AIADMK Issue : ’ஒற்றைத் தலைமை பிரச்னையால் சிக்கல்’ உள்ளாட்சி இடைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட நெட்டி தள்ளப்பட்ட அதிமுகவினர்..!
ஓபிஎஸ் – ஈபிஎஸ் கையெழுத்திட்ட ஏ மற்றும் பி படிவங்களை, வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாளான நாளைக்குள் ( ஜுன் 30 ஆம் தேதி ) தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதிமுக வேட்பாளர்கள் சமர்பிக்க வேண்டும்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை பூதாகரமாக மாறியிருப்பதால், தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுகவினரின் வேட்பு மனு படிவத்தில் ஒபிஎஸ் – ஈபிஎஸ் இணைந்து கையெழுத்து போடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால், அதிமுகவினர் இரட்டை இலை சின்னம் இல்லாமல் சுயேட்சையாக போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாவட்ட கவுன்சிலர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலும் அதேபோல், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளை பொறுத்தவரை 2 மாநகராட்சி கவுன்சிலர்கள், 2 நகராட்சி கவுன்சிலர்கள், 8 பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட 510 பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவிருக்கிறது.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் கட்சியின் சின்னங்களை தங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி ‘ஏ’ மற்றும் ‘பி’என்ற இரண்டு படிவங்களை தேர்தல் விதிமுறைபடி சமர்பிக்க வேண்டும். அந்த படிவங்களில் கட்சியின் தலைவர் அல்லது அந்த கட்சிகளின் பொதுச்செயலாளர் கையெழுத்து இட வேண்டும் என்பது விதி.
அதிமுகவை பொறுத்தவரை வேட்பு மனு படிவங்களில் ஒபிஎஸ் – ஈபிஎஸ் இணைந்து கையெழுத்து போட்டால் மட்டுமே செல்லும் என்ற நிலை இருக்கும் நிலையில், தற்போது அதிமுகவில் ஒபிஎஸ் – ஈபிஎஸ் இரு துருவங்களாக பிரிந்து நிற்பதாலும், பொதுக்குழுவில் இவர்களின் தேர்வுக்கு ஒப்புதல் பெறாத நிலையிலும், அந்த பதவிகள் காலாவதியாகிவிட்டதாக சிவி சண்முகம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அறிவித்திருப்பதாலும் வேட்பு மனு படிவத்தில் யார் கையெழுத்து போடுவார்கள் என்ற குழப்பமும் சிக்கலும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஓபிஎஸ் – ஈபிஎஸ் கையெழுத்திட்ட ஏ மற்றும் பி படிவங்களை, வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாளான நாளைக்குள் ( ஜுன் 30 ஆம் தேதி ) தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதிமுக வேட்பாளர்கள் சமர்பிக்க வேண்டும். ஆனால், இருவரும் இணைந்து கையெழுத்து போடுவது தற்போதைக்கு குதிரை கொம்பாக இருப்பதால், அதிமுக வேட்பாளர்கள் வேறு வழியின்றி சுயேட்சைகளாகவும் இரட்டை இலை சின்னத்திற்கு பதிலாக தேர்தல் ஆணையம் ஒதுக்கும் வேறு ஒரு சின்னத்திலும் போட்டியிடும் கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் அதிமுக வேட்பாளர்கள் தலைமையின் யல்பாடுகளால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.