"டான்ஸை ரசிக்க மட்டும் டைம் இருக்கோ" முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி
அமைச்சர்கள் ஏற்பாடு செய்யும் நடனத்தை ரசிப்பதற்குத்தான் முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் நேரமிருக்கிறது என தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

முதலமைச்சருக்கும், அவரது மகனுக்கும் அமைச்சர்கள் ஏற்பாடு செய்யும் நடனத்தை ரசிப்பதற்குத்தான் நேரமிருக்கிறது என்றும் மதுரை எய்ம்ஸ் கட்டிடப் பணிகள் எவ்வளவு நிறைவடைந்திருக்கிறது என்பதை பார்க்க நேரமில்லை என்றும் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை:
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை மறைந்த பாஜக தலைவரும் முன்னாள் நிதித்துறை அமைச்சருமான அருண் ஜெட்லிதான் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது முதன்முதலில் வெளியிட்டார்.
கடந்த 2015ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியான நிலையில், 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி மருத்துவமனைக்கான அடிக்கலை நாட்டினார். இருப்பினும், மருத்துவமனை அமைப்பதில் தொடர் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதிலடி:
முதற்கட்டமாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு 12 அடி உயர சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் 21 கோடி மதிப்பீட்டில் ஆறு கிலோ மீட்டருக்கு சாலை பணிகளும் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் எய்ம்ஸ் நிர்வாகம் அமைய உள்ள முப்பரிமாண மாதிரி வடிவமைக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டுள்ளது. அதில்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முதல் கட்ட கட்டட பணிகள் 2026 ஜனவரியில் நிறைவடையும் என்றும், 2027-ம் ஆண்டு இரண்டாம் கட்ட கட்டிடப் பணிகள் நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளதாக. மதுரை எய்ம்ஸ் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்துள்ளது.
"டான்ஸை ரசிக்க மட்டும் டைம் இருக்கோ"
இந்த வீடியோவை மேற்கோள்காட்டி, மருத்துவமனை அமைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இதற்கு எக்ஸ் தளத்தில் பதிலடி அளித்த தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, "முதலமைச்சர் ஸ்டாலின், விளம்பர ஷூட்டிங் செய்யும் நேரத்தில், மதுரை எய்ம்ஸ் கட்டிடப் பணிகளைச் சென்று பார்வையிட்டிருந்தால், பணிகள் எவ்வளவு நிறைவு பெற்றிருக்கிறது என்பது தெரிந்திருக்கும். தனது மாநிலத்தில் நிறைவேற்றப்படும் ஒரு முக்கியமான திட்டத்தைச் சென்று பார்வையிடுவதை விட, முதலமைச்சருக்கும், அவரது மகனுக்கும் அமைச்சர்கள் ஏற்பாடு செய்யும் நடனத்தை ரசிப்பதற்குத்தான் நேரமிருக்கிறது என்பதுதான் தமிழகத்தின் சாபக்கேடு.
மதுரை எய்ம்ஸ், சொன்ன தேதியில் நிச்சயம் திறக்கப்படும் என்பதில் முதலமைச்சருக்கு சந்தேகம் தேவையில்லை. ஏனென்றால், அது பாரதப் பிரதமர் மோடியின் வாக்குறுதி. ஆனால், முதலமைச்சருக்கு, தனது தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா?
இதே மதுரையில், வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பதாக சொல்லி, ஆண்டுகள் நான்கு ஆகின்றன. ஒரு செங்கலைக் கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை. முதல் செங்கலை நாங்கள் தருகிறோம். எப்போது மதுரை வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பீர்கள் என்று கூற முதலமைச்சருக்குத் திராணி இருக்கிறதா?" என விமர்சித்துள்ளார்.





















