Actress Chandini complaint: ‛கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார்’ மாஜி அமைச்சர் மீது நடிகை புகார்!
‘நாடோடிகள்’ படத்தில் நடித்த நடிகை சாந்தினி, முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கூறியுள்ளார்.
அவரது புகார் மனுவில், ‘நான் மலேசிய சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தூதரகத்தில் பணிபுரிந்து வந்தபோது அடிக்கடி என் பணி நிமித்தமாக இந்தியா வந்து செல்வது வழக்கம். கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக முன்னாள் அமைச்சரும், ராமநாதபுரம் எம்எல்ஏவான மணிகண்டன் சுற்றுலாத்துறை சம்பந்தமாக என்னை பார்க்க விரும்புவதாக எனக்கு தெரிந்த நண்பர் பரணி என்பவர் மூலம் தெரியவர, அமைச்சரை அவருடைய இல்லத்தில் 3-5-2017 அன்று சந்தித்தேன். அன்றைய தினம் சுற்றுலா துறை சம்பந்தமாக என்னிடம் பேசிய முன்னாள் அமைச்சர், மலேசியாவில் தொழில் முதலீடு செய்யப்போவதாகவும் அந்த தொழில் முதலீடு சம்மந்தமாக நாம் இருவரும் கலந்து பேச வேண்டும் என்றும் கூறி தொடர்ந்து எண் மொபைல் எண் பெற்றுக்கொண்டார்.
மலேசியாவில் தொழில் முதலீடு தொடர்பாக அவர் போன் செய்தால் எடுத்து பேசுமாறு என்னிடம் அறிவுறுத்தி அனுப்பினார். அன்று மாலையே என்னிடம் பேசத் தொடங்கிய மணிகண்டன், ஓரிரு தினங்களில் என்னிடம் தனிப்பட்ட முறையில் பேச ஆரம்பித்தார். நான் மிகவும் அழகாக இருப்பதாகவும், அவருக்கு என்னை மிகவும் பிடித்துவிட்டதாகவும், ஒரு கட்டத்தில் என்னை திருமணம் செய்து கொள்வதாகவும் என்னிடம் கூறினார். மேலும் அவர் குடும்ப வாழ்வில் அவர் மனைவியால் எந்தவித சந்தோஷமும் இல்லை என்று கூறி, என்னை காதலிப்பதாக கூறினார். இதற்கு நான் மறுப்பு தெரிவித்தபோது, என்னை சட்டப்படி திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார். முதலில் ஏற்க மறுத்த நான் பின் அவருடைய வார்த்தைகள் அனைத்தையும் நம்பி அவர் என்னை திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில் இருவரும் ஒரே வீட்டில் கணவன், மனைவியாக சென்னையில் வாடகை வீடு எடுத்து வாழ்ந்து வந்தோம்.
கடந்த 2019ஆம் ஆண்டு மாஜி அமைச்சர் அவருடைய உரையை சட்டமன்றத்தில் நிகழ்த்தியபோது நான் அவருடைய மனைவி என்ற முறையில் சட்டமன்றத்தை பார்வையிட அனுமதிக்கப்பட்டிருந்தேன்.
அவரை முறைப்படி திருமணம் செய்ய வற்புறுத்தியபோது, அவர் அவருடைய மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டு என்னை முறைப்படி திருமணம் செய்துகொள்வதாக கூறிவந்தார். இப்படி பல முறை ஏமாற்றிய அவரால், நான் மூன்று முறை கர்ப்பம் அடைந்து, பின்பு அவரின் வற்புறுத்தலால் கருவை கலைத்தேன். தொடர்ந்து தன்னை ஏமாற்றி வந்த முன்னாள் அமைச்சர், ஒரு கட்டத்தில் எனது அந்தரங்க போட்டோக்களை வெளியிடுவதாக கூறி மிரட்டினார். மேலும், பரணி மூலம் கொலை மிரட்டலும் விடுத்து வந்தார். எனவே, காவல் ஆணையர் என் மனுவை விசாரணை செய்து என்னை திருமணம் செய்வதாக கூறி 5 வருடங்கள் ஒரே வீட்டில் குடும்பம் நடத்திவிட்டு கட்டாயத்தின்பேரில் கருக்கலைப்பு செய்துவிட்டு தற்போது திருமணாம் செய்யாமல் ஏமாற்றி அடித்து துன்புறுத்தி எனக்கு கொலை மிரட்ட விடுத்த முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பரணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.