செங்கோட்டையன் TVK-யில் இணைந்ததால் கொந்தளித்த அதிமுக! சிங்கை ராமச்சந்திரன் கடும் விமர்சனம்!
"தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ள செங்கோட்டையனுக்கு, அதிமுக மாணவரணி மாநில தலைவர் சிங்கை ராமச்சந்திரன் பதில் அளித்துள்ளார்"

அதிமுகவின் மிக மூத்த தலைவர்களின் ஒருவராக இருந்து வந்த செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழக வெற்றி கழகத்தில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு மாநில நிர்வாக குழு அமைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் ரியாக்ஷன் என்ன ?
அதிமுக மாணவர் அணி மாநிலத் தலைவர் சிங்கை ராமச்சந்திரன் அவர்கள், தவெகவில் இணைந்திருக்கும் செங்கோட்டையன் குறித்துப் பேசிய கருத்து வைரலாகி வருகிறது. ராமச்சந்திரன் பேசுகையில், “யார் எந்த இயக்கத்திலும் சேரலாம் ஆனால் திமுகவும், அதிமுகவும் ஒன்றுதான் என்று நீங்கள் சொன்னதில் இருந்து உங்கள் மீதான மரியாதை குறைந்துவிட்டது. திமுகவை எதிர்த்துதான் இந்த இயக்கம் உருவானது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு தொடர்ச்சியாகக் குடைச்சல் கொடுத்த கட்சிதான் திமுக. நீங்கள் 10 முறை தொகுதியில் ஓட்டுக் கேட்கும்போதும் திமுகவை எதிர்த்துதான் ஓட்டுக் கேட்டிருக்கிறீர்கள். இரண்டும் ஒன்றுதான் என்பது தெரிந்து பொய்யா சொன்னீர்கள்?
தொண்டர்களை நம்பி தான் கட்சி
எடப்பாடியார் ஆட்சியில் நீங்கள் அமைச்சராக இருந்தபோது பல்வேறு நல்லத் திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறீர்கள் இப்போது நீங்களே மாற்றிப் பேசுகிறீர்கள். ஆனால் தொண்டர்கள் ஒருபோதும் மாறமாட்டார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா மறைந்தபோது கட்சி அவ்வளவுதான் என்ற பலர் எண்ணியபோதும் கட்சி நிலைத்திருப்பதற்குத் தொண்டர்கள் தான் காரணம். அதிமுக சரித்திரத்திலேயே எதிர்க்கட்சியாக 75 சீட் ஜெயிப்பதற்கும் தொண்டர்கள் தான் காரணம். எனக்குப் பின்னாடியும் இந்த இயக்கம் 100 ஆண்டுகள் நிலைத்திருக்கும் என்று ஜெயலலிதா எந்த தனி மனிதனையும் குறிப்பிட்டுச் சொல்லவிலை, தொண்டர்களை நம்பித்தான் சொன்னார்.
நாமக்கல்லில் இருந்து செல்வகணபதி, மதுரையிலிருந்து சேடப்பட்டி முத்தையா, ஈரோட்டில் இருந்து தோப்பு வெங்கடாசலம் போன்ற எத்தனை பேரையோ திமுக தூக்கியும் அங்கெல்லாம் அதிமுக ஜெயிப்பதற்கும் தொண்டர்கள் தான் காரணம். வேட்பாளர் வணக்கம் வைப்பதால் யாரும் ஓட்டுப்போடுவதில்லை. திமுக குடும்பக் கட்சி, அதிமுக ஜனநாயக கட்சி. அதிமுக திட்டங்கள் மக்களுக்கானது, திமுக திட்டங்கள் குடும்பத்துக்கானது. அதிமுகவில் தவறு செய்யவே அஞ்சுவார்கள், திமுகவில் அப்படியில்லை. திமுக தீயசக்திதான். அதிமுகவின் 2 கோடி தொண்டர்களும் ஒன்றிணைந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நீங்கள் சொல்லும் தூய ஆட்சியைக் கொடுக்கப்போவது உறுதி!” என்றார்.





















