TamilNadu Cabinet: பளீர் முதல்வர் ஸ்டாலின் - புது அமைச்சர்களுக்கு 12 டிப்ஸ்
மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையில் 15 பேர் முதல் முறை அமைச்சர்கள். மா.சுப்பிரமணியன் போன்றவர்களே பெரிய அளவில் ஆட்சி நிர்வாக அனுபவம் பெற்றவர்கள். மிக முக்கியமானதும் 11 இயக்குநரகங்களையும் கொண்ட பள்ளிக்கல்வித் துறையின் அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி உள்பட பெரும்பாலானவர்களுக்கு, ஆட்சி நிர்வாகப் பயிற்சியே இப்போதுதான் ஆரம்பம்.
திமுக ஆட்சி என்றாலே அமைச்சர்களின் துறைமாற்றமோ நடவடிக்கையோ 99 சதவீதம் இருக்காது என்பதே இதுவரையிலான நடப்பு. அரிதாக அப்படி நடந்திருக்கிறது. இதனால்தான் ஒப்பீட்டளவில் திமுக அமைச்சர்கள் சுய முடிவெடுத்து அவரவர் துறையில் சிறப்பாகச் செயல்பட்டு மிளிரவும் செய்கிறார்கள்.
பதினாறாவது சட்டப்பேரவை காலமான இப்போது, மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையில் 15 பேர் முதல் முறை அமைச்சர்கள். மா.சுப்பிரமணியன் போன்றவர்களே பெரிய அளவில் ஆட்சி நிர்வாக அனுபவம் பெற்றவர்கள். மிக முக்கியமானதும் 11 இயக்குநரகங்களையும் கொண்ட பள்ளிக்கல்வித் துறையின் அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி உள்பட பெரும்பாலானவர்களுக்கு, ஆட்சி நிர்வாகப் பயிற்சியே இப்போதுதான் ஆரம்பம்.
இந்த நிலையில், அமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோளும் எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.
புதிய அமைச்சர்களுக்கு ஆட்சியியல் தொடர்பாக சொல்வதற்கு, சில எண்ணக் குறிப்புகள் தோன்றின. இவை அனைத்தும் ஆட்சி நிர்வாகத்தில் பட்டு உணர்ந்த பல வல்லுநர்களும் சொல்லிவருபவைதான்.
* ஆளுமைப்பண்பு
அமைச்சர் ஆவதற்கு முன்னர் வரை எப்படியாக இருந்தாலும், இந்த நாற்காலிக்கென அவசியமாக இருக்கவேண்டிய முதன்மையான பண்பு, இது. எவ்வளவு நல்லவராக இருந்தாலும் வல்லவராக இல்லாவிட்டால் வேலை நடக்காது.
* தீயாய் வேலை..!
எல்லா அமைச்சர்களுக்கும் மூத்த, இளநிலை, சிறப்பு உதவியாளர்கள் என 3 பேர் நியமிக்கப்படுவார்கள். பெரும்பாலும் இவர்கள் அந்தந்த அமைச்சருக்கு தோதுப்பட்ட, தெரிந்த, மேலிடத்துப் பிரநிதியாக இருப்பார்கள். அதனாலேயே துறைக்கு தொடர்பில்லாதவர்கள் கூட பி.ஏ. என உட்கார்ந்துகொண்டு கொட்டம் அடிப்பார்கள். எப்படி இருந்தாலும், இந்த உதவியாளர்கள் துறையைப் பற்றிய ஆழ்ந்த அறிவு உடையவர்களாக இருக்கவேண்டும். இதற்கு, தலைமைச்செயலகத்தில் இருப்பவர்கள்தான் பொருத்தம் என்றில்லாமல், கன்னியாகுமரியிலோ நீலகிரி மலையிலோ தருமபுரியின் குக்கிராமத்திலோ துறையைப் பற்றி நன்கறிந்த யாரையும் நியமிக்கலாம்.
* பழிவாங்கல் இப்போது பயனாகும்
சுற்றுமுறைப்படியான சாபக்கேட்டில் அரசுப் பணியாளர்கள் பழிவாங்கப்படுவதும் ஒன்று. அவர்களில் கணிசமானவர்கள் அந்தந்தத் துறையில் நேர்மையாகச் செயல்பட்டு, சோதனைகளையே எதிர்கொள்பவர்களாக ஓரங்கட்டப்பட்டு, எங்காவது மூலைமுடுக்கில் தூக்கியடிக்கப்பட்டும் இருப்பார்கள். பலர் கடமையைச் செய்வதுடன் பஞ்சாயத்து செய்வதில் ஆர்வலர்களாகவே இருப்பார்கள். ஆனாலும் இந்த வகையறாக்காரர்கள் துறையின் காதலர்களாக இருப்பார்கள். இந்தப் பட்டியலில் இருப்பவர்களைத் தேடிப்பிடித்து அவர்களின் கருத்துகள், திறன்களைப் பயன்படுத்தலாம்.
* அத்தனையும் சொல்லும் அந்த அறிக்கை
எந்தத் துறையாக இருந்தாலும் ஆண்டுத் தணிக்கை அறிக்கைகளில் அதன் எல்லா கதைகளும் புள்ளிவிவரத்துடன் புட்டுபுட்டு வைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான துறைகளின் தணிக்கை அறிக்கைகள் சட்டமன்றத்திலேயே முன்வைக்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு புதிய அமைச்சரும் கட்டாயம் படிக்கவேண்டிய ஆவணங்கள் இவை. இதை ஒரு முறை படித்தாலே துறையைப் பற்றிய ஒரு சித்திரம் மறக்காமல் இருக்கும்படி பதிந்துவிடும்.
* துறைத் தலைவர் துணைவலிமை
ஒவ்வொரு அமைச்சகத்தின் கீழும் பல துறைகள், அரசுசார் நிறுவனங்கள் இடம்பெறும். இது கூடக்குறைய இருக்கும். யாராக எப்படிப்பட்டவராக இருந்தாலும் இந்தப் பொறுப்பில் இருப்பவர்களிடம் கௌரவம் பார்க்காமல் கலந்து உரையாடுவது அமைச்சருக்கு அவசியம் ஆகும். மூத்தவர்கள், அதிகம் படித்தவர்கள், வெளியில் கெட்ட பெயரெடுத்தவர்கள் என பலவிதமாக இருப்பார்கள்; அதை வைத்துக்கொண்டு பொறுப்புக்குரியவர்களின் ஆலோசனைகளை புறம்தள்ளக்கூடாது.
* வருவாய் வழிகள் என்னென்ன?
நிதியமைச்சர்தான் வருவாயைப் பற்றி யோசிக்கவேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு துறையும் தனக்கான வருவாய் மூலம் இயங்கக்கூடிய வழிவகைகள் எல்லாவற்றையும் ஆராயவேண்டும். இப்போதைக்கு எல்லா துறைகளிலும் இருக்கும் ஒரே தடங்கல், போதுமான நிதி இல்லை என்பதுதான். எனவே, முடிந்த அளவு அந்தந்தத் துறையின் சார்பில் திரட்ட வழிசெய்தால், அது அந்தந்த அமைச்சரின் தனிப்பட்ட சாதனையாகவும் பின்னால் குறிக்கப்படும்.
* 10 ஆண்டு நிலுவை முடிவுகள்
கடந்த இரண்டு முறைகளும் அதிமுகவே ஆட்சியில் இருந்துவிட்டது. முந்தைய திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட பல கொள்கை முடிவுகள், அரசியல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கலாம். அப்படியானவை என்னென்ன என்பதை அறிந்து, அவை இப்போதும் செயல்பாட்டுக்கு உரியவைதானா அல்லது மேம்படுத்தி நடைமுறைப்படுத்தலாமா என முடிவுசெய்யவேண்டும். காலாவதியாகிவிட்டால் அதை பயனில்லை என முடிவெடுத்து கோப்பை மூடிவிடலாம்.
* வீண் செலவுகள்
அதிகாரம் கிடைத்துவிட்டால் மனித மனம் ஆப்பசைத்த குரங்காகிவிடும் என்பதும் உண்டுதானே! அரசதிகாரத்தில் கீழ்மட்டம்வரை இது பொருந்தும். அதன் மோசமான விளைவுகளில் ஒன்று, பொதுமக்களின் உழைப்பின் மூலம் கொட்டிக்கிடக்கும் அரசுப் பணத்தை வீணாகச் செலவழிக்கும் பொறுப்பற்றதனம், இன்ன துறைதான் என்றில்லாமல் எங்கும் நிரம்பியிருக்கும். இதைக் கண்டறிவதில் முனைப்பு காட்டுவது சிக்கனமும் சீராக்குவதுமாக இருக்கும்.
* கைகொடுக்கும் கள ஆய்வு
அரசியல்வாதிகள் வேலை காட்டுவார்கள் என்றால், அவர்களுக்கே வேலைகாட்டும் அரசுப்பணியாளர்களின் திறமையும் அமோகம். இதை அவ்வப்போது அதிரடியாகக் கண்டறிய உதவுவது, கள ஆய்வு. இதில் முக்கியம் முன்கூட்டியே, ‘ஐயா வராரு’ எனச் சொல்லிவிட்டு போகக்கூடாது; அதனால் எந்தப் பயனும் இல்லை. அதிரடி உண்மையில் அதிரடியாக இருக்கவேண்டும்.
* மனு விவரம் எடுக்கிறார்களா?
முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் பிற வழிகள் மூலம் துறையில் நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய மனுக்களின் விவரத்தைத் திரட்டிவைக்க ஏற்பாடு இருக்கும். அதை முறையாகச் செய்கிறார்களா என்பதை. மாதம்தோறும் ஆய்வை நடத்தலாம்; அறிக்கை கேட்டு அதன் மீது மேல்நடவடிக்கை/ கண்காணிப்பை மேற்கொள்ளலாம்.
* கள நடப்புகள் முக்கியம்
மேல்மட்டம், பகுதியளவுக்கான நடைமுறைகள் என்று மட்டும் ஒதுங்கிவிடாமல் எடுத்துக்காட்டாக இந்து சமயத் துறையில் ஒரு கோயில் ஆணையர் மட்டத்தில் எல்லாவற்றையும் வைத்துக்கொள்ளாமல், அதன் கீழ்நிலை ஊழியர் எப்படிப் பார்க்கிறார் என்பதையும் தனிப்பட்டு தெரிந்துவைத்திருக்கவேண்டும். மேலிருந்து கீழ் என்பதைப்போல கீழிருந்து மேல் என்பது ஒருவகை ஆட்சியியல் முறைமை.
அமைச்சர்களுக்கும் பயிற்சி தரலாமே!
புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பயிற்சி தருவதற்கு ஏற்பாடுகள் உள்ளன. இதைப்போல அமைச்சர்களுக்கும் பயிற்சி தரலாம் என்பதைப் பற்றியும் யோசிக்கலாம். ஏனென்றால் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி அமைச்சர்கள், புதியவர்கள் என்பதால் தற்காலிகமாகவாவது இதைச் செய்தாகவேண்டும். பயிற்சி அளிப்பதற்கு பாங்கான, பட்டறிவுள்ள மூத்த ஆட்சிப்பணி அதிகாரிகள் இருக்கிறார்கள். இவர்களில் பலர் உள்ளாட்சி, உணவுப்பொருள் வழங்கல், குடிநீர், பொதுப்பணி, மின்சாரம், விவசாயம், மீன்வளம், கால்நடை, பால்வளம், என துறைவாரியாக சிறந்த வல்லுநர்களும்கூட. உள்ளங்கை நெல்லிக்கனிகள் போன்றவர்கள். இதைச் செய்வது, தமிழ்நாட்டை ஆட்சியியல் களத்தில் இன்னொரு மட்டத்துக்கு எடுத்துச்செல்லும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது!
- இர. இரா. தமிழ்க்கனல்,
பத்திரிகையாளர் (ம) ஆட்சியியல் விமர்சகர்