அப்பாவுடன் மோதல்... நடைப்பயணம் செல்லும் அன்புமணி.. காரணம் என்ன?
சமூகநீதி என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கும் அரசு தான் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஜூலை 25 தேதி முதல் 100 நாள்கள் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸுடன் நிலவி வரும் மோதலுக்கு மத்தியில் இந்த பயணத்தை அன்புமணி மேற்க்கொள்ளவுள்ளார்.
அன்புமணி நடைப்பயணம்:
தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதை விட, நல்லாட்சி வழங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதில் தான் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்படுவதாகவும், அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது போன்றும் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் தான் தமிழ்நாட்டு அரசு ஈடுபட்டிருக்கிறது. மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதைப் போல தமிழகத்தில் நடைபெற்று வரும் விளம்பர மாடல் அரசால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த வித நன்மையும் ஏற்படப்போவதில்லை என்பது தான் உண்மை.
சமூகநீதி கிலோ என்ன விலை
சமூகநீதி என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கும் அரசு தான் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் 5&க்கும் மேற்பட்ட மாநிலங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. மத்திய அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் போவதாக அறிவித்த பிறகும், மாநிலத்தில் சமூகநீதித் தேவைகளைக் கருத்தில் கொண்டு மீண்டும் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கர்நாடகம் அறிவித்திருக்கிறது. ஆனால், தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அதன் கடமையை தட்டிக்கழித்துக் கொண்டிருக்கிறது.
உச்சநீதிமன்ற வழக்கால் ஆபத்துக்குள்ளாகியிருக்கும் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பது, பல்வேறு சமூகங்களுக்கு அவர்களின் மக்கள் தொகை மற்றும் சமூக பின்தங்கிய நிலை அடிப்படையில் உள் இட ஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட சமூகநீதிக் கடமைகளை குழி தோண்டி புதைக்கிறது திராவிட மாடல் அரசு.
பெண்கள் பாதுக்காப்பு எங்கே?
பள்ளிக்கூடங்கள் தொடங்கி பல்கலைக்கழகங்கள் வரையிலும், சாலைகளில் தொடங்கி ஆலைகள் வரையிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகளை அரசே காக்கும் அவலம் நிலவுகிறது. பெண்களுக்கு எதிரான பிற வன்முறைகளும் தலைவிரித்து ஆடுகின்றன. கல்வி சேவையாக இருந்த நிலை மாறி கொள்ளையாக மாறி விட்டது; அரசு பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை; நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி ஒரு லட்சம் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி வழங்குவதை கைவிட்டு விட்டது. ஐந்தரை லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை, தனியார் வேலைவாய்ப்புகளில் தமிழக மக்களுக்கு 75% இட ஒதுக்கீடு உள்ளிட்ட எந்த வாக்குறுதியும் திமுக அரசால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
பாவத்தை செய்த அரசு:
ஆட்சிக்கு வந்த நான்காண்டுகளில் ஒரே ஒரு புதிய மருத்துவக் கல்லூரி கூட கட்டப்படவில்லை; ஒரே ஒரு மருத்துவ மாணவர் சேர்க்கை இடம் கூட அதிகரிக்கப்படவில்லை; அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை; இலவச மருத்துவ வார்டுகள் படிப்படியாக கட்டண வார்டுகளாக மாற்றப்பட்டு ஏழைகளின் மருத்துவம் பெறும் உரிமை பறிக்கப்படுகிறது. உழவர்களுக்கு ஒன்றுமே செய்யப்படவில்லை. நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களின் கொள்முதல் விலைகளை உயர்த்த மறுக்கும் அரசு, பாசன வசதிகளை செய்து தர தவறிவிட்டது. உழவர்களின் நலன் காக்கும் அரசு என்று கூறிக்கொண்டே அவர்களின் விளைநிலங்களை பறித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் பாவத்தை அரசு செய்கிறது.
ஊரை ஏமாற்றும் நாடகம்
மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டம் தான் அனைத்து வகையான சமூகக் கேடுகளுக்கும் காரணமாக இருக்கிறது என்று தெரிந்தும் கூட அவற்றைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. படிப்படியாக மதுவிலக்கு என்பதெல்லாம் ஊரை ஏமாற்றும் நாடகம் என்பதை உலகமே தெரிந்து வைத்திருக்கிறது. மக்களுக்கு பொதுச்சேவை வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான சட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
சுற்றுச்சூழல் சீரழிவு, போக்குவரத்து வசதி இல்லாமை, தூயக் காற்று கிடைக்காமை போன்றவற்றால் தமிழகம் வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறி வருகிறது. கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் பின்தங்கிக் கிடக்கும் பகுதிகளை முன்னேற்றுவதற்கு எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாததால் தமிழகத்தின் ஒரு பகுதி வளராமல் முடங்கிக் கிடக்கிறது. மொத்தத்தில் முன்னேற்றுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்களால் தமிழ்நாடு ஏமாற்றப்பட்டுள்ளது.
100 நாள் நடைப்பயணம்
திமுக அரசின் இந்த அவலங்கள் குறித்து மக்களிடம் விழிப்ப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும், மக்களிடமிருந்து மோசமான ஆட்சியால் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்க வேண்டியதும் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலையாயக் கடமை ஆகும். அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் பசுமைத் தாயகம் நாளான ஜூலை 25&ஆம் தேதி தொடங்கி, தமிழ்நாடு நாளான நவம்பர் ஒன்றாம் தேதி வரை மொத்தம் 100 நாள்கள் கால அளவில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணம் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தொடங்கவுள்ளது.






















