Vijay Politics Entry Public Opinion : விஜய் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? பொதுமக்கள் கருத்து என்ன?
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பாக பொதுமக்கள் ஏபிபி நாடுக்கு அளித்த சிறப்பு பேட்டிகளை விரிவாக காணலாம்.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. பீஸ்ட் படத்திற்காக சன் தொலைக்காட்சியில் பேசிய நடிகர் விஜய் தளபதியில் தான் தலைவன் ஆவது ரசிகர்கள் கையில்தான் உள்ளது என்று கூறினார். அவரது இந்த கருத்து அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், சிலர் தரப்பில் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, பொதுமக்கள் நமது ஏபிபி நாடுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதை கீழே காணலாம். விஜய்யின் அரசியல் வருகை தொடர்பாக கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளது.
வரவேற்பு :
நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர்கள் சிலர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு ஆதரவு அளித்துள்ளனர். அவர்கள் கூறும்போது, விஜய் தலைவராகினால் சமூகத்தில் மாற்றம் உண்டாகும். விஜய் நிறைய நல்ல திட்டங்களை கொண்டு வருவார் என்று கூறுகின்றனர். மேலும், விஜய்யைப் பற்றி சொல்ல ஈடே இல்லை. விஜய் தலைவரானால் இந்த நாடு மாறும், கண்டிப்பாக அவர் அரசியலுக்கு வந்தால் இந்த நாடே நன்றாக இருக்கும் என்றனர். தவறான வழியில் செல்லும் இளைஞர்கள் உள்ளிட்டோரை நல்வழிப்படுத்த வேண்டும் என்றால் தளபதி நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும். விஜய் வருகிறேன் என்றாலே போதும் அவரை நாங்கள் அனைவரும் சேர்ந்து முதல்வராக்கிவிடுவோம் என்கின்றனர்.
அதிருப்தி :
விஜயின் தீவிர ரசிகர்கள் சிலரே நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். விஜயை ஒரு நடிகராகவே பார்த்துவிட்டோம். அவர் நடிகராக இருப்பதுதான் எங்களுக்கு பிடித்துள்ளது என்று அவரது தீவிர ரசிகை ஒருவர் கூறியுள்ளர். அவருடைய தீவிர ரசிகர் ஒருவரும் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து விஜயகாந்தின் நிலைமை வந்துவிடக்கூடாது என்று வேதனைப்படுகிறார். மற்றொரு ரசிகை அவர் அரசியலுக்கு வருவதிலோ, அவர் தலைவராவதிலோ எனக்கு ஆர்வம் இல்லை என்கிறார்.
காலம் மாறிவிட்டது :
விஜயின் ரசிகர்கள் அல்லாத சில பொதுமக்கள் விஜய் அரசியலுக்கு வர வேண்டாம் என்றே பொதுவான கருத்தாக கூறுகின்றனர். சிலர் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறினாலும், அதிகப்படியான மக்கள் காலம் மாறிவிட்டது என்கின்றனர். குறிப்பாக, நடிகர்கள் அரசியலுக்கு வருவது எல்லாம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்துடன் முடிந்துவிட்டது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது எல்லாம் தேவையற்ற செயல் என்றும் கூறுகின்றனர். அவர் ஒரு நடிகராக மிகப்பெரிய அந்தஸ்துடன் உள்ளார். அவர் அப்படியே இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
சில மக்கள் நடிகர் விஜய் நிச்சயம் வர வேண்டும். அவர் 50 வயதிற்கு பிறகு அரசியலுக்கு வரலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில் சிலர் நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தால் முழு நேர அரசியல்வாதியாக இருக்க வேண்டும். அதைவிடுத்து, பாதி கால் சினிமாவிலும், மீதி கால் அரசியலிலும் வைப்பது நன்றாக இருக்காது. 50 ஆண்டுகளாக திரைத்துறையினர்தான் ஆட்சி அமைத்து வருகின்றனர். அதை மாற்ற வேண்டும். மக்களும் திரைத்துறையினருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற மன நிலையில் இருந்து மாற வேண்டும் என்கின்றனர்.
சிலர் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது அவரது தனிப்பட்ட கருத்து. அவரை ஆதரிக்க வேண்டுமா? இல்லையா? என்பது அவரது கொள்கையின்படியே உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்