பேருந்தை இயக்கிய எம்எல்ஏ; சுய விளம்பரத்திற்காக அரசு விதிமுறைகள் மீறப்படுகிறதா? - மயிலாடுதுறையில் சமூக ஆர்வலர்கள் கேள்வி....?
மயிலாடுதுறை அருகே புதிய வழித்தடத்தில் இயக்கப்பட்ட பேருந்தை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் 21 கிலோமீட்டர் தூரம் பயணிகளை பேருந்தில் ஏற்றி, இறக்கி சென்ற நிகழ்வு நடந்தேறியுள்ளது.
![பேருந்தை இயக்கிய எம்எல்ஏ; சுய விளம்பரத்திற்காக அரசு விதிமுறைகள் மீறப்படுகிறதா? - மயிலாடுதுறையில் சமூக ஆர்வலர்கள் கேள்வி....? Mayiladuthurai MLA rajkumar drive the government bus for 21 kilometers - TNN பேருந்தை இயக்கிய எம்எல்ஏ; சுய விளம்பரத்திற்காக அரசு விதிமுறைகள் மீறப்படுகிறதா? - மயிலாடுதுறையில் சமூக ஆர்வலர்கள் கேள்வி....?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/09/9965eabda7d0153eb3ce622610dfddc51707458422130733_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மயிலாடுதுறை அருகே புதிய வழித்தடத்தில் இயக்கப்பட்ட பேருந்தை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் 21 கிலோமீட்டர் தூரம் பயணிகளை பேருந்தில் ஏற்றி, இறக்கி சென்ற நிகழ்வு நடந்தேறியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பேருந்து நிலையத்தில் இருந்து பட்டவர்த்தி மற்றும் மயிலாடுதுறை வழியாக திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய வழித்தடத்தில் புதிய அரசு பேருந்து சேவை துவக்கப்பட்டது. மணல்மேடு மற்றும் பட்டவர்த்தி வழியாக மயிலாடுதுறைக்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு வேலைக்கு செல்வோர், பொதுமக்கள் என அனைவரும் உரிய நேரத்தில் செல்வதற்கு பேருந்துகள் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மேலும், பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கிய படி மாணவர்கள் ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொண்டனர்.
இந்நிலையில் இப்பகுதிக்கு புதிய பேருந்து வசதி வேண்டுமென்று அப்பகுதி பொதுமக்கள் என பல தரப்பினரும் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த சூழலில் அவர்களின் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் மணல்மேட்டில் இருந்து பட்டவர்த்தி வழியாக திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய பேருந்து சேவை தொடங்கி வைத்தார். மணல்மேடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற துவக்க விழாவில் புதிய பேருந்தை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் கொடியசைத்து துவக்கி வைத்ததுடன், தானே பேருந்தை ஓட்டிச் சென்றார். மணல்மேடு, திருவாளபுத்தூர், பட்டவர்த்தி, மல்லிய கொல்லை, வில்லியநல்லூர், நீடூர் வழியாக மயிலாடுதுறை பேருந்து நிலையம் வரை வந்த புதிய பேருந்தை கிராம மக்கள் வழிநெடிகளும் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வரவேற்றனர்.
மேலும் பேருந்தை ஓட்டி வந்த மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு,சுமார் 21 கிலோமீட்டர் தூரம் வரை புதிய பேருந்தை ஓட்டிச்சென்றார். இந்நிலையில் சமீப காலமாக புதிய பேருந்து சேவைகளை துவங்கி வைக்கும் மக்கள் பிரதிநிதிகள் அவர்களுக்கு பேருந்தை இயக்க தெரியும் பட்சத்தில் சில அடி தூரம் வரை பேருந்தை இயக்கி அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. அதேபோன்று தான் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பேருந்தை ஓட்ட துவங்கியதும் பலரும் இவர் சில அடிகள் வரை ஓட்டி செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் சற்றும் யாரும் எதிர்பாராத விதமாக, 21 கிலோ மீட்டர் தூரம் வரை பேருந்து ஓட்டுநராக மாறி, பேருந்து நிறுத்தங்களிலும் பேருந்தை நிறுத்தி பொதுமக்களை பேருந்தில் ஏற்றி இறக்கிய சென்றார்.
ஒரு புறம் மணல்மேடு முதல் மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் வரை ஓட்டி சென்ற எம்எல்ஏவுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தாலும், ஒரு அரசு பேருந்தை ஓட்டுவதற்கு என்று பல அரசு விதிமுறைகள் உள்ளது என்றும், அதற்கான ஓட்டுநர் உரிமம் இருந்தாலும் மேலும் சில விதிகளுக்கு உட்பட்டே பொதுமக்கள் பணிக்கு பேருந்தை அவர்களின் உயிர் மீது அக்கறை கொள்ளாமல் தற்போது உள்ள மக்கள் பிரதிநிதிகள் அவர்களின் சுய விளம்பரத்திற்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் கண்டனத்திற்குரியது எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இப்பேருந்தானது மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்லவும், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்பவர்களுக்காகவும் புதிய வழித்தடத்தில் புதிய பேருந்து இயக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)