Actor Kishore on Wrestlers : மல்யுத்த வீரர்கள் போராட்டம்: அரசு மறைமுகமாக ஆதரிக்கிறது - நடிகர் கிஷோர்
மல்யுத்த வீரர்கள் போராட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மறைமுகமாக ஆதரவளித்து அமைதியாக அமர்ந்திருக்கிறது இந்த அரசு என கன்னட நடிகர் கிஷோர் தெரிவித்துள்ளார்.
மல்யுத்த வீரர்கள் போராட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு மறைமுகமாக ஆதரவளித்து அமைதியாக அமர்ந்திருக்கிறது இந்த அரசு என கன்னட நடிகர் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மற்றொரு புறம் ஹிஜாப் விவகாரம் குறித்து போராட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த இரண்டு விவகாரம் குறித்து நடிகர் கிஷோர் அவரது கருத்தை தெரிவித்துள்ளார். கன்னட நடிகர் கிஷோர் தமிழில் பொன்னியின் செல்வன், பொல்லாதவன், வடசென்னை, ஆடுகளம் உள்ளிட்ட பிரபல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "மெல்ல மெல்ல படித்து, அதிகாரம் பெற்று வந்த ஒரு முஸ்லீம் பெண்ணை, ஆண் மேலாதிக்கத்தின் அடையாளமான ஹிஜாப்பிலிருந்து விடுவித்து, அதை வெளிப்படையாக எதிர்க்காமல் அதே ஹிஜாப்பில் தஞ்சம் புக செய்து ஒரே கல்லில் இரண்டு கொலைகள் நடந்துள்ளது.
ஒரு பெண் படித்தால், அவளுக்குப் பின் வரும் தலைமுறைகள் கல்வி கற்கும். அரசாங்க புள்ளி விவரங்களின் படி, இன்றும் இந்தியாவில் நூற்றில் 14 இசுலாமியப் பெண்களே கல்லூப் படிப்பில் சேருகின்றனர். பெண்களை இங்கேயே நிறுத்திவிட்டால் என்ன செய்வது? குடும்பம், உறவினர்கள், மதம், பாரம்பரியம் என்று எல்லாத் தடைகளையும் தாண்டி கடைசிப் படியில் அதுவும் கல்வியில் இருந்து விலகியதற்கு அவளே காரணமானால்? முஸ்லீம் பெண்ணும், ஒட்டுமொத்த இனமும் நாட்டின் பிரதான நீரோட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டன." எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் குறித்து, "குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குப் பதிலாக போராட்டக்காரர்கள் மீது தங்கள் அதிகாரத்தை அடிக்கடி கட்டவிழ்த்துவிடும் முதுகெலும்பில்லாத காவல்துறை. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மறைமுகமாக ஆதரவளித்து அமைதியாக அமர்ந்திருக்கிறது இந்த பிரதமரின் ஒற்றை அரசு. உலகத் தரம் வாய்ந்த பிரபலங்களுக்கு இது போன்று நடந்தால், நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு இப்படி நடந்தால் என்ன நடக்கும்? அது போதாதா? பல நூற்றாண்டுகளாகப் போராடி இன்று உலகின் உச்சத்தை எட்டியுள்ள தங்கள் பெண் குழந்தைகளுக்கு ஆதரவாக நிற்கும் நாட்டின் தாய் தந்தையர்களை மீண்டும் நான்கு சுவர் அடைப்புக்குள் தள்ளும்படி வற்புறுத்துவது ஆகும்." என தனது பதிவில் கிஷோர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், எனவே அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ்போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி முதல் போாரட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 28-ம் தேதி, புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற இவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
இந்த நிலையில், தான் மல்யுத்த போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசி போராட்டம் நடத்துவதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நேற்று அறிவித்தனர். அதன்படி ஹரித்வார் வந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் விவசாயிகள் சங்க தலைவர் நரேஷ் டிகைட் பேச்சுவார்த்தை நடத்தி, பதக்கங்களை வீச வேண்டாம் என்று வலியுறுத்தினார். இவரது கோரிக்கைக்கு இணங்க, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வீசும் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு, பதக்கங்களை டிகைட்-இடம் ஒப்படைத்தனர். இந்த விவகாரம் தற்போது உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய பிரபலங்கள் தற்போது மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.