விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காததைக் கண்டித்து 22-ந் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்..! ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். அறிவிப்பு
டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காததைக் கண்டித்து வரும் 22-ந் தேதி (நாளை மறுநாள்) டெல்டா மாவட்டங்களில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“ தி.மு.க. ஆட்சி என்றாலே அது மக்கள் விரோதச் செயல்களில் தயங்காமல் ஈடுபடுவார்கள் என்பதும், எந்தக் குற்ற உணர்ச்சியுமின்றி லஞ்ச ஊழல் நடவடிக்கைகளில் அந்த கடசியினர் தீவிரமாக இருப்பார்கள் என்பதும், சட்டம் – ஒழுங்கு தி.மு.க. ஆட்சியில் சந்தி சிரிப்பதும், குடும்ப ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கும் என்பதும், பொய், பித்தலாட்டம் சர்வசாதாரணமாக நடைபெறும் என்பதும், தமிழ்நாட்டில் நிலைபெற்றுவிட்ட வரலாற்று உண்மைகள்.
கடந்த கால தவறுகளில் இருந்து, ஓரளவுக்காவது பாடம் படித்து தி.மு.க.வின் புதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்துவார் என்று மக்கள் மத்தியில் கொஞ்ச நஞ்சம் இருந்த நம்பிக்கையும் முற்றிலுமாக தகர்ந்து போய்விட்டது. தமிழ்நாட்டில் விவசாயிகள் இயற்கை சீற்றத்தை தாண்டியும், ஒரு சாகுபடி ஆண்டில் நம்பிக்கைக்குரிய நெற்பயிராக விளங்கும் என்ற எதிர்பார்ப்போடு, செய்யும் வேளாண்மைதான் சம்பா மற்றும் தாளடி விளைச்சல். ஆனால், கடந்தாண்டு டெல்டா மாவட்டங்களிலும், அதை ஒட்டியுள்ள வேறு சில மாவட்டங்களிலும் டிசம்பர் மாதத்திலும் ஜனவரி மாதத் தொடக்கத்திலும் பெய்த கனமழை, அந்த மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
வடகிழக்கு பருவமழைக் காலம் முடிந்த பிறகும், எதிர்பாராத வகையில் பெய்த கனமழையால் வயல்வெளியெங்கும் குளம்போல தண்ணீர் தேங்கி இருந்ததான் காரணமாக, விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்கதிர்களை அறுக்க முடியவில்லை. மழைக்கு முன் அறுத்து களத்திற்கு கொண்டுவந்து போராடித்து மூட்டைகளாக கட்டப்பட்ட, பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தமிழ்நாடு அரசால் உரிய நேரத்தில் கொள்முதல் செய்யப்படாததன் காரணமாக, நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வௌியிலும், மற்ற நெல் சேமிப்பு இடங்களிலும், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிவிட்டன.
கடந்தாண்டு குறுவை பயிரும் தங்களுக்கு எந்தப்பலனும் அளிக்காத நிலையில், சம்பா மற்றும் தாளடி சாகுபடியை எதிர்பார்த்துக் காத்திருந்த விவசாயிகள் இப்போது பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி கடனாளிகளாக மாறியிருக்கிறார்கள். எதிர்காலம் குறித்த பேரச்சம் அவர்களிடம் நிலவுகிறது. 2021ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது இதுபோன்ற பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஜெயலலிதா அரசு உடனடியாக நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்ததன் காரணமாக, டெல்டா பகுதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகி உள்ளதை சுட்டிக்காட்டியும், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அரசு அதிகாரிகளை உடனடியாக அனுப்பிவைத்து உரிய ஆய்வு செய்து, பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு நிவாரண உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், தி.மு.க. அரசை வலியுறுத்தி, கழகத்தின் சார்பில் ஏற்கனவே அறிக்கைகளை வெளியிட்டிருந்தோம். ஆனால், விடியா தி.மு.க. அரசு இதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக, விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இந்தச் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மழையால் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்காத தி.மு.க. அரசைக் கண்டித்தும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு, அவர்களுக்கு உரிய நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், விவசாயிகள் மக்களோடு இணைந்து வருகிற 22-ந் தேதி ( சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில் டெல்டா மாவட்டங்களில், தாலுக்கா அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்