(Source: ECI/ABP News/ABP Majha)
எட்டு நாய்களும், ஓர் சிறுத்தையும்; மயிலாடுதுறையில் பரபரப்பு - சூடுபிடிக்கும் தேடுதல் வேட்டை
மயிலாடுதுறையில் சுற்றித்திரியும் சிறுத்தை 4 வது நாளாக பிடிபடாத நிலையில் எட்டு மோப்ப நாய்கள் உதவியுடன் வனத்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.
5 நாட்களாக மயிலாடுதுறையில் வலம் வரும் சிறுத்தை
டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் செம்மங்குளம் பகுதியில் கடந்த ஏப்ரல் 2 -ம் தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாட்டுவதாக பொதுமக்கள் தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், சிறுத்தையின் காலடி தடத்தை வைத்து சிறுத்தை ஊருக்குள் வந்துள்ளதை உறுதி செய்தனர். தொடர்ந்து சிறுத்தையை பிடிப்பதற்கு வனத்துறை தீயணைப்புத்துறை காவல்துறை இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 3-ம் தேதி சிறுத்தை பதுங்கி இருப்பதாக கருதப்பட்ட கூறைநாடு தெற்கு சாலிய தெரு , செங்கழநீர் பிள்ளையார் கோயில் தெரு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வலைகள் கயிறுகளுடன் தீவிரமாக சிறுத்தையை தேடி வந்தனர்.
5 கிலோமீட்டர் சுற்றளவில் உலவும் சிறுத்தை
இந்நிலையில் நேற்று அதிகாலை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை பதுங்கி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதியில் அறுவடை இயந்திரத்தின் மேல் படுத்து தூங்கிக் கொண்டிருந்த ஒருவர் சிறுத்தை கடந்து சென்றதை பார்த்ததாக அளித்த தகவலின் பெயரில் வனத்துறையினர் அந்தப் பகுதியில் முகாமிட்டுட்டுள்ளனர். மூன்று கிலோமீட்டர் தூரம் சிறுத்தை கடந்து வந்து பதுங்கியுள்ளது. சிறுத்தையின் கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டு மார்க் செய்யப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சிறுத்தையை பிடிப்பதற்கு வன உயிரின காப்பாளர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக அனுபவமுள்ள வன பணியாளர்கள் கள தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இரவு பகலாக தேடுதல் பணி
சிறுத்தை நடமாட்டம் உள்ள செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம், சித்தர்காடு மற்றும் ஊர்குடி ஆகிய பகுதிகளை ஆய்வு செய்து 16 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியை தீவிர படுத்தியுள்ளனர். இப்பகுதியில் மதுரையில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறுத்தைப் பிடிக்கும் பெரிய அளவிலான 3 கூண்டுகளும் வைக்கப்பட்டுள்ளது. சிறுத்தைப் புலியை பிடிப்பதற்கு 13 குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், அச்சப்பட தேவையில்லை எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. சிறுத்தையை கண்காணிக்க 16 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது கூடுதலாக விலங்குகளின் உடல் சூட்டை வைத்து அவைகள் இருட்டு மற்றும் காட்டுப் பகுதியில் இருந்தாலும் கண்டறியும் தெர்மல் ட்ரோன் கேமரா மூலம் சிறுத்தையை தேடும் பணிக்காக வரவழைத்துள்ளனர். இதனால் மூலம் இரவு வேளையில் சிறுத்தை நடமாட்டத்தை எளிதில் கண்டறிய முடியும் என தகவல் தெரிவித்தனர். சிறுத்தை எங்கிருக்கிறது என்பது புலப்படாத நிலையில் 3-ம் நாளான நேற்று சித்தர்காடு பகுதியில் ஆடு ஒன்ற கழுத்து குதறிய நிலையைில் இறந்து கிடந்தது. ஆடு கொல்லப்பட்டிருந்த தன்மையை ஆராய்ந்த வனத்துறையினர் ஆட்டை சிறுத்தை கொன்று இருக்க 70 சதவீதம் வாய்ப்புள்ளதாகவும் கால்தடங்கள் இல்லாததால் உறுதியாக சொல்லமுடியாது உடற்கூறு ஆய்வு அறிக்கையில் தெரியவரும் என்று தெரிவித்தனர்.
இரண்டாவது ஆடு உயிரிழப்பு
தொடர்ந்து ஆரோக்கியநாதபுரம் கருவேலங்காடு பகுதியில் நேற்று இரவு 3 கூண்டுகளில் ஆடுகள் மற்றும் இறைச்சியை வைத்து சிறுத்தை அகப்படுமா என்று வனத்துறையினர் காத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் உள்ள கூட்ஸ் யார்ட் பிளாட்பார்மில் ஒரு ஆட்டினை அடித்து சிறுத்தை தின்றதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். கொல்லப்பட்ட ஆட்டின் தலை மற்றும் முன் கால்கள் மட்டும் எஞ்சியுள்ள நிலையில் அவற்றை வனத்துறை மற்றும் போலீசார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இப்பகுதியில் ஆடுகளை நாய்கள் கடித்து குதறி கொள்ளும் என்று கூறப்படும் நிலையில் ஆட்டின் தலை மற்றும் முன் கால்கள் கைப்பற்றப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சிறுத்தையை கண்காணித்து அதனை திறமையாக பிடிக்கும் பணியில் உள்ள பொம்மன், காலான் ஆகிய இரு இறந்த ஆட்டை ஆய்வு செய்தனர். சிறுத்தை வந்து சென்றதற்கான தடயங்கள் இல்லாததால் சிறுத்தை தான் கொன்றது என்பதை உறுதிப்படுத்த இயலாது என்று வனத்துறையினர் கூறினர். ஆட்டை உடற்கூறாய்வு செய்வதற்கு எடுத்து சென்றனர். நாய் கடித்து கொன்று இருக்க வாய்ப்புள்ளதாகவும், தடயங்கள் எதுவும் இல்லாததால் சிறுத்தை தான் அடித்துக் கொன்றது என்பதை வனத்துறையினர் உறுதிப்படுத்தவில்லை.
சிறுத்தை பிடிக்க களம் இறங்கிய மோப்பநாய்கள்
தற்போது ஆரோக்கியநாதபுரம் கருவேலங்காடு சிறுத்தை நடமாடிய பகுதியில் தற்போது 8 மோப்பநாய் மற்றும் வேட்டை நாய்கள் கொண்டு செல்லப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் முனைவர் நாகநாதன் IFS சிறுத்தை நடமாடிய ஆரோக்கியநாதபுரம் கருவேலங்காடு பகுதிக்கு நேரிடையாக வந்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அவர் கண்காணிப்பு கேமராவில் சிறுத்தையின் நடமாட்டம் தென்பட்டுள்ளது. எனவும் சிறுத்தைக்கு வேறு இடத்தில் கூண்டு அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.