(Source: ECI/ABP News/ABP Majha)
`வெறுப்பு அரசியலைத் தடுத்து நிறுத்துங்கள்!’ - பிரதமர் மோடிக்கு முன்னாள் அரசு அதிகாரிகள் கடிதம்!
பாஜக ஆளும் மாநிலங்களின் அரசுகளால் முன்னெடுக்கப்படும் வெறுப்பு அரசியலைப் பிரதமர் மோடி `தடுத்து நிறுத்துவார்’ என்ற நம்பிக்கையுடன் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் அரசு அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
பாஜக ஆளும் மாநிலங்களின் அரசுகளால் முன்னெடுக்கப்படும் வெறுப்பு அரசியலைப் பிரதமர் நரேந்திர மோடி `தடுத்து நிறுத்துவார்’ என்ற நம்பிக்கையுடன் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மூத்த அரசு அதிகாரிகள் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதப்பட்டுள்ள பகிரங்க கடிதத்தில், `நம் நாட்டில் வெறுப்பு காரணமாக நிகழும் அழிவை நாம் கண்டு கொண்டிருக்கிறோம். இங்கு பலிபீடத்தில் இருப்பது முஸ்லிம்களும், பிற சிறுபான்மைச் சமூகங்களும் மட்டுமல்ல; அரசியலமைப்புச் சட்டமும் தான்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லியின் முன்னாள் ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங், முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ.நாயர் முதலான 108 முன்னாள் மூத்த அதிகாரிகள் இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
`முன்னாள் அரசு அதிகாரிகளாக இதுபோன்ற அதீத விமர்சனங்களை நாங்கள் வழக்கமாக முன்வைப்பதில்லை. ஆனால் நம் முன்னோர்கள் உருவாக்கித் தந்த அரசியலமைப்பின் மாண்பு அழிக்கப்படும் வேகத்தின் காரணமாக நாங்கள் முன்வந்து பேசுவதற்கும், எங்கள் கோபத்தை வெளிப்படுத்துவதற்கும் தள்ளப்பட்டுள்ளோம்’ என இந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான வன்முறைகள், குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக, கடந்த சில ஆண்டுகளாக, அசாம், டெல்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தராகாண்ட் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களில் அச்சத்திற்குப் புதிய வடிவம் கொடுக்கப்பட்டுள்ளதாக இந்தக் கடிதம் கூறியுள்ளது.
முன்னாள் அரசு அதிகாரிகள் இந்தக் கடிதத்தில் இந்தியாவில் நிலவும் தற்போதைய சிக்கல்கள் அரசியலமைப்பை மீறுவதாக மட்டுமல்லாமல், இந்தியாவுக்கு மட்டுமே தனித்துவமான சமூக அமைப்பு சீரழிவதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் இந்தக் கடிதத்தில், `சமூக ரீதியாக எழுந்துள்ள இந்த மிகப் பெரிய பிரச்னையில், உங்கள் மௌனம் எங்கள் செவித் திறனைச் செயலிழக்கச் செய்கிறது. உங்கள் வாக்குறுதியான `அனைவருக்குமான வளர்ச்சி, அனைவருடனும்’ என்ற கொள்கையில் இருந்து உங்கள் மனசாட்சி நடந்து கொள்ள வேண்டும் என வேண்டுகிறோம். சுதந்திர தினத்தின் 75ஆவது ஆண்டு விழா அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், உங்கள் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் வெறுப்பு அரசியலைத் தடுக்க நீங்கள் குரல் கொடுப்பீர்கள் என நம்புகிறோம்’ எனவும் முன்னாள் மூத்த அரசு அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளனர்.