Mayiladuthurai leopard: 8வது நாள்: சிறுத்தை எங்கே? குழப்பத்தில் வனத்துறை
கடந்த இரண்டு நாட்களாக மயிலாடுதுறையில் சுற்றித்திரியும் சிறுத்தை குறித்து உறுதியான தகவல்கள் ஏதும் கிடைக்காத நிலையில், சிறுத்தை வேறு மாவட்டத்திற்கு சென்றதா என வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
![Mayiladuthurai leopard: 8வது நாள்: சிறுத்தை எங்கே? குழப்பத்தில் வனத்துறை Mayiladuthurai Leopard uncaught for eighth day: Moved to Thanjavur district? The forest department is confused. Mayiladuthurai leopard: 8வது நாள்: சிறுத்தை எங்கே? குழப்பத்தில் வனத்துறை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/09/4519ab1682982fb67c3431aa3ee955351712638289260733_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
எட்டாவது நாளாக மயிலாடுதுறையில் சிறுத்தையை தேடும் பணி.
கடந்த 02.04.2024 அன்று மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க எடுக்கப்பட்ட வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக வெவ்வேறு புலிகள் காப்பகங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட சிறுத்தை பிடிக்கும் கூண்டுகள் 16 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிக்க தானியங்கி சென்சார் கேமராகள் 49 பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நீர்நிலைகளில் வழியாக பயணம் செய்யும் சிறுத்தை
கடந்த 5 நாட்களாக சிறுத்தையின் நடமாட்டம் குறித்த ஆய்வுகளின் அடிப்படையில் சிறுத்தையானது ஆறு, வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர் வழிகளை அதிகமாக பயன்படுத்துவதாக அறியமுடிகிறது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். முக்கியமாக மயிலாடுதுறை சுற்றுப்பகுதியில் உள்ள மஞ்சலாறு, மகிமலையாறு மற்றும் பழைய காவேரி ஆறு ஆகிய ஆறுகளில் சிறுத்தையின் நடமாட்டத்திற்கான அறிகுறிகள் காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து சிறுத்தையின் நடமாட்டத்தின் அடிப்படையில் மஞ்சலாறு, மறையூர் பகுதியில் 3 கூண்டுகளும் ஆரோக்கியநாத பகுதியல் கூண்டும் மகிமலையாறு பகுதியில் 2 கூண்டுகளும் ரயில்வே ஜங்சன் அருகில் காவேரி ஆற்றுப்பாலத்தின் அருகில் ஒரு கூண்டும் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சிறுத்தையை தொடர்ந்து இடமாறும் கேமராக்கள்
மேலும், ஏற்கனவே 19 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மேலும் 30 தானியங்கி கேமராக்கள் வரவழைக்கப்பட்டு அவற்றை சரியான இடங்களில் பொருத்தும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. சிறுத்தையின் நடமாட்டத்தை அறிய மறையூர், சித்தர்காடு, ஊர்க்குடி போன்ற பல கிராமங்களில் குழுக்களாக சென்று பொதுமக்களிடம் தகவல் குறித்து விபரங்கள் சேகரித்தும் ஆங்காங்கே வீடுகளிலும் கடைகளிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும் வரப்பட்டுள்ளது.
நாய்களின் உதவி
மேலும், உள்ளூரில் உள்ள நாட்டு வகை நாய்கள் வைத்திருப்பவரின் உதவியுடன் அந்த நாட்டுவகை நாய்களை கொண்டு புதர் பகுதிகளிலும், ஓடை பகுதிகளிலும் சிறுத்தை நடமாட்டத்தை அறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிறுத்தையின் எச்சம்
இதனிடையில் மயிலாடுதுறை ரயில்வே ஜங்சன் அருகில் உள்ள காவேரி ஆற்று பாலத்தின் அருகில் சிறுத்தையின் எச்சம் கிடைக்கப்பெற்றது. அதனை, ஆய்வு செய்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சிறுத்தை உட்கொண்ட இரை தொடர்பாகவும், சிறுத்தையின் அடையாளம் குறித்தான சோதனைக்காகவும் சென்னை வண்டலூரில் உள்ள உயர் தொழில்நுட்ப வனஉயிரின மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் இருந்து 22 கிலோமீட்டரில் சிறுத்தை நடமாட்டம்
இந்நிலையில் சிறுத்தை நேற்று முன்தினம் மயிலாடுதுறை நகரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவு பயணித்து குத்தாலம் தாலுக்கா காஞ்சிவாய் கிராமத்தில் சுற்றி திரிந்ததாக அப்பகுதியை சேர்ந்த மாசிலாமணி என்பவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து நேற்று அங்கு முகாமிட்ட வனத்துறையினர் 16 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தியும், ஆற்று ஓரங்களில் கூண்டுகள் அமைத்தும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினார். இந்த சூழலில் கடந்த இரண்டு தினங்களாக வனத்துறை வந்து பார்த்தபோது கூண்டுகளில் சிறுத்தை சிக்கவில்லை. மேலும் தானியங்கி கண்காணிப்பு கேமராவை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் அதில் சிறுத்தையின் நடமாட்டம் தென்பட்டவில்லை
அதே வேளையில் காஞ்சிவாய் கிராமத்தை அடுத்த பேராவூர் ஊராட்சியில் நாகராஜ் மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேர் சிறுத்தையை நேற்று முன்தினம் இரவு பார்த்ததாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மசினகுடியில் டி23 புலியை பிடிப்பதில் சிறப்பாக செயல்பட்ட பொம்மன் மற்றும் காலன் ஆகியோர் காஞ்சிவாய் ஊராட்சியை அடுத்த பேராவூர் ஊராட்சியில் சிறுத்தையின் கால் தடம் தென்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் அங்கேயும் கால்தடம் எதுவும் கிடைக்கவில்லை. மேற்கண்ட தகவல் மற்றும் கடந்த சில தினங்களாக சேகரித்த தகவல்கள் அடிப்படையில் காவேரி, பழைய காவேரி மற்றும் மஞ்சலாறு உட்பட்ட பகுதிகளின் நீர்வழிப் புதர்களிலேயே அச்சிறுத்தை இருக்கலாம் என்று அறியமுடிகிறது. அதற்கேற்றவாறு, கண்காணிப்பு குழுக்கள் தணிக்கை மேற்கொள்வதற்கும்,கூண்டுகளை இடமாற்றம் செய்து வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் சென்றதா சிறுத்தை?
இதனிடையே தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா நரசிங்கம்பேட்டை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக நேற்று கிடைத்த தகவலின் அடிப்படையில் மூன்று கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை சோதனை செய்தது அப்பகுதியில் உள்ள கூண்டுகளில் சிறுத்தை சிக்கவில்லை. மேலும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சிறுத்தை இடம் பெயர்ந்ததா? என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளதால் அம்மாவட்ட மக்கள் தற்போது அச்சத்தில் உறைந்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)