VIndhiya against CM stalin : உங்களுக்கு வந்தா ரத்தம்... மக்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? - முதல்வருக்கு கேள்வி எழுப்பிய விந்தியா!
யார் வேணா அர்ச்சகர் ஆகலாம் அது சமூக நீதி, ஆனா என் குடும்பம் மட்டும்தான் திமுக தலைவர் ஆகலாம் இது மு.க.ஸ்டாலின் நீதி.. -விந்தியா
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ’உங்களுக்கு வந்தா ரத்தம்; மக்களுக்கு வந்தா தக்காளி சட்னியா’ என அதிமுகவின் துணை கொள்கைப்பரப்புச் செயலாளர் நடிகர் விந்தியா கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டத்தின் அடிப்படையில் அர்ச்சகருக்கான பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாதார் 27 பேருக்கு அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலின் கோயில்களில் பணி புரிவதற்கான பணி நியமன ஆணையை வழங்கினார். இந்த நியமனம் ஒரு பக்கம் பெரிய அளவிலான ஆதரவைப் பெற்றாலும் மற்றோரு பக்கம் பரம்பரையாகவும் சாதிய ரீதியாகவும் கோயில்களில் பணிபுரியும் சிலரால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த விமர்சகர்கள் பட்டியலில் தற்போது அதிமுகவின் துணை கொள்கை பரப்புச் செயலாளர் நடிகர் விந்தியாவும் இணைந்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், ’யார் வேணா அர்ச்சகர் ஆகலாம் அது சமூக நீதி, ஆனா என் குடும்பம் மட்டும்தான் திமுக தலைவர் ஆகலாம் இது மு.க.ஸ்டாலின் நீதி..
உங்களுக்கு வந்தா ரத்தம் மக்களுக்கு வந்தா தக்காளி சட்னியா!’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற தமிழ்நாடு அரசின் அரசாணையின் கீழ் அர்ச்சகருக்கான பயிற்சி முடித்த அனைவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் பணி நியமனத்துக்கான ஆணைகளை வழங்கினார். இந்துசமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களில் பயிற்சி முடித்த இந்த அர்ச்சகர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இதன்படி அர்ச்சகர் பயிற்சிப்பள்ளிகளில் பயிற்சி முடித்த 27 அர்ச்சகர்கள் உட்பட மொத்தம் 58 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.அர்ச்சகர்கள் கோயில் பணியாளர்கள் ஓதுவார்கள் உட்பட மொத்தம் 216 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. சென்னை மயிலாப்பூரின் கபாலீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்வில் முதன்மைச் செயலாளர் உதயசந்திரன், அறநிலயத்துறை அமைச்சர் சேகர் பாபு, பேரூர் ஆதீனம், குன்றகுடி அடிகளார், ஆன்மிக சொற்பொழிவாளர் சுகிசிவம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் 1970ல் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.
யார் வேணா அர்ச்சகர் ஆகலாம் அது சமூக நீதி, ஆனா என் குடும்பம் மட்டும்தான் திமுக தலைவர் ஆகலாம் இது மு.க.ஸ் நீதி..
— Vindhyaa (@vindhyaAiadmk) August 18, 2021
உங்களுக்கு வந்தா ரத்தம் மக்களுக்கு வந்தா தக்காளி சட்னியா ! @AIADMKITWINGOFL @AIADMKOfficial @
பணிநியமனம் செய்வதற்காக பொறுப்பில் ஏற்கெனவே இருந்த பலர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.இதற்கு பதிலளித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,
”யாரையும் கோயிலில் இருந்து வெளியேற்றும் எண்ணமில்லை என்றும், முறையாக பயிற்சி பெற்ற 58 பேர் அர்ச்சகர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்” என செய்தியாளர்களிடம் கூறினார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு சென்னையில் செய்தியாளர்களுக்கு விளக்கம் கொடுத்தார். அந்தப் பேட்டியில், “திருக்கோயில்களில் பல ஆண்டுகளாக பூஜைகளில் ஈடுபட்டு உள்ள அர்ச்சகர்களுக்கு பாதிப்பு இல்லாமல் அனைத்து சாதியினர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளனர். கோயில்களில் ஏற்கெனவே உள்ள பட்டாச்சாரியார்களையோ அர்ச்சகர்களையோ யாரையும் பணியில் இருந்து நீக்கும் திட்டம் இல்லை. வயது மூப்பிற்கு பின்பும் கோயில்களில் அர்ச்சகர்கள் பணியாற்றி வருகின்றனர். ஏற்கெனவே அர்ச்சகர்களாக உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படவில்லை. முறையாக பயிற்சி பெற்ற 58 பேர் அர்ச்சகர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.ஆனால், 58 அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக சிலர் தவறான பிரச்சாரம் செய்கின்றனர். கோயில்களில் யாரும் பணியை இழந்திருந்தால் எங்களிடம் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் சட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை எங்கும் மீறவில்லை. மிரட்டலுக்கு பணியும் அரசு அல்ல திமுக அரசு. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான முன்னேற்றத்துக்கு பாடுபட்டார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அது தவறென்றால், அந்த தவறை முதல்வர் ஸ்டாலினும் செய்வார் ” என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.