மேயராக ஆட்டோ ஓட்டுநர் தேர்வு செய்யப்பட்டது கற்பனை செய்ய முடியாத சாதனை - கே.எஸ்.அழகிரி
’’மிகவும் வசதி வாய்ப்பு படைத்தவர்கள் செல்வாக்குமிக்கவர்கள் மட்டுமே மேயர் போன்ற உயர்ந்த பொறுப்புகளை வகிக்க முடியும் என்கிற எண்ணத்தை இந்த மேயர் தேர்வு மாற்றியிருக்கிறது’’
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சியை திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு திமுக தலைமை அறிவித்தது. அதன் படி காங்கிரஸ் கட்சியின கும்பகோணம் மாநகராட்சி 17 வது வார்டு உறுப்பினரும், ஆட்டோ ஒட்டுனர் சரவணனை மேயராக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. அதனை தொடர்ந்து சரவணன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் மேயர் பதவி ஏற்கும் விழா கும்பகோணத்தில் நடைபெற்றது.
அதில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ். அழகிரி நிருபர்களிடம் கூறுகையில் கும்பகோணம் மாநகராட்சியின் மேயராக ஆட்டோ ஓட்டுநர் தேர்வு செய்யப்பட்டுள்ளதன் மூலம், சமூக நீதிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி நிரூபணமாகிறது. மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வரும் ஆட்டோ ஓட்டுநர் சரவணன் போட்டிகள் நிறைந்த ஜனநாயகத்தில் மேயராக தேர்வாகி இருப்பது மாபெரும் சாதனையாக கருத வேண்டியுள்ளது. இந்த சாதனை இந்தியாவில் சமத்துவத்துக்காகப் போராடிய அனைத்து தலைவர்களுக்கும் சமர்ப்பணம்.
மகாத்மா காந்தி தொடங்கி தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர், கருணாநிதி, தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பெருமைப்படக்கூடிய தேர்வாக கும்பகோணம் மாநகராட்சி மேயர் தேர்வு நடந்துள்ளது. மிகவும் வசதி வாய்ப்பு படைத்தவர்கள் செல்வாக்குமிக்கவர்கள் மட்டுமே மேயர் போன்ற உயர்ந்த பொறுப்புகளை வகிக்க முடியும் என்கிற எண்ணத்தை இந்த மேயர் தேர்வு மாற்றியிருக்கிறது. ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுநர் ஒரு மாநகராட்சியின் உயரிய பொறுப்பான மேயர் பதவிக்கு வந்திருப்பது இன்று இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தேசிய தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். ஒரு ஆட்டோ ஓட்டுநர் மேயராக தேர்வு செய்யப்பட்டிருப்பது கற்பனை செய்து பார்க்க முடியாத சாதனை. இதற்கு அதிக உறுப்பினர்கள் எண்ணிக்கை கொண்ட திமுக முழுவதும் ஒத்துழைப்பு அளித்திருப்பது மிகப் பெரிய விஷயம். கூட்டணிக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையேயான தோழமை கும்பகோணம் பகுதியில் சிறப்பாக அமைந்துள்ளது என்றார்.
அதனை தொடர்ந்து திமுக மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகளிடம் மேயர் சரவணன் மற்றும் துணை மேயர் தமிழழகன் ஆகியோர் வாழ்த்து பெற்றனர். அப்போது, சட்டமன்ற கொறாடை கோவிசெழியன், எம்பி ராமலிங்கம், மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் லோகநாதன், கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன், மேயர் க. சரவணன், துணை மேயர் சு.ப. தமிழழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.