பலமணி நேரம் காத்திருந்தும் வராத ஆம்புலன்ஸ் - பரிதாபமாக பிரிந்த பெண்ணின் உயிர்... மயிலாடுதுறையில் சோகம்
மயிலாடுதுறை அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் பெண் உயிரிழந்ததாக இறந்த பெண்ணின் உறவினர்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருந்த பெண் நோயாளியை அவரச சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றி மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டதால் அந்த பெண்மணி உயிரிழந்ததாக குற்றச்சாட்டி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பாக்கியலட்சுமி
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி தாலுக்கா கீழ ராதாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 42 வயதான பாக்கியலட்சுமி. இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மகன் 17 வயதான அஜய் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். மகள் அருண்பிரியா டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார். பாக்கியலட்சுமி கணவர் இறந்ததால் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சீப்பிலியூர் பகுதியில் தனது பிள்ளைகளுடன் பாக்கியலட்சுமி உறவினர் பாதுகாப்பில் கடந்த 2012 -ஆம் ஆண்டு முதல் வசித்து வந்துள்ளார்.

வெற்று பேப்பரில் கையெழுத்து பெற்ற மருத்துவமனை நிர்வாகம்
கூலி வேலை செய்து பிள்ளைகளை படிக்க வைத்து வரும் பாக்கியலட்சுமிக்கு திடீரென சளி தொல்லை மற்றும் முகம் வீங்கியுள்ளது. உடனடியாக நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு மகன் அஜய் தாய் பாக்கியலட்சுமியை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளார். அப்போது தீவிர அவசர சிகிச்சை பிரிவில் ஒரு வெற்று வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கி கொண்டு தாய் பாக்கியலட்சுமிக்கு மூன்று ஊசி போடப்பட்டதாகவும், சரியாகிவிடும் என்று அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றியுள்ளனர்.
5 மணி நேரம் கடந்தும் வராத ஆம்புலன்ஸால் பிரித்த பெண்ணின் உயிர்
அப்போது பாக்கியலட்சுமி ஆபத்தான நிலையில் உள்ளபோது ஏன் சாதாரண வார்டிற்கு மாற்றியுள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பி உறவினர்கள், தஞ்சாவூர் அல்லது திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாகவும் கூறி மதியம் மூன்று மணிக்கு ஆம்புலன்ஸ் வசதி கேட்டுள்ளனர். ஆனால் நீண்ட நேரம் காத்திருந்தும் ஆம்புலன்ஸ் வராத நிலையில் பாக்கியலட்சுமி பரிதாபமாக இரவு 8 மணிக்கு உயிரிழந்தார்.

உடற்கூறு ஆய்வுக்கு மறுத்து போராட்டம் நடத்திய உறவினர்கள்
ஆபத்தான நிலையில் உள்ள பாக்கியலட்சுமிக்கு முறையாக சிகிச்சை அளிக்காமல் அலட்சியப் போக்கில் சாதாரண வார்டுக்கு மாற்றிய மருத்துவமனை அலட்சியத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வேண்டும் என்று கூறி உடற்கூறு ஆய்வு செய்ய அனுமதிக்காமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அறிந்து வந்த மயிலாடுதுறை வட்டாட்சியர் சுகுமார், மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அரசு வேலைக்கு உறுதியளித்த வட்டாட்சியர்
அப்போது வென்டிலேட்டர் வசதியுள்ள 3 ஆம்புலன்ஸ்கள் வெளியில் சென்றதால் காலதாமதம் ஏற்பட்டதாகவும், மருத்துவமனை நிர்வாகத்தினர் வருத்தம் தெரிவித்ததாகவும் அரசுக்கு பரிந்துரை செய்து உரிய நிவாரணம், அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்டவை வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் வட்டாட்சியர் பேச்சுவார்த்தையின்போது தெரிவித்தார். இதனை அடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டனர். இச்சம்பவம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






















