AIADMK Office Sealed: அதிமுக அலுவலகத்திற்கு சீல்: இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு அனல் பறக்கும் வாதம்!
முன்னாள் முதலமைச்சரே ஒரு கும்பலை கூட்டிக்கொண்டு தலைமை அலுவலகத்தை தாக்கியது துரதிஷ்டமானது.
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கில் இபிஎஸ், ஓபிஎஸ் மாறி அனல்பறக்கும் வாதத்தில் ஈடுபட்டதால் நீதிமன்ற வளாகமே பரபரப்பாக காணப்பட்டது.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்ட சூழலில் அன்றைய தினம் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் தலைமை கழகத்திற்கு தன்னுடைய ஆதரவாளர்களுடன் சென்றார். அப்போது அங்கிருந்த இபிஎஸ் ஆதரவாளர்களுக்கும், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பும் கற்களை வீசியும், அங்கிருந்த வாகனங்களின் கண்ணாடியை உடைத்தும் மோதலில் ஈடுபட்டதால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.
மோதலுக்கு பின் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் அதிமுக தலைமை அலுவலகம் வந்தது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் ஆதரவாளர்களை விரட்டியடித்தனர். அங்கிருந்த இபிஎஸ் படங்கள் கிழித்து தீ வைத்து எரிக்கப்பட்டன.அதனைத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர் சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். இதனிடையே அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி இபிஎஸ் -ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணை தொடங்கியது. அப்போது இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு அனல் பறக்கும் வாதத்தில் ஈடுபட்டனர்.
இபிஎஸ் தரப்பு
- முன்னாள் முதலமைச்சரே ஒரு கும்பலை கூட்டிக்கொண்டு தலைமை அலுவலகத்தை தாக்கியது துரதிஷ்டமானது. காவல்துறையின் தோல்வியையே இந்த சம்பவம் காட்டுகிறது. ஓ.பி எஸ் ஆட்களை காவல்துறையினர் தடுக்கவில்லை.
-
தொலைக்காட்சிகளில் வந்த நேரலைகளை பார்த்தாலே ஓ.பி.எஸ் ஆட்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தியது தெரியும். கல், கம்பு, இரும்பு உள்ளிட்ட பொருட்களை கொண்டு தாக்கினர்.
- கட்சி அலுவலகம் ஒன்றும் தனிநபர் சொத்தல்ல. தற்போது ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளரும் அல்ல. அவரை கட்சியில் இருந்து நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அலுவல சொத்து தொடர்பாக எந்த பிரச்சினையும் இல்லை. அது அதிமுக கட்சி வசம் உள்ளது. கட்சி விதிப்படி தலைமை கழக செயலாளர் தான் தலைமை அலுவலகத்தில் பொறுப்பாளர் என தெரிவிக்கப்பட்டது.
ஓபிஎஸ் தரப்பு
- கட்சி அலுவலகத்திற்குள் நுழைய கூடாது என எந்த நீதிமன்ற உத்தரவும் கிடையாது. கட்சி அலுவலத்திற்குள் நுழைய எனக்கும் உரிமை உள்ள போது என்னை உள்ளே நுழைய விடாமல் கதவை பூட்டி வைத்தனர். பொருளாளரான என்னை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர். சீல் வைத்த உத்தரவுக்கு நான் எதிர்ப்பு தான் தெரிவிக்கிறேன்.
அரசு தரப்பு
- மியூசிக் அகாடமியில் இருந்து அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சி அலுவலகம் வரை 300 போலீசார் நிறுத்தப்பட்டனர். நாங்கள் காலை 8:30 மணியளவில் OPS ஐ நிறுத்த முயற்சித்தோம், ஆனால் அவர் ஒரு கார்டினேட்டர் என்று கூறி, அலுவலகத்திற்குச் செல்ல தனக்கு உரிமை உண்டு என்று கூறி பூட்டை உடைத்தார். பூட்டை உடைத்து திறந்து பார்த்தபோது, இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
- நாங்கள் சுமார் 9 மணிக்கு லத்தி சார்ஜ் செய்யத் தொடங்கினோம், அது காலை 10 மணிக்கு வன்முறை அதிகரித்தது.
நீதிபதி
- சண்டையிட விரும்பினால் கால்பந்து மைதானத்தை வாடகைக்கு எடுக்கலாம். மோதலில் ஈடுபட்டவர்களை சிசிடிவியை பயன்படுத்தி கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீங்கள் காலை 8:30 மணி முதல் என்ன நடந்தது என்பது குறித்த நாளை மாலை அறிக்கை தாக்கல் செய்யுங்கள் என அரசு தரப்புக்கு நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.