அதிமுக-பாஜக கூட்டணி: அன்புமணி ராமதாஸ் அதிரடி! 30 தொகுதிகள், ராஜ்ய சபா சீட் அன்புமணியின் பலே பிளான்!
அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இணைய 30 தொகுதிகள் வரை அன்புமணி ராமதாஸ் கேட்டிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இப்போது பிரதான கட்சிகள் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியிருக்கின்றன. துணை முதலமைச்சர் உதயநிதி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக பிரேமலதா விஜயகாந்த், தவெக விஜய் உள்ளிட்டரும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
கூட்டணி குறித்து வியூகம்
திமுகவை பொறுத்தவரை தனது பழைய கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. இதனால் திமுகவிற்கு எதிரான கூட்டணியை உருவாக்க, பாஜக களத்தில் இறங்கியுள்ளது. கடந்த 2019, 2021 ஆகிய தேர்தல்களில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில், இருந்த கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் பாஜக இறங்கியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் இருந்து, அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் பிரதான கூட்டணி கட்சியாக பாமக இருந்து வந்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக வெளியேறிய பிறகும் பாஜகவுடன் பாமக தேர்தலை சந்தித்தது.
அன்புமணியை சந்தித்த பாஜக எம்பி
இந்தநிலையில் பாரதிய ஜனதா கட்சி தேசிய துணை தலைவரும், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பொறுப்பாளருமான வைஜயந்த் பாண்டா எம்.பி. அன்புமணியை கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய போகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கனவே பாமகவில் தந்தை மற்றும் மகனுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், இந்த சந்திப்பு கூடுதல் முக்கியத்துவத்தை பெற்றது.
பாமகவினர் கூறுவது என்ன ?
இதுகுறித்து பாமக வட்டாரத்தில் தொடர்பு கொண்டு விசாரித்தபோது: அன்புமணி தலைமையில் இருக்கும் பாமகதான் உண்மையான பாமக. அன்புமணியிடம்தான் கட்சி மற்றும் மாம்பழச் சின்னம் இருக்கிறது. அதேபோன்று அன்புமணி நடத்திய பொதுக்குழுவிற்கு மட்டுமே, தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என தெரிவித்தனர்.
தொடர்ந்து கூட்டணி குறித்து அவர்களிடம் பேசுகையில், கட்சி மற்றும் நிர்வாகிகள் யாரிடம் இருக்கிறார்களோ? அவர்களிடம் தான் எந்த கட்சியாக இருந்தாலும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும். கூட்டணி கட்சிகள் தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரையும் சமாதானம் செய்ய முயற்சி செய்தாலும், இருவரும் இணைவதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே, இப்போதைய சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக தலைவர் அன்புமணியிடம் தான் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என தெரிவித்தனர்.
அன்புமணியின் எதிர்பார்ப்பு என்ன ?
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைய வேண்டும் என்றால், 30 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவைத் தொகுதி ஒதுக்க வேண்டும் என அன்புமணி நிபந்தனை விதித்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. 2021 தேர்தலைப் போன்று பாமக செல்வாக்கு இல்லாத தொகுதிகளை ஒதுக்க கூடாது.
இந்த முறை பாமகவிற்கு கட்டாயம் கொடுக்க வேண்டிய, 10 தொகுதியின் பட்டியல் கொடுக்கப்படும். அதேபோன்று 50 தொகுதிகளில் பட்டியல் கொடுக்கப்படும். இந்த 60 தொகுதிகளில் இருந்து கட்டாயம் ஒதுக்க வேண்டிய 10 தொகுதிகளை ஒதுக்க வேண்டும், மீதம் இருக்கும் 50 தொகுதிகளில் இருந்து, 20 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என அன்புமணி நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது.






















