BJP-ADMK Alliance On: அண்ணாமலைதான் தலைவர்.. அதிமுக கூட்டணியும் உண்டு.. பாஜகவின் மாஸ்டர் பிளான்
பாஜக தமிழ்நாடு தலைவராக அண்ணாமலையே தொடர்வார் என்றும், அதிமுகவுடன் கூட்டணியும் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக தமிழ்நாட்டின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி தொடர்ந்துவரும் நிலையில், அண்ணாமலையே தலைவராக தொடர்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, அதிமுகவுடன் கூட்டணியும் இருக்கும் என்கிறார்கள். அது எப்படி சாத்தியம் என யோசிக்கிறீர்களா.? வாருங்கள் பார்க்கலாம்.
பாஜக தமிழ்நாட்டிற்கு அண்ணாமலையே மீண்டும் தலைவர்.?
பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையின் பதவிக்காலம் முடிவதால், கடந்த ஒரு மாதமாகவே, பாஜக தமிழ்நாட்டின் அடுத்த தலைவர் யாராக இருக்கும் என்ற கேள்வி தொடர்ந்துவருகிறது. இதனிடையே, தலைவருக்கான போட்டியில் சீனியர் லீடர்களான தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் குதித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனாலும், அண்ணாமலையே தலைவராக தொடர்வார் என்று ஒரு பக்கம் சொல்லப்பட்டாலும், அதிமுக உடன் கூட்டணி வைப்பதாக இருந்தால், அதற்கு அண்ணாமலை சரிப்பட்டு வர மாட்டார் என்பதால், வேறு தலைவரை தான் பாஜக தலைமை நியமிக்கும் என்ற பேச்சுக்களும் வலம் வந்தன.
இதற்கு மத்தியில், எடப்பாடி பழனிசாமியின் மகனிடம் அண்ணாமலை பேசிவிட்டதாகவும், அவரையே அழைத்துச் சென்று அமித் ஷாவை சந்தித்ததாகவும், அதன் மூலம் எடப்பாடி பழனிசாமி சமாதானமாகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால், அதுவும் உறுதி செய்யப்படாத நிலையில், அண்ணாமலைதான் பாஜக தமிழ்நாட்டின் தலைராக தொடர்வார் என நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக உடன் கூட்டணி உண்டு.?
அண்ணாமலைக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் ஆகாததால், அண்ணாமலை மீண்டும் தலைவராகும் பட்சத்தில், அதிமுக உடன் கூட்டணி சேர்வது கடினம் என்று பாஜக வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்த சூழலை பயன்படுத்தவே, மூத்த தலைவர்கள் ரேஸில் குதித்ததாகவும் கூறப்பட்டது. ஏனென்றால், 2026 சட்டமன்ற தேர்தல், இரண்டு கட்சிகளுக்குமே மிக முக்கியமான தேர்தல். அதிலும், அதிமுகவிற்கு வாழ்வா, சாவா என்ற நிலை உள்ளது. இந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்தால், அதிமுக என்ற கட்சியே காணாமல் போகும் அளவிற்கு சூழ்நிலை உள்ளது. இது, எடப்பாடி பழனிசாமிக்கும் நன்றாகவே தெரியும்.
மறுபுறம், கூட்டணி வைக்காவிட்டால், பாஜகவின் நிலை படுமோசமாகிவிடும் என்பதும் பாஜக தலைமைக்கு நன்றாக தெரியும். அதனால், பாஜக-அதிமுக கூட்டணி என்பது தவிர்க்க முடியாத ஒரு விஷயம். இதனிடையே, தற்போது விஜய் வேறு கட்சி தொடங்கி, கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடபெற்றுவருவதும் பல சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே, அதிமுக உடன் தவெக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. விஜய் உடன் கூட்டணி அமையும் பட்சத்தில், பாஜக-வை அவர் ஏற்பது நடக்காது. இதனால், கூட்டணிகள் அமைவதில் பெரும் குழப்பங்கள் நீடித்து வருகின்றன.
"அரசியலில் இதெல்லாம் சகஜம்"...
இப்படிப்பட்ட சூழ்நிலை இருந்தாலும், தமிழ்நாட்டில் பாஜக தற்போது வலுவடைந்திருப்பது அண்ணாமலையால் தான் என்று தலைமை நம்புகிறது. அதனால், தலைவரை மாற்றிவிட்டால், அது பின்னடைவை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் தலைமையிடம் இருக்கிறது. அதனால், அண்ணமலையையே மீண்டும் தலைவராக்க பாஜக தலைமை முடிவு செய்துவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து சொல்லப்படுகிறது. அதேபோல், மத்தியில் ஆட்சியில் இருப்பதால், அதை வைத்து, எடப்பாடி பழனிசாமியை பணிய வைப்பது ஒன்றும் பாஜகவிற்கு கடினமாக இருக்காது என்று நம்பப்படுவதால், அதிமுக உடனான கூட்டணியும் நிச்சயம் அமையும் என்று கூறப்படுகிறது. கூட்டணி வேண்டும் என்பதால், பாஜக தலைமையே, அண்ணாமலையையும், எடப்பாடி பழனிசாமியையும் அழைத்து சமாதானம் செய்து வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்று கூறுவதுபோல், எப்போதும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அப்படித்தான் இந்த கூட்டணியும் அமையும் என்கிறார்கள் அரசியல் அறிந்தவர்கள்.

