அண்ணாமலையோட டிராமா! நயினார் நாகேந்திரன் செருப்பு கொடுத்தது இதுக்குத்தான் - எஸ்வி சேகர் பேட்டி
இது அண்ணாமலையின் நாடகம் என்றும், புதிய தலைவர் அண்ணாமலைக்கு செருப்பு கொடுத்ததற்கு இதுதான் காரணம் என்று நடிகர் எஸ்வி சேகர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவராக பொறுப்பு வகித்து வந்த அண்ணாமலைக்கு பதிலாக புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பதவியேற்பு விழா பா.ஜ.க. சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்வி சேகர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
டிராமா:
இது ஒரு டிராமா. அமித்ஷா சென்னைக்கு வரும்போது ஒரு பரபரப்பான நிகழ்ச்சி நடக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தனர். அதற்குத்தான் இந்த தேர்தல். அமித்ஷா மத்திய அமைச்சர். இந்த தேர்தல் தொடர்பான விஷயங்கள் ஜேபி நட்டாவிற்கு கீழேதான் வரும்.
10 ஆண்டுகள் வேண்டும் என்றார்கள். அப்படிப் பார்த்தால் நான் 10 ஆண்டுகள் இருந்தேன். நான் இப்போது பா.ஜ.க.வில் இல்லை. திருப்பதி நாராயணன் 30 வருடங்களாக உள்ளார். அவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தீர்மானித்துவிட்டு, வேறு யாரையுமே விண்ணப்பிக்க முடியாதவாறு, போடக்கூடாது என்று செய்துவிட்டு நாங்க இப்படித்தான், யாரு அவர்களை கேட்கப் போகிறார்கள். அவர்களை ஒருத்தரும் கேட்க மாட்டார்கள்.
செருப்பு கொடுத்தது ஏன்?
நயினார் நாகேந்திரனுக்கு என் வாழ்த்துகள். என்னுடைய நல்ல நண்பர். அண்ணாமலை மிகப்பெரிய அளவில் சாதித்து, ஒரு விஷயத்தை வளர்த்து நயினார் நாகேந்திரன்கிட்ட கொடுத்து கண்ணேயே என்னிடம் ஒப்படைக்கிறேன் என்று நாடகம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நயினார் நாகேந்திரன் சிறப்பு வாய்ந்த சம்பவம் செய்தார்.
அண்ணாமலைக்கு செருப்பு வாங்கிக் கொடுத்தார். சனிக்கிழமை செருப்புதானம் செய்தால் அந்த சனி நம்மை விட்டு செல்லும் என்று அர்த்தம். அந்த செருப்பை யார் வாங்கிக் கொள்கிறார்களோ? அவர்களை சனி பிடிக்கும் என்று அர்த்தம். அண்ணாமலை ஏதோ ஓசி-யில் கிடைக்குதுனு அதை வாங்கிப் போட்டுகிட்டாரு. எங்க வீட்லயே 10 ஜோடி செருப்பு இருக்குது. அதை வீட்ல போயி போட்டுக்குறேனு சொல்லக் கூடத் தெரியாத அளவிற்கு அண்ணாமலை மழுங்கடிக்கப்பட்டிருக்கிறார்.
சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்:
நயினார் நாகேந்திரன் பெரிய தலைவரா? இல்லையா? என்று எனக்குத் தெரியாது. ஆனால், அவர் சிறந்த அரசியல்வாதி. அதிமுக-விலே பல எதிர்ப்புகளைப் பார்த்துதான் மந்திரி ஆனவர். அண்ணாமலை போகும்போது அழுது கொண்டே போக வேண்டாம். சந்தோஷமாக செல்ல வேண்டும் என்று சொல்லியிருப்பார். அதை நாம் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பதவி வகித்த காலத்தில் அக்கட்சியின் முக்கிய நபர்களாக உலா வந்த எச்.ராஜா, கேடி ராகவன், எஸ்வி சேகர் போன்ற பல முக்கிய நபர்களை ஓரங்கட்டியதாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும், தமிழ்நாட்டில் அதிமுக - பா.ஜ.க. கூட்டணி முறிந்ததற்கும் அண்ணாமலையின் சர்ச்சையான பேச்சுக்களே காரணமாக அமைந்தது.
இதையடுத்து, அண்ணாமலைக்கு எதிராக கடந்த சில மாதங்களாகவே உள்கட்சியிலே வலுவான எதிர்ப்புகள் எழுந்து வந்த நிலையில், தற்போது அவரது பதவிக்காலம் முடிந்ததால் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நயினார் நாகேந்திரன் தலைவராக தேர்வு ஆவது உறுதி செய்யப்பட்ட உடனே, தமிழ்நாட்டில் மீண்டும் பா.ஜ.க. - கூட்டணி உண்டானது. இந்த கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலி்ல் போட்டியிட உள்ளது,





















