AIADMK Meeting: சாம்பாரும் பொரியலும்தான்... மதிய உணவால் அப்செட் ஆன பொதுக்குழு உறுப்பினர்கள்!
பொதுக்குழுவுக்கு வந்திருந்த அதிமுக உறுப்பினர்களுக்கு மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக மதிய உணவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் வழங்கப்படும் மதிய உணவு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. இந்த வழக்கில் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி பொதுக்குழுக்கூட்டம் நடத்த அனுமதியளித்தார். இதனைத்தொடர்ந்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற கூடாது என்று உத்தரவிட்டனர்.
இதனிடையே இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பொதுக்குழுவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க ஸ்ரீவாரு மண்டபத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு மஞ்சள் வேட்டி வெள்ளை சட்டையில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்துள்ளார்.
அதேசமயம் பொதுக்குழு தொடர்பான வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம். ஆனால் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் மாற்றுக்கருத்து இல்லை. மேல்முறையீடு செய்வது குறித்து தலைமை அறிவிக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். இதேபோல் கூட்டத்தில் பங்கேற்க வந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல்கள் 100% கடைபிடிக்கப்படும் என்றும், தீர்ப்பினால் எந்த பின்னடைவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் நிகழ்ச்சி நடைபெறும் வானகரத்தில் சாலையின் இருபுறமும் தொண்டர்கள் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முதலில் தனது காரில் புறப்பட்டார். அதேபோல் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது பிரச்சார வாகனத்தில் வானகரம் நோக்கி புறப்பட்டார். வழியில் தொண்டர்கள் மலர் தூவி வரவேற்ற நிலையில் இருவரின் காரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்து பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு முதலில் வந்தார். மேலும் கூட்டம் நடைபெறும் அரங்கினுள் ஓ.பன்னீர்செல்வம் நுழைந்த போது ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அதேசமயம் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் இபிஎஸ் ஆதரவாளர்களும் மாறி மாறி கோஷங்களை எழுப்பிய வரும் நிலையில் அவர்களை சமாதானப்படுத்த முன்னாள் அமைச்சர்கள் முயற்சித்தனர்.
இந்நிலையில் பொதுக்குழுவுக்கு வந்திருந்த அதிமுக உறுப்பினர்களுக்கு மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக மதிய உணவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கிட்டதட்ட 5 ஆயிரம் பேருக்கு தயாரிக்கப்பட்ட உணவில் சாதம், உருளைக்கிழங்கு பொரியல், கோஸ் கேரட் பொரியல், அவியல், அப்பளம், ஊறுகாய், வத்தக்குழம்பு,ஜாங்கிரி,சாம்பார்,தயிர் சாதம், வத்தக்குழம்பு,ரசம்,மோர் மிளகாய்,பாதாம் கீர்,வெஜ் புலாவ், பருப்பு வடை ஆகியவை இடம் பெற்றுள்ளது.
ஏற்கனவே ஒற்றை தலைமை பிரச்சனையில் இரு தரப்பு உறுப்பினர்களும் மாறி மாறி கூச்சல் எழுப்பி வரும் நிலையில், இவ்வளவு செலவு செய்து வந்ததற்கு பிரியாணி கொடுப்பீர்கள் என எதிர்பார்த்தால் இப்படி சைவ உணவு போட்டு ஏமாற்றுகிறீர்களே என பொதுக்குழுவுக்கு வந்த உறுப்பினர்கள் சிலர் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்