Vijay 50th Birthday: நடிகர் விஜய்க்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் - பின்னணி இதுதான்!
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகின் உச்சபட்ச நடிகராக உலா வருபவர் நடிகர் விஜய். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்று கருதப்பட்ட நடிகர் விஜய். எந்தவொரு ஆர்ப்பாட்டமின்றி தனது கட்சியை தொடங்கினார்.
த.வெ.க. தலைவர் விஜய்க்கு பிறந்தநாள்:
அவர் அரசியல் கட்சியைத் தொடங்கிய பிறகு எந்தவொரு அரசியல் செயல்பாடுகளிலும் ஈடுபடாமல் இருந்தவர், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தையும், பாதிக்கப்பட்டவர்களையும் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சூழலில், நடிகர் விஜய் நேற்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார்.
அவரது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். கடந்த பிறந்தநாளின்போது நடிகராக இருந்த விஜய், தற்போது அரசியல் தலைவராக உருவெடுத்துள்ளதால் அவருக்கு இந்த முறை திரை பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.
போட்டி போட்டு வாழ்த்துச் சொன்ன அரசியல் தலைவர்கள்:
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மக்கள் நீதிமய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன், வி.சி.க. தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. மற்றும் பா.ம.க.வினரைத் தவிர பிற அரசியல் கட்சியினர் பெரும்பாலோனோர் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உலா வரும் நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அடுத்த சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2026 தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா?
மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள தமிழக வெற்றிக்கழக தலைவர் குறிப்பிட்ட அளவு வாக்கு வீதத்தை அடுத்த சட்டசபைத் தேர்தலில் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த தேர்தலில் அவர் தலைமையில் ஒரு கூட்டணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கூட்டணியில் சில சிறிய கட்சிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் படங்களுக்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்த எச்.ராஜா, தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் அங்கம் வகிக்கும் பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கபபடுகிறது. திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் விஜய் அரசியலிலும் வெற்றி பெற வாழ்த்துகள் என்று பதிவிட்டிருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல, விஜய்யுடன் கூட்டணியில் இல்லாவிட்டாலும் விஜய்யுடன் மோதல் போக்கில் இல்லாமல் இருக்க சில கட்சிகள் விரும்புவதாகவும் கருதப்படுகிறது. இதன் காரணமாகவும், இந்த முறை அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், அடுத்த சட்டமன்ற தேர்தலில் சில முக்கிய கட்சிகள் நடிகர் விஜய்யுடன் கைகோர்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை என்று அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள விஜய் இதுவரை தன்னுடைய கொள்கை, கட்சி நிலைப்பாடு குறித்து எந்த ஒரு அறிக்கையையும் வௌியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.