தமிழக பாஜக தலைவர் ரேசில் ட்விஸ்ட்.. நயினாரை ஓவர்டேக் செய்த தென்காசிக்காரர்.. கைகாட்டிய ஆர்எஸ்எஸ்
அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற ஒருவருக்கு தலைவர் பதவி கொடுப்பதா என நயினார் நாகேந்திரனுக்கு ஆர்.எஸ்.எஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இளைஞரான அண்ணாமலைக்கு பதவி கொடுத்து, இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது போல் அதேபோல ஒரு இளைஞருக்கு பதவி கொடுக்கலாம் என ஆர்.எஸ்.எஸ் தரப்பில் இருந்து டெல்லி தலைமைக்கு ஆலோசனை கொடுத்ததாக கூறப்படுகிறது.

தமிழக பாஜக தலைவருக்கான போட்டியில் நயினார் நாகேந்திரனை தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் ஓவர்டேக் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமிழக பாஜக தலைவருக்கான போட்டியில் தான் இல்லை என அண்ணாமலை தெரிவித்த நிலையில், அந்த பதவி நயினார் நாகேந்திரனுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதில், திடீர் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இன்டெல் நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு, இந்தியா திரும்பி, தென்காசியில் பாஜகவுக்காக தீவிரமாக வேலை செய்து வரும் ஆனந்தன் அய்யாசாமிக்கு தமிழக பாஜக தலைவர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
மீண்டும் இளைஞருக்கு வாய்ப்பு தரும் பாஜக:
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களத்தில் தீவிரமாக இயங்கி வருகிறது பாஜக. தேர்தலில் குறிப்பிடத்தகுந்த இடங்களில் வெற்றி பெற வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறது. திமுக ஆட்சியை வீழ்த்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில், மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான வேலையை தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, அதிமுகவுடன் தொடர் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்த அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து தூக்க முடிவு செய்தது.
இதனை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுகவின் மூத்த தலைவர்கள், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான அமித் ஷாவை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது கூட, அண்ணாமலை பங்கேற்கவில்லை.
அதிமுக - பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியான நிலையில், தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை தூக்கப்படுவதும் உறுதியானது. இதை அவரே உறுதியும் செய்தார். இதையடுத்து, தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் என்ற கேள்வி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது.
யார் இந்த ஆனந்தன் அய்யாசாமி?
அப்போது, பாஜக சட்டமன்றக் குழுத் தலைவராக உள்ள நயினார் நாகேந்திரனுக்கு பாஜக மாநில தலைவர் பதவி கொடுக்கலாம் என பேச்சு அடிப்பட்டது. ஏற்கனவே, அதிமுகவில் இருந்த காலத்தில் அதன் மூத்த தலைவர்களுடன் நயினார் நாகேந்திரன் இணக்கமாக இருந்தார். எனவே, தன்னுடைய தனிப்பட்ட நட்பின் மூலம் அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையை நயினார் நாகேந்திரன் சுமூகமாக நடத்துவார் என டெல்லி தலைமை கருதி வந்தது.
இந்த நிலையில், அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற ஒருவருக்கு தலைவர் பதவி கொடுப்பதா என ஆர்.எஸ்.எஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இளைஞரான அண்ணாமலைக்கு பதவி கொடுத்து, இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது போல் அதேபோல ஒரு இளைஞருக்கு பதவி கொடுக்கலாம் என ஆர்.எஸ்.எஸ் தரப்பில் இருந்து டெல்லி தலைமைக்கு ஆலோசனை கொடுத்ததாக கூறப்படுகிறது.
அந்த வகையில், தென்காசி மாவட்ட பாஜக தலைவராக உள்ள ஆனந்தன் அய்யாசாமிக்கு தமிழக பாஜக தலைவர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆதரவு மட்டும் இல்லாமல், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் ஆதரவும் ஆனந்தன் அய்யாசாமிக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த மக்களவை தேர்தலின்போதே, தென்காசி மக்களவை தொகுதி இவருக்கு ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசியில் அது கூட்டணி கட்சியான ஜான் பாண்டியனுக்கு தரப்பட்டது. அண்ணாமலை எப்படி ஐபிஎஸ் பதவியில் துறந்துவிட்டு அரசியலில் குதித்தாரோ, இவரும் அதேபோல், அமெரிக்காவில் இன்டெல் நிறுவனத்தில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பினார்.
சில ஆண்டுகளுக்கு முன்புதான் பாஜகவில் இணைந்தார். தென்காசி வாசுதேவநல்லுாரைச் சேர்ந்த இவர், பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஜோஹோ நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்புவுக்கு நெருக்கமானவராக கருதப்படுகிறார்.





















