ADMK: என்னையை எதிர்த்தால் செங்கோட்டையன் கதி தான்.! மாவட்ட செயலாளர்களை அலற விடப்போகும் எடப்பாடி பழனிசாமி
ADMK EPS : செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில், இபிஎஸ் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகளை எச்சரிக்கும் வகையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாத காலமே உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது பலம் வாய்ந்த கூட்டணியாக திமுக அணி உள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் அதிமுகவும் திட்டம் தீட்டி வருகிறது. இதற்காக முதல் கட்டமாக பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது. அடுத்ததாக பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளோடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. அந்த கட்சிகளும் ஜனவரி மாதம் தங்களது நிலைப்பாட்டை அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஆளுங்கட்சியை எதிர்க்க வேண்டிய அதிமுகவிற்கு உட்கட்சி மோதலே தினந்தோறும் தலை வலியாக உள்ளது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு
அந்த வகையில் அதிமுக மூத்த நிர்வாகியாக இருந்த செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என கெடு விதித்திருந்தார். மேலும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தலைவர்களான ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை சந்தித்து பேசியிருந்தார். இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து ஒட்டுமொத்தமாக நீக்கி அறிவிப்பு வெளியிட்டார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இன்றைய கூட்டத்தில் அதிமுக அமைப்பு ரீதியாக 82 மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்களின் தேர்தல் பணிகள் , கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதித்திடவும் சட்டமன்ற தொகுதி வாரியான கள நிலவரம் தொடர்பாகவும் கேட்டறியப்படவுள்ளது.
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி
மேலும தேர்தல் ஆணையம் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ள நிலையில் அதிமுக சார்பில் வாக்காளர் பட்டியலை கண்காணித்திடவும் குளறுபடிகள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் மாவட்ட கழகச் செயலாளர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த இரண்டு நாள் நடைபெற்ற ஐடி விங் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில், பெரும்பாலான பொறுப்பாளர்கள் மாவட்ட செயலாளர்கள் பணி திருப்தி அளிக்கவில்லை என புகார் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களை எச்சரிக்கும் வகையில் முக்கிய உத்தரவுகளை எடப்பாடி பழனிசாமி பிறப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை
மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்ந்து இடையூறு கொடுத்து கொண்டிருந்த செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக தலைமை தொடர்பாக செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் எனவும், மேலும் அதிமுகவில் ஒருங்கிணைப்பு தொடர்பாக யாராவது குரல் கொடுத்தால் செங்கோட்டையனுக்கு ஏற்பட்ட நிலை தான் ஏற்படும் என மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுப்பார் எனவும் கூறப்படுகிறது.
மேலும் அடுத்தக்கட்டமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்குவது, திமுகவிற்கு எதிரான போராட்டங்களை வலுப்படுத்தவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.





















