பாம்பு, பூரான் பயம்... கையில் தீப்பந்தம்! சீர்காழியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் வீதிக்கு வந்த மக்கள்!
சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக நீடிக்கும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டைக் கண்டித்து, பொதுமக்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து நீடித்து வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டைக் கண்டித்தும், தடையில்லா மின்சாரம் வழங்கக் கோரியும், கோவிந்தராஜன் நகர் பகுதி மக்கள் கைகளில் தீப்பந்தங்களை ஏந்தி நள்ளிரவில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர் மின்வெட்டால் முடங்கிய இயல்பு வாழ்க்கை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட சீர்காழி நகர்ப் பகுதிகள், வைத்தீஸ்வரன் கோயில், எடமணல், திருமுல்லைவாசல், கொண்டல், வள்ளுவக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாகக் கடுமையான மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் இருந்து வருகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதால், இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
இந்தத் திடீர் மின் தடையால் முதியவர்கள், நோயாளிகள் மற்றும் பள்ளிச் செல்லும் குழந்தைகள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர். மேலும், குறுவை மற்றும் கோடைக்கால விவசாயப் பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், போதிய மின்சாரம் கிடைக்காததால் நீர் பாய்ச்ச முடியாமல் தங்களது விவசாயப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்ணீர் மல்கத் தெரிவிக்கின்றனர்.
தீப்பந்தம் ஏந்தி திரண்ட கோவிந்தராஜன் நகர் மக்கள்
இதேபோன்றதொரு மோசமான சூழ்நிலை சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட கோவிந்தராஜர் நகரிலும் நீடித்து வருகிறது. 200-க்கும் மேற்பட்ட நடுத்தர மற்றும் அடித்தட்டு குடும்பங்கள் வசித்து வரும் இப்பகுதியில், கடந்த சில வாரங்களாகத் தினசரி இரவு நேரங்களில் மின் விநியோகம் சீராக இருப்பதில்லை. இந்நிலையில், நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மாலை தொடங்கி நள்ளிரவு வரை நேரம் கடந்தும் மின்சாரம் வழங்கப்படாததால், கடும் ஆத்திரமடைந்த கோவிந்தராஜன் நகர் பொதுமக்கள் மற்றும் பெண்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க வீதிகளில் திரண்டனர்.
இருளைப் போக்கும் வகையிலும், மின்சாரத் துறையின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும் கைகளில் தீப்பந்தங்களை ஏந்தி, மின்சாரத் துறைக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், தாங்கள் கொண்டு வந்த தீப்பந்தங்களை தெருவில் உள்ள மின் கம்பங்களில் கட்டி வைத்துத் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
விஷ ஜந்துக்கள் அச்சத்தில் கைக்குழந்தைகளுடன் தவிக்கும் தாய்மார்கள்
இது குறித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட பாதிக்கப்பட்ட அப்பகுதி பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,
"சீர்காழி கோவிந்தராஜன் நகரில் கடந்த சில வாரங்களாகத் தினமும் குறிப்பாக இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் கைக்குழந்தை வைத்திருக்கும் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் புழுக்கத்தாலும், தூக்கமின்மையாலும் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். மின்சாரம் இல்லாத காலங்களில் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்து, கொசுக்கடியோடு சாலையில் அமர்ந்து பொழுதைக் கழிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளோம். மேலும், எங்கள் குடியிருப்புப் பகுதிக்கு மிக அருகிலேயே சீர்காழி நகராட்சியின் குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. மின்சாரம் இல்லாத நள்ளிரவு நேரங்களில் குப்பைக் கிடங்கில் இருந்து பாம்பு, பல்லி, பூரான் உள்ளிட்ட பல்வேறு விஷ ஜந்துக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தோடும், உயிர் பயத்தோடும் தினமும் வாழ வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. மின்வாரிய அதிகாரிகளுக்குப் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை" என்று தங்களது வேதனையைத் தெரிவித்தனர்.
விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
மாலை தொடங்கி நள்ளிரவு வரை நீடித்த இந்தத் தீப்பந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. நகர்ப் பகுதி மட்டுமின்றி, சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலும் மின்சார விநியோகம் கண்ணாமூச்சி காட்டி வருவதால், மாவட்ட நிர்வாகமும் மின்சாரத் துறையின் உயர் அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி கோவிந்தராஜன் நகர் உள்ளிட்ட ஒட்டுமொத்த தாலுகா பகுதிக்கும் தடையற்ற முழுமையான மின்சாரம் வழங்க முறையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அடுத்தகட்டமாகப் பொதுமக்களைத் திரட்டிப் பெரிய அளவிலான சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.
Before You Go
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























