(Source: ECI/ABP News/ABP Majha)
EPS Meet TN Governor: தி.மு.க. ஆட்சியில் பேனரில் இப்படி ஒரு ஊழலா? டாஸ்மாக்கிலும் ஊழல்..! ஆளுநரிடம் இபிஎஸ் பரபரப்பு புகார்..!
திமுக ஆட்சியில் அரசு விளம்பரங்களுக்கான பேனரிலேயே பெரும் ஊழல் ஏற்பட்டுள்ளதாக, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவியை, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, கடம்பூர் ராஜு, கே.பி. முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு:
ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் நடக்கும் மோசமான சம்பவங்களை ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றது என்றார். திமுக ஆட்சியின் 18 மாத காலதில், சட்ட ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. எங்கு பார்த்தாலும், கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமையை அன்றாடம் பார்க்க முடிகிறது. திறமையற்ற பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆள்வதாலேயே இந்த நிகழ்கள் நடைபெறுகிறது.
மத்திய உளவுத்துறை தகவல் அளித்தும், மாநில அரசு முறையான நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே, கோவை சிலிண்டர் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதிருஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. உரிய முறையில் அரசு கவனம் செலுத்தி இருந்தால் கோவை விபத்தை தவிர்த்து இருக்கலாம், அதை செய்யததால் இது ஒரு திறமையற்ற அரசு என்பது நிரூபணமாகியுள்ளது.
கனியமூர் பள்ளி விவகாரம்:
கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி பலியானது தொடர்பாக, பெற்றோர் புகார் அளித்தும் காவல்துறையோ, மாவட்ட நிர்வாகமோ விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாகவே மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டு அந்த வன்முறை நிகழ்ந்ததாகவும், அதற்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் எனவும் கூறினார்.
தமிழகத்தில் போதைப்பொருள்:
அரசின் நிர்வாக குறைபாடு காரணமாக, அண்டை மாநிலத்தில் இருந்து போதைப்பொருள் கொண்டு வரப்படுவதை தடுக்க முடியவில்லை. தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் சீரழியும் சூழல் நிலவுகிறது. காவல்துறை முறையாக செயல்படாமல், உளவுத்துறை செயலிழந்து இருப்பதால், தமிழகத்தில் போதைப்பொருள் தங்கு தடையின்றி கிடைக்கிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் மனு வழங்கியுள்ளோம்.
எது திராவிட மாடல்? - ஈபிஎஸ்
திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. கமிஷன், கலெக்ஷன் மற்றும் கரப்ஷன் என்பது தான் திராவிட மாடல். லஞ்சம் இல்லாத துறையே இல்லை.
மருந்துகள் கையிருப்பு இல்லை:
அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது என்பதை அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளதார். நோய் எதிர்ப்பு மருந்து உள்ளிட்ட மருந்துகள் கையிருப்பில் இல்லாத சூழல் உள்ளது. மருந்து கொள்முதலில் மிகப்பெரிய ஊழல் நடைபெறுகிறது. காலாவதியான மருந்துகள் பயன்படுத்துவதன் மூலம், இந்தியாவிலேயே சிறந்த சிகிச்சை அளிக்க கூடிய மாநிலமான தமிழகத்திற்கு திமுக ஆட்சியால் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.
பேனரில் நடைபெறும் ஊழல்?:
மத்திய அரசு மூலம் ஊராட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கான, நிதியில் உள்ள உபரி நிதியை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவு மூலம், உள்ளாட்சி அமைப்புக்ளுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது. உள்ளாட்சி அமைப்பில் முடிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் பணிகளை விளம்பரப்படுத்துவதற்கான, ரூ.350 மதிப்பிலான பேனருக்கு ரூ.7,906 அரசு தரப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான பேனர் விளம்பரத்திற்கான ஒப்பந்தத்தை மாவட்ட வாரியாக, குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும் அரசு வழங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளது.
மதுவிற்பனையில் ஆயிரம் கோடிகளில் மோசடி:
பணிகள் நிறைவு பெறுவதற்கு முன்பாகவே திமுக ஆட்சியில், ஒப்பந்தப்பணிகளுக்கான தொகை விடுவிக்கப்படுகிறது. 24 மணி நேரமும் பார்கள் செயல்படுவதோடு, சட்டவிரோதமாக பல பார்கள் செயல்படுகிறது. மதுபான ஆலைகளில் இருந்து கலால் வரி செலுத்தாமல், நேரடியாக மதுபானங்கள் பார்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுகின்றன. இதனால் அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆளுநர் உறுதி - ஈபிஎஸ்
ஆன்லைன் ரம்மிக்கு எதிராக தமிழக அரசின் மசோதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.மனுக்களை படித்து பார்த்து விசாரனை நடத்தப்படும் என ஆளுநர் உறுதியளித்துள்ளார்.
ஆளுநரின் செயல்பாடு நன்றாக உள்ளது - ஈபிஎஸ்
தங்ளுக்கு சாதகமாக செயல்பட்டால் நல்லவர் என கூறுவதும், தவறுகளை சுட்டிக்காட்டினல் ஆளுநரை மோசம் என்பதும் திமுகவிற்கு வழக்கம். ஆளுநரின் செயல்பாடு நன்றாக உள்ளது, அதன் காரணமாகவே திமுகவில் இருந்து கூக்குரல் எழுகிறது. அரசின் செயல்பாட்டில் ஆளுநரின் தலையீடு இல்லை. அரசாங்கத்தின் நிலை எப்படி உள்ளது என்பதை, கூட்டுறவுத்துறை மீது நிதியமைச்சர் கூறிய குற்றச்சாட்டின் மூலம் திமுகவே உறுதிப்படுத்தியுள்ளது எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.