Mamta Banerjee : என் மீதான தாக்குதலுக்கு இதுதான் அர்த்தம்.. பாஜகவை விளாசிய மம்தா பானர்ஜி..
என் மீதான தாக்குதல் பாஜகவுக்கு அச்சம் வந்துவிட்டது என்பதையே புலப்படுத்துகிறது என்று மேற்குவங்க முதலைமைச்சர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.
என் மீதான தாக்குதல் பாஜகவுக்கு அச்சம் வந்துவிட்டது என்பதையே புலப்படுத்துகிறது என்று மேற்குவங்க முதலைமைச்சர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.
மம்தா பேனர்ஜி என்றாலே அவரின் தெறிப்புப் பேச்சுக்கள் தான் முதலில் நினைவுக்கு வரும். ஓவ்வொரு அரசியல் மேடையிலும் அவர் எழுப்பும் முழக்கம் அரசியல் வட்டாரத்தில் அதுவும் தேசிய அரசியல் களத்தில் மிகவும் பிரபலம். அடுத்த நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிரான வலுவான கூட்டணியைத் திரட்டும் பணியை அவர் இப்போதே தொடங்கிவிட்டார்.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் வெள்ளோட்டமாக பார்க்கப்படும் உத்தரப் பிரதேசத்தில் அவர் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். நாளை (மார்ச் 7) உத்தரப் பிரதேசத்தில் கடைசிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதில், பிரதமரின் வாரணாசி தொகுதியிலும் நாளை தேர்தல் நடைபெறுகிறது. வாரணாசி அதனை ஒட்டிய எட்டு மாவட்டங்களில் தான் பாஜகவுக்கு கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் மிக அதிகமான வாக்குகள் பதிவானது. இதனால் நாளைய தேர்தல் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று புதன்கிழமை சமாஜ்வாடி கட்சிப் பேரணியில் பேசிய மம்தா பேனர்ஜி, ”நான் வாரணாசிக்கு வரும்போது வலதுசாரி இந்து அமைப்புகளால் அச்சுறத்தப்பட்டேன். என்னை பாஜகவினர் தாக்க முற்பட்டனர். நான் இதற்கு முன்னதாக பல தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கிறேன். துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறார்கள். கம்பால் அடித்துள்ளார்கள். நான் எப்போதும் அடிபணிந்தது இல்லை. ஏனெனில் நான் கோழையில்லை. நான் ஒரு போராளி. என் மீது தாக்குதலுக்கு அவர்கள் தயாராகிவிட்டார்கள் என்றால் அவர்களுக்குத் தோல்வி பயம் வந்துவிட்டது என்றே அர்த்தம்” என்று பேசினார்.
முன்னதாக, கங்கா ஆரத்திக்காக தாசாஷ்வமேத் காட் நோக்கிச் சென்ற அவரை இந்து யுவ வாஹினி அமைப்பினர் தடுத்து நிறுத்தினர். அவரது காரை முற்றுகையிட்டனர். கருப்புக் கொடி ஏந்தி அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்து யுவ வாஹினி அமைப்பு 20 ஆண்டுகளுக்கு முன்னர் யோகி ஆதித்யநாத்தால் உருவாக்கப்பட்டது. காரை முற்றுகையிட்டவர்களைப் பார்த்து அஞ்சாத மம்தா பேனர்ஜி, தனது காரில் இருந்து இறங்கி துணிச்சலாக சாலையில் சவால்விடுவதுபோல் நின்றார்.
பின்னர் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மம்தா, தசாஷ்வமேத் காட்டிற்குச் சென்று படியில் அமர்ந்து கங்கா ஆரத்தியைப் பார்த்தார்.
ஆரம்பத்தில் இருந்தே உத்தரப்பிரதேச தேர்தலுக்காக மம்தா ஒரு கோஷத்தை திரும்பத் திரும்பக் கூறி வருகிறார். 'வங்கத்தால் முடியுமென்றால் உத்தரப் பிரதேசத்தாலும் முடியும்' என்பதே அவருடைய கோஷம். அதாவது மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை திரிணமூல் காங்கிரஸ் வீழ்த்தியது சாத்தியப்பட்டது போல் உத்தரப் பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்துவது சமாஜ்வாடிக்கு சாத்தியம் என்பதே அவரின் குரலாக உள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 6 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில் நாளை மார்ச் 7 ஆம் தேதி கடைசிக்கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.
மார்ச் 10 ஆம் தேதி உத்தரப் பிரதேசன், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளது.