மீண்டும் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வழி கிடைத்துவிட்டது.. சீர்காழியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
புதிய பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணியை 9 மாதத்தில் முடிப்பதற்காக நாமக்கல் ஜிவி கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் எடுத்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் முழுமை பெறாமல் பயன்பாட்டிற்கு வந்த நிலையில் மீண்டும் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வழி கிடைத்ததாக கூறி ஆட்டோ ஓட்டுனர்கள் சூடம் ஏற்றி வழிபாடு செய்துள்ளனர்.
சீர்காழி புதிய பேருந்து நிலையம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியின் கீழ் செயல்படும் புதிய பேருந்து நிலையம் கடந்த 1995 -ஆம் ஆண்டு 9 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலைய சாலைகள் மற்றும் பேருந்து நிலையம் மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. பொதுமக்கள் நீண்டநாள் கோரிக்கை தொடர்ந்து தமிழக அரசின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 8 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணியை 9 மாதத்தில் முடிப்பதற்காக நாமக்கல் ஜிவி கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் எடுத்துள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2023 ஆண்டு டிசம்பர் 18 -ம் தேதி நடைபெற்றது.
இரண்டு ஆண்டுகளாக நடைபெறும் பணிகள்
இதில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, திமுக மாவட்ட செயலாளரும், பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன், சீர்காழி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பன்னீர்செல்வம், நகராட்சி சேர்மன் துர்கா பரமேஸ்வரி, கமிஷனர் ஹேமலதா, துணை சேர்மன் சுப்பராயன் ஆகியோர் முன்னிலை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில் உணவக கட்டிடம், மிதிவண்டி நிறுத்தம், சிமெண்ட் தரைதளம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அறிவிப்பு வெளியிட்டு பேருந்து நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தரம் தொடர்பாக போராட்டம்
இந்த சூழலில் பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் தரமாக நடைபெறவில்லை என கூறி தொடர்ந்து அதிமுக, பாமக மற்றும் வர்த்தக சங்கம் என அவ்வப்போது பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டங்களை நடத்தி வந்தனர். அதனால் போராட்டம் நடைபெறும் சமயங்களில் பணிகள் தடைப்பட்டன.
மீண்டும் போக்குவரத்து
இந்நிலையில் பேருந்து நிலையத்தில் ஒரு பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் நிறைவுற்று பேருந்துகள் பேருந்து நிலைத்தின் ஒருபகுதிவரை சென்று வந்தன. ஒருபகுதியினை தகர தடுப்புகள் கொண்டு அடைத்து வைத்திருந்ததனர். தற்போது பணிகள் முழுமையாக முடியாத தருவாயில் சாலைகள் மட்டும் அமைக்கப்பட்டதை அடுத்து, பேருந்து நிலையம் உள்ளே சென்று வெளியே வர முழுவதுமாக திறந்து விடப்பட்டுள்ளது.
ஆட்டோ ஓட்டுனர்கள் மகிழ்ச்சி
இதனால் பேருந்து நிலைய ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டிவந்த ஓட்டுநர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முழுமையாக கட்டுமான பணிகள் நிறைவு பெறாத நிலையில், பேருந்துகள் தற்போது பேருந்து நிலையம் உள்ளே அனுமதிக்கப்பட்டு தடுப்புகள் அகற்றப்பட்டதால் மீண்டும் எங்களின் வாழ்வாதாரம் காக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என கூறிய ஆட்டோ ஓட்டுனர்கள் பேருந்து நிலைய வாயில் பகுதிகளில் சூடம் ஏற்றி வழிபாடு செய்தனர். இது அவ்வழியே சென்றவர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
பறக்கும் புழுதி
மேலும் முழுமையான பணிகள் முடிவடையாத நிலையில் பேருந்துகள் உள்ளே சென்றுவருவதால் பேருந்து நிலையத்தில் சிமெண்ட் புழுதிகள் காற்றில் பறந்து பெரும் காற்று மாசை ஏற்படுத்துவதுடன், பயணிகள் கண்களிலும் விழுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் பயணிக்களின் ஆடைகளையும் அது பாழாக்குவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

