ADMK Jayakumar: மன்னிப்புக் கடிதம் ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவுக்கு பொருந்தாது - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!
ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோருக்கு பொருந்தாது. மற்றவர்கள் யார் வந்தாலும் நாங்கள் இணைத்துக்கொள்வோம் என ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
அதிமுகவில் ஒருவரை இணைப்பது குறித்து பொதுச்செயலாளர் தான் முடிவெடுப்பார் என்பது அதிமுகவில் முன்பிருந்தே இருக்கிறது. அதன் அடிப்படையில் தான், மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு அதிமுகவில் இணைந்து கொள்ளலாம் என அதிமுக பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த மன்னிப்பு கடிதம், ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோருக்கு பொருந்தாது. மற்றவர்கள் யார் வந்தாலும் நாங்கள் இணைத்துக்கொள்வோம் என ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
மேலும் அந்த செய்தியாளர் சந்திப்பில், அமைதியை ஏற்படுத்தித் தருவது ஒரு அரசாங்கத்தின் கடமை. ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் அதிலிருந்து பின்வாங்கிவிட்டார். ஒரு பொம்மை முதலமைச்சரை தமிழ்நாடு பெற்றிருப்பதால், சர்வசாதாரணமாக கொலை,கொள்ளை, கற்பழிப்பு, ஆள்கடத்தல் கட்டப்பஞ்சாயத்து, அத்துமீறல், அநியாயம் போன்றவை தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டுள்ளது. இந்த ஆட்சியில் மக்களின் பாதுகாப்பு, நிம்மதி போய்விட்டது. மக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை அதுபோன்ற நிலைமைதான் தற்போது நடைமுறையில் உள்ளது என கூறினார்.
அதேபோல், இராயபுரம் பகுதியில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அப்பகுதி மக்களுக்கான குடியிருப்பில் வேறு பகுதி மக்களை குடியமர்த்துவதுவது முறையான செயல் அல்ல. மேலும், ஏழை மக்களிடம் ரூபாய் 5 இலட்சம் கேட்பதும் சரியானது அல்ல, ஏற்கனவே அதிமுக ஆட்சியில், மாதம் மாதம் வாடகைபோல் வசூலிக்கப்பட்டதைப் போலவே வசூலிக்கலாம். அதேபோல், அதிமுகவில் இருந்து திமுகவிற்கு சென்று தற்போது அமைச்சராக உள்ள முத்துசாமி குறித்து கூறுகையில், மிகவும் சீனியரான அவரை மதுபானம் விற்கவைத்துள்ளார்கள். இதனை பார்ப்பதற்கே வருத்தமாக உள்ளது. தமிழ்நாட்டில் இன்றைக்கும் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூபாய் 10 அதிகம் பெறப்படுகிறது. அதேபோல், தற்போது மதுவிலக்குத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் முத்துசாமி துறை சார்ந்த ஆலோசனைய நடத்தியுள்ளார். அதில் காலையில் டாஸ்மாக் கடையைத் திறப்பது குறித்து ஆலோசித்துள்ளதாக கூறுகிறார், காலையில் டாஸ்மாக் கடையைத் திறந்தால் கட்டிட வேலைக்குச் செல்பவர்கள் முதல், உழைக்கும் வர்கத்தினர் மது அருந்திவிட்டு வேலைக்குச் சென்றால் அவர்கள் குடும்பம் விளங்குமா? மேலும், டெர்டா பாக்கெட்டுகளில் மது விற்பனை செய்வது குறித்து ஆலோசனை செய்யப்படுவதாக கூறுகிறார் அமைச்சர், அதனால் டெட்ரா பாக்கெட்டுகளை மறுசுழற்சி செய்ய முடியும். ஆனால், டெட்ரா பாக்கெட்டுகளில் மதுவை வீட்டிற்கு ஒருவர் வாங்கிச் சென்றால் மதுவை ஜூஸ் என நினைத்து அருந்த அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது” என கூறினார்.
மேலும், “ பாஜக அழைத்துள்ள கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செல்வார் எனவும், தேர்தல் நெருங்க நெருங்க திமுக கூட்டணி கட்சிகள் எங்களுடன் இணைந்துவிடுவார்கள்” எனவும் கூறினார்.