பூசாரிக்கு ரூ. 18,000.. Soft இந்துத்துவாவை கையில் எடுத்த கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு செக்!
இந்து வாக்காளர்களை குறிவைக்கும் நோக்கில் கோயில் பூசாரிகளுக்கு மாதம் 18,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.
டெல்லி தேர்தல் நெருங்கும் நிலையில், ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைத்தால் இந்து கோயில் பூசாரிகளுக்கு மாதம் 18,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.
அடுத்தாண்டு பிப்ரவரி மாதம், டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மி கட்சி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கெஜ்ரிவாலின் Soft இந்துத்துவா:
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சி அமைக்க வாக்குறுதிகளை வாரி வழங்கி வருகிறது ஆம் ஆத்மி கட்சி.
இந்து வாக்காளர்களை குறிவைக்கும் நோக்கில் கோயில் பூசாரிகளுக்கு மாதம் 18,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார். அதோடு, சீக்கிய குருத்வாரா கிராந்திஸ்களுக்கும் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கெஜ்ரிவால் விரிவாக பேசுகையில், "பூசாரிகளும் கிராந்திகளும் நமது சமூகத்தின் ஒரு அங்கம். அவர்கள் சுயநலமின்றி பல தலைமுறைகளாக சமூகத்திற்கு சேவை செய்து வருகின்றனர், பெரும்பாலும் தங்கள் சொந்த குடும்பங்களின் இழப்பில் சேவை செய்கின்றனர்.
வாரி வழங்கும் ஆம் ஆத்மி:
எனவே, அவர்களின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் பூசாரி கிராந்தி சம்மன் யோஜனா திட்டம் அமல்படுத்தப்படும். திட்டத்திற்கு பதிவு செய்யும் நடைமுறை உடனடியாக தொடங்கும். பூசாரிகள் நமக்கு எப்படி சேவை செய்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.
நம் குழந்தையின் பிறந்த நாளாக இருந்தாலும் சரி அல்லது நாம் நேசிப்பவரின் மரணமாக இருந்தாலும் சரி, அவர்கள் எப்போதும் நம்மை கடவுளோடு இணைக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஒருபோதும் தங்கள் சொந்த குடும்பங்களுக்கு கவனம் செலுத்தவில்லை.
நாங்கள் அவர்களுக்கு போதுமான கவனம் செலுத்தவில்லை. இது நாட்டிலேயே முதல்முறையாக நடக்கிறது. பாஜக மற்றும் காங்கிரஸ் அரசுகள் இதிலிருந்து பாடம் கற்று, அவர்கள் நடத்தும் மாநிலத்தில் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தும் என்று நம்புகிறேன்" என்றார்.
பாஜக, காங்கிரஸ் கட்சியை எதிர்த்து களமிறங்கும் ஆம் ஆத்மி பொது மக்களை கவரும் வகையிலும் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. குறிப்பாக, பாஜகவுக்கு சவால் விடும் வகையில் இந்து வாக்காளர்களை குறிவைத்து திட்டங்கள் அறிவித்து வருகின்றன. ஆனால், அக்கட்சி Soft இந்துத்துவாவை கடைபிடிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.