‘அண்ணா வழி திராவிடம்’ தொடங்கப்பட்டது அதிமுகவிற்கென தனி மாத இதழ்..!
”அண்ணாவை, அவருடைய முக்கியத்துவத்தை, அவர் கண்ட திராவிட வழியை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் விதமாக இந்த மாதமிருமுறை இதழ் தொடங்கப்பட்டுள்ளது”

அதிமுக கட்சிக்கு என ’நமது அம்மா’ என்ற தினசரி நாளேடு, நியூஸ் ஜெ என்ற பெயரில் தொலைக்காட்சி ஆகியவை இருந்து வரும் நிலையில், தங்களுக்கென தனியாக ஒரு மாத இதழை தொடங்கியிருக்கிறது அக்கட்சி. மாதம் இருமுறை அந்த இதழ் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
‘அண்ணா வழியில் திராவிடம்’
‘அண்ணா வழியில் திராவிடம்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மாதம் இருமுறை இதழ், அண்ணாவின் கொள்கைகை ஏந்தி வெளிவரும் என்றும், அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றும் இயக்கமாக அதிமுகவே இயங்கி வருகிறது என்பதை வெளிப்படுத்தும்படியான கட்டுரைகள், செய்திகள், அறிவிப்புகள் உள்ளிட்டவைகளை தாங்கி இந்த இதழ் வெளிவரவிருக்கிறது.
அதிமுக என்பதே அண்ணா – திராவிட முன்னேற்றக் கழகம் என்பதுதான் என்பதால், அண்ணா வழியில் திராவிடம் என்ற பெயர் இதழுக்கு சூட்டப்பட்டுள்ளது.
புதிய இதழுக்கு காரணம் என்ன ? அதிமுக தரப்பு வெளியிட்ட தகவல் இது
’மனித குலத்தின் மாபெரும் மற்றும் மிக முக்கியமான விழுமியங்களில் ஒன்று, பன்மைத்துவத்தின் மூலமாகவே ஒட்டுமொத்த மனித குலத்திற்கான முன்னேற்றத்தை அடையமுடியும் என்பது தான். அதே வேளையில் ஒவ்வொரு இனத்திற்கும் உரியதான தனித்துவமான அடையாளங்களை விட்டுவிடாமல் பேணிகாத்திடவும் விரும்புகிறது மனித இனம். இவ்விரண்டிற்குமான இடையிலான அரசியலைத் தான் அறிஞர் அண்ணா நமக்காக சிந்தித்து தத்துவமாக்கிச் சென்றிருக்கிறார்.
அண்ணா முன்னிறுத்திய திராவிடம் ஆரியத்திற்கு மாற்றானது , எதிரானது என்பது வெளிப்படையான உண்மையாக இருப்பினும், "பிறப்பால் ஆரியத்தைச் சேர்ந்த ஒருவர், உணர்வால் திராவிடர் ஆகலாம். ஆரியம் பிறப்பில் இல்லை அது கருத்தில் உள்ளது . திராவிடராய்ப் பிறந்து சாதியத்தை நெஞ்சில் சுமப்போரும் ஆரியரே" என்கின்ற அவருடைய விரிவும் தெளிவும் அவரை சர்வதேசியவாதியாக்குகிறது.
எனவே தான் அவரால், "நாடு என்பது பூகோளப்படம் அல்ல, அங்கு வசிக்கும் மக்களின் உணர்ச்சித் தொகுப்பு" என்று சொல்ல முடிந்தது. சமத்துவம் என்பது எல்லோரையும் சமமாக நடத்துவது அல்ல , எல்லோர்க்கும் "சமவாய்ப்பு" அளிப்பது என்பது தான் இன்றும் அண்ணா வழி திராவிடமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
எம்ஜிஆர் கூறியது போல், அரசியல் உலகில் அண்ணா நமக்கு அறிவூட்டும் கடவுள்" என்னுடைய வாழ்க்கையின் குறிக்கோள் என்றால் அது அண்ணா சுட்டிக்காட்டிய வழியில் நடந்து செல்வது, அண்ணாவின் குறிக்கோள்களுக்குச் செயல்வடிவம் தருவது, நிறைவேற்றப்படாத அண்ணாவின் திட்டங்களை நிறைவேற்றுவது என்பது தான் எனது குறிக்கோள் என்று கூறிச்சென்றார். எனவே அண்ணா வழி திராவிடம் என்பது தமிழ் மக்களின் அரசியலாக வெளிவரும்’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும், அண்ணாவை, அவருடைய முக்கியத்துவத்தை, அவர் கண்ட திராவிட வழியை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் விதமாக "அண்ணா வழி திராவிடம்" என்கின்ற இந்த இதழ் துவங்கப்பட்டிருக்கின்றது என்றும் அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.






















