புதிய ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற முதல் குறைதீர் கூட்டம்.. குவிந்த மனுக்கள்... எங்கே தெரியுமா?
மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற முதல் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் முதல்முறையாக நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை புரிந்து மனுக்களை அளித்து குறைகளை தெரிவித்துள்ளனர்.
மாற்றப்பட்ட ஆட்சியர்
மயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் மகாபாரதி நிகழ்ச்சி ஒன்றில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தொடர்பாக பேசிய காணொளி வைரலான நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெரும் கண்டனங்கள் எழுந்தன. அதனை அடுத்து தமிழக முதன்மைச் செயலாளர் முருகானந்தம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்து வந்த மகாபாரதியை மாற்றம் செய்து உத்தரவிட்டார். அதனை அடுத்து மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த மகாபாரதி கடந்த பிப்ரவரி 28 -ம் மாலை மாற்றப்பட்டார். பின்னர் மார்ச் 1-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஸ்ரீகாந்த் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றார்.
274 மனுக்கள்
கடந்த மார்ச் 1-ம் தேதி சனிக்கிழமை பொறுப்பேற்ற நிலையில், திங்கட்கிழமையான இன்று வாரம்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் அவர் கலந்துக்கொண்டு மக்கள் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல், கோரி 33 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 16 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்ற கோரி 07 மனுகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகைகோரி 24 மனுக்களும் மேலும் பல்வேறு புகார்கள் தொடர்பாக மனுக்கள் 17 மனுக்கள், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 20 மனுக்களும், அடிப்படை வசதி கோரி 36 மனுக்களும், நில அபகரிப்பு மற்றும் நில பிரச்சனை தொடர்பாக 15 மனுக்களும், கலைஞர் உரிமைத்தொகை வேண்டி 29 மனுக்களும் தொழிற்கடன் வழங்க கோரி 11 மனுக்களும், இலவச வீடு வேண்டி 30, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பாக 19 மனுக்களும், குடும்ப அட்டை தொடர்பாக 08, கள்ள மது விற்பனை செய்து திருந்தி வாழ்வோர் மறுவாழ்வு உதவி 02, சட்டம் ஒழுங்கு தொடர்பாக 05, தொழிலாளர் நலன் தொடர்பாக 02 என மொத்தம் 274 மனுக்கள் பெறப்பட்டன.
நடவடிக்கைக்கு பரிந்துரைத்த ஆட்சியர்
இம்மனுக்களை மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு 6690 ரூபாய் மதிப்பில் இலவச தையல் இயந்திரமும், வருவாய்த்துறையின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் 7 பயனாளிகளுக்கு 1 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பில் திருமண உதவித்தொகை, விபத்து நிவாரண உதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான ஆணைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 12 பயனாளிகளுக்கு 1 லட்சத்து 80 ஆயிரத்து 390 மதிப்பில் ரூபாய் மதிப்புள்ள மூன்று சக்கர சைக்கிள் மற்றும் மடக்கு சக்கர நாற்காலிகளையும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ்;, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் (பொ) ரவி, மாவட்ட வழங்கல் அலுவலர் அர்ச்சனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

