BJP Ruling States: காங்கிரஸ் இல்லாத இந்தியா.. சொன்னதைச் செய்கிறதா பாஜக.? யார் ஆட்சி எங்கெங்கே?
தற்போதைய 5 மாநிலத் தேர்தல்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 4 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி நாடு முழுவதும் உள்ள 31 மாநிலங்களுள் 18 மாநிலங்களில் ஆள்கிறது.
தற்போதைய 5 மாநிலத் தேர்தல்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நான்கு மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி நாடு முழுவதும் உள்ள 31 மாநிலங்களுள் 18 மாநிலங்களில் ஆளுங்கட்சியாகப் பொறுப்பு வகிக்கிறது. அருணாச்சலப் பிரதேசம், அசாம், பீகார், கோவா, குஜராத், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம், திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தராகாண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக மற்றும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது.
பாஜக அருணாச்சலப் பிரதேசம், கோவா, குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தராகாண்ட் ஆகிய மாநிலங்களில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வருகிறது. அதே போல, அசாம், பீகார், ஹரியானா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பாஜக இடம்பெற்றுள்ள கூட்டணியான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சுமார் 50 சதவிகிதத்திற்கும் மேலான பகுதிகளில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் கைவசம் சத்திஸ்கர் மாநிலம் மட்டுமே தனித்து ஆட்சியில் இருக்கிறது. பிற மாநிலங்களான ஜார்க்கண்ட், மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றிருக்கிறது காங்கிரஸ் கட்சி. ஆம் ஆத்மி கட்சி டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை அமைத்துள்ளது.
`காங்கிரஸ் இல்லாத இந்தியாவை அமைப்போம்’ எனக் கூறி கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றது பாஜக. அதன்பிறகு, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு இறங்குமுகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
த்ரிவேதி அரசியல் தரவுகள் நிறுவனத்தின் இயக்குநரும், அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியருமான கிலெஸ் வெர்னியர்ஸ், பாஜகவுக்குப் போட்டியாக வலிமையான எதிர்க்கட்சி எதுவும் தற்போது நாட்டில் இல்லை என்பதால் அடுத்த தேசியத் தேர்தல்களிலும் பாஜக தனது வலிமையை நிரூபிக்கும் எனக் கூறியுள்ளார்.
அதிகரிக்கும் வேலையின்மை, பணவீக்கம், விவசாயிகள் பிரச்னை, கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட விமர்சனங்கள் முதலானவற்றைக் கடந்தும் பாஜக வெற்றி பெற்றிருப்பது அரசியல் விமர்சகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
2024ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலின் முன்னோட்டமாகத் தற்போதைய 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகின்றன. சுமார் 80 நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்களவைக்கு அனுப்பும் உத்தரப் பிரதேசத்தில் வெற்றி பெறுவது நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கான சாவியாகக் கருதப்படுகிறது. எனவே இந்த முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன.