூழலில் இந்திய தேர்தல் ஆணையம் நேற்று (அக்டோபர் 6) அறிவித்தது. அதன்படி, வரும் நவம்பர் 6 ஆம் தேதி மற்றும் 11 ஆகிய தேதிகள் பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பீகாரில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 அன்று வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதி பங்கீடு:
பீகாரில் தற்போது ஜனதா தளம் (ஐக்கிய) கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கில் தீவிரம் காட்டி வருகிறது. மறுபுறம் எப்படியும் இந்த முறை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விட வேண்டும் முனைப்பு காட்டி வருகிறது ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான கூட்டணி. இச்சூழலில் தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டணி பங்கீடு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது , பாஜகவும் ஜேடியுவும் சம எண்ணிக்கையிலான இடங்களில் போட்டியிடத் தயாராகி வருவதாகவும், மொத்தம் 205 இடங்கள் இரண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே பகிர்ந்து கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தையும் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
மீதமுள்ள 38 இடங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சிறிய கூட்டணிக் கட்சிகளான லோக் ஜனசக்தி கட்சி (LJP), இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (HAM) மற்றும் ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி (RLM) இடையே பகிர்ந்தளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக, எல்ஜேபி Lok Janshakti Party (Ram Vilas) தலைவர் சிராக் பாஸ்வானுக்கு 25 இடங்களையும், எச்ஏஎம் (Hindustani Awam Morcha (Secular) தலைவர் ஜிதன் ராம் மஞ்சிக்கு ஏழு இடங்களையும், உபேந்திர குஷ்வாஹாவின் ஆர்எல்எம்-க்கு ஆறு இடங்களையும் வழங்க முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





















