" இன்னும் 4 அமாவாசை தான் " ஆர்பாட்டத்தில் ஜெயகுமார் சொன்னது இது தான்
திமுகவுக்கு இன்னும் 4 அமாவாசை தான் இருக்கிறது என சென்னையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜெயக்குமார் ஆருடம்

SIR பணி - மாநகராட்சி ஆணையாளரை கண்டித்து ஆர்பாட்டம்
சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளில் திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநகராட்சி கமிஷனரை கண்டித்து அதிமு.க சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் ஜெயக்குமார், பாலகங்கா, விருகை ரவி , ஆதிராஜாராம் தி. நகர் சத்யா , வேளச்சேரி அசோக் , ராஜேஷ் கந்தன் , வி.எஸ் பாபு மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ;
சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளில் விடியா திமுக அரசு சர்வாதிகாரத்தோடு அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்டு, முழுக்க முழுக்க அதைச் சிதைக்கின்ற வகையில் செயல்படுவதை கண்டித்தும், அதற்கு துணை போகும் சென்னை மாநகர ஆணையரை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
SIR பணிகள் கடந்த 2002-ம் ஆண்டு திமுக மத்திய அரசுக்கு ஆதரவு கொடுத்த காலத்தில் கொண்டு வரப்பட்டது. அன்றைக்கு வாயை மூடிக் கொண்டு இருந்த ஸ்டாலின் இப்போது எதிர்க்கிறார்.
வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்களின் பெயரையும், விலாசம் மாறியவர்களின் பெயரையும் நீக்குங்கள் என்று நாங்களும் பல காலமாக தேர்தல் கமிஷனிடம் கேட்டு வருகிறோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதை இந்திய தேர்தல் கமிஷனிடம் சொன்ன பிறகு அவர்கள் தீவிர திருத்தத்தைச் செய்கிறார்கள். இதனால் இறந்தவர்களின் வாக்குகள் போய்விடும். அது போக வேண்டிய வாக்குகள் தானே ?
இறந்தவர்களின் வாக்குகளை நீக்குவதுடன், வாக்குரிமை இல்லாமல் இருப்பவர்களுக்கு வாக்குரிமை கொடுப்பது தான் ஜனநாயகத்தின் உண்மையான நோக்கம்.
திமுக - விற்கு இறந்தவர்கள் , முகவரி மாறி சென்றவர்கள் வாக்கு தான் கை கொடுக்கும்
நம் நாட்டில் நிறைய பேருக்கு வாக்குகள் இல்லை. ஆனால் இறந்தவர்களுக்கும் விலாசத்தில் இருந்து மாறியவர்களுக்கும் வாக்குகள் உள்ளன. இதைப் பயன்படுத்தி திமுகவினர் தேர்தல் நாளில் 4 மணியில் இருந்து 5 மணிவரை கள்ள ஓட்டு போட்டு வந்தனர். ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவுக்கு கைகொடுக்கும் ஒரே ஆயுதம் இந்த இறந்தவர்கள் மற்றும் விலாசம் மாறிப் போனவர்களின் வாக்குகள் தான்.
கடந்த உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட்டவர்களை பிடித்துக் கொடுத்ததற்காக என் மீதே பொய் வழக்கு போட்டார்கள்.
மாநகர ஆணையரா ? இல்லை திமுகவின் மாவட்டச் செயலாளரா ?
கள்ள ஓட்டை நம்பியே திமுக இருப்பதால் தான் இந்த SIR அவர்களுக்கு கசக்கிறது. அதனால் தான் நாம் SIR வேண்டும் என்கிறோம். திமுகவினர் SIR வேண்டாம் என்கிறார்கள். SIR வேண்டாம் என்றால் கட்சிக்காரர்களிடம் இது தொடர்பான பணிகளுக்கு போக வேண்டாம் என்று சொல்ல வேண்டியது தானே ? ஒரு பக்கம் ஒப்புக்கு இதை எதிர்த்து விட்டு , மறுபக்கம் இதில் கட்சிக்காரர்களை களம் இறக்கி விட்டு திமுக தீவிரமாக கவனம் செலுத்துகிறது.
இந்த விஷயத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. அதற்கு சென்னை மாநகர ஆணையர் பக்கபலமாக இருக்கிறார். அவர் மாநகர ஆணையரா ? இல்லை திமுகவின் மாவட்டச் செயலாளரா ? நாம் போன் செய்தால் கூட அவர் எடுப்பதில்லை. துப்புரவு பணியாளர்களையும், எழுதப் படிக்க தெரியாதவர்களையும் 2 அமைச்சர்கள் சொல்படி பி.எல்.ஓவாக போட்டிருக்கிறார் மாநகர ஆணையர். அவர்களுக்கு படிவத்தை நிரப்ப தெரியவில்லை.
4 அமாவாசை தான் இருக்கு
தேர்தல் ஆணையம் SIR கொண்டு வந்த நோக்கத்தை சிதைக்கின்ற வகையில் திமுக செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் திமுக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் மாநகர ஆணையர் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.
ஸ்டாலின் அரசையும், மாநகர ஆணையரையும் கண்டிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மாநகர ஆணையருக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இன்னும் 4 அமாவாசை தான் இருக்கு. மீண்டும் அதிமுக அரசு எடப்பாடி பழனிசாமி தலைமையில் மலரும். ஆளும் கட்சிக்கு துதிபாடினால் அதற்குரிய தண்டனை கண்டிப்பாக கிடைக்கும்.
வாக்காளர் திருத்தப் பணிகளை நியாயமாக செய்யுங்கள். பி.எல்.ஓக்களை படித்தவர்களாக போடுங்கள். வீடு வீடாக அவர்களை போகச் சொல்லுங்கள். திமுகவினர் அந்த பணிகளை செய்தால் அ.தி.மு.க வினரின் படிவங்களை கிழித்துப் போட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் மாவட்ட ஆணையர் இந்த பணியில் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார். இந்த கூட்டத்தை பார்த்தாவது திருந்துங்கள்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் ;
நாங்கள் எல்லா மாவட்டங்களிலும் சில தொகுதிகளில் 10 பூத்களை எடுத்து ஒரு ஆய்வை மேற்கொண்டோம். ராயபுரத்தில் 1 லட்சத்து 98 ஆயிரம் வாக்குகள் உள்ளன. திரு.வி.க நகரில் 2 லட்சத்து 6 ஆயிரம் வாக்குகள் உள்ளன. இதில் ராயபுரத்தில் 10 பூத்களில் மட்டும் 1,700 வாக்குகள் இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்களின் வாக்குகளாக உள்ளது. 10 பூத்துகளிலேயே இப்படி என்றால் அங்குள்ள 181 பூத்களில் எத்தனை ஓட்டுகள் இருக்கும் ? ஒவ்வொரு தொகுதியிலும் இறந்தவர்கள், விலாசம் மாறிச் சென்றவர்களின் வாக்குகள் சராசரியாக சுமார் 25 ஆயிரம் இருக்கிறது.
இது தேவையா ? நியாயமாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் ஆனால் திமுக கள்ள ஓட்டை நம்புகிறது. அதனால் தான் தேர்தல் கமிஷனின் முடிவு அவர்களுக்கு வேப்பங்காயாக கசக்கிறது என்றார்.





















