ஏற்கனவே தவளை... இப்போ புழுக்களா? மயிலாடுதுறை மக்களை அலறவிடும் தனியார் குடிநீர் கேன் - பின்னணி என்ன?
மயிலாடுதுறை பெசன்ட் நகர் பகுதியில் தனியார் நிறுவனம் விநியோகித்த குடிநீர் கேனில் புழுக்கள் நெளிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், பெசன்ட் நகர் பகுதியில் தனியார் நிறுவனம் விநியோகம் செய்த குடிநீர் கேனில் புழுக்கள் நெளிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.
மயிலாடுதுறை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் தனது தாய், கர்ப்பிணி மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இப்பகுதியில் உள்ளாட்சி அமைப்பின் மூலம் விநியோகிக்கப்படும் நிலத்தடி குடிநீர் காவி நிறத்தில் வருவதால், அதனைப் பயன்படுத்த முடியாமல் விக்னேஷ் குடும்பத்தினர் கடந்த சில மாதங்களாக தனியார் நிறுவனத்திடம் இருந்து காசு கொடுத்து சுத்திகரிக்கப்பட்ட கேன் தண்ணீரை வாங்கிப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
மேலாளரின் அலட்சியப் பதில்: அதிர்ச்சியில் குடும்பத்தினர்
இந்நிலையில், வழக்கம் போல இன்று காலை தனியார் நிறுவனம் விநியோகம் செய்த குடிநீர் கேனை விக்னேஷ் வாங்கி, வீட்டில் உள்ள குடிநீர் பானையில் ஊற்றியுள்ளார். அப்போது, தண்ணீரில் ஏராளமான புழுக்கள் நெளிவதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட தனியார் குடிநீர் நிறுவனத்தின் மேலாளரை விக்னேஷ் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு நியாயம் கேட்டுள்ளார். ஆனால், நிறுவனத்தின் மேலாளரோ, "எங்கள் நிறுவனத் தண்ணீரில் புழுக்கள் இருக்க வாய்ப்பே இல்லை" என்று மறுத்ததோடு மட்டுமல்லாமல், மிகவும் அலட்சியமாகப் பதிலளித்துள்ளார். மேலும், "இதைப் பற்றி நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள், எங்களுக்குக் கவலையில்லை. உங்களால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளுங்கள்" என மிரட்டும் தொனியில் கூறி இணைப்பைத் துண்டித்ததாகக் கூறப்படுகிறது.
"எனது வீட்டில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி மனைவி உள்ளனர். தெரியாமல் இந்தத் தண்ணீரை அவர்கள் குடித்திருந்தால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் எங்களை ஆட்கொண்டுள்ளது." என பாதிக்கப்பட்ட விக்னேஷ் வேதனை தெரிவித்துள்ளார்.
உணவு பாதுகாப்புத் துறையில் ஆன்லைன் புகார்
தனியார் நிறுவனத்தின் இந்த பொறுப்பற்ற மற்றும் அலட்சியமான பதிலால் ஆத்திரமடைந்த விக்னேஷ், உடனடியாக கேன் தண்ணீரில் புழுக்கள் நெளியும் காட்சிகளைத் தனது மொபைல் போனில் வீடியோ ஆதாரமாகப் பதிவு செய்தார். தொடர்ந்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு இணையதளம் (Online) வாயிலாக முறைப்படி புகார் அனுப்பியுள்ளார்.
தனது குடும்பத்தினரின் உடல்நலனைக் கருத்தில் கொண்டும், பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தியும், சம்பந்தப்பட்ட தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையில் அதிகாரிகள் உடனடியாக அதிரடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், பொதுமக்களுக்குச் சுகாதாரமான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடரும் புகார்கள்: ஏற்கனவே கேனில் வந்த தவளை!
இந்த குறிப்பிட்ட தனியார் குடிநீர் நிறுவனம் குறித்துப் பொதுமக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். கடந்த காலங்களில் இதே நிறுவனத்தின் குடிநீர் கேன் ஒன்றிற்குள் தவளை கிடந்ததாகப் புகார் எழுந்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அத்தகைய கடுமையான புகாருக்கு உள்ளான பிறகும், இந்த நிறுவனம் எவ்வித சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றாமல், தற்போதும் புழுக்கள் கலந்த தண்ணீரை விநியோகம் செய்து மக்களின் உயிரோடு விளையாடி வருவது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிலத்தடி நீர் சுரண்டல்: ஆலைக்கு எதிராகப் பொதுமக்கள் கோரிக்கை
இந்த தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் மயிலாடுதுறையின் முக்கிய வாழ்வாதாரமான காவிரி ஆற்றின் கரையோரத்திலும், நகரின் மையப் பகுதியிலும் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் சட்டவிரோதமாகவும், விதிகளை மீறியும் நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி வருவதாகப் அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாகக் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதன் காரணமாக, அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, கடுமையான குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்த்துப் பொதுமக்கள் ஏற்கனவே பலகட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளனர். இவ்வளவு புகார்கள் இருந்தபோதிலும், மாவட்ட நிர்வாகமோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ இதுவரை அந்த தனியார் நிறுவனத்திற்குச் சென்று எவ்வித ஆய்வும் மேற்கொள்ளவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, நகரின் மையப் பகுதியில் நிலத்தடி நீரைச் சுரண்டி, பொதுமக்களுக்குச் சுகாதாரமற்ற குடிநீரை வழங்கும் இந்த தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையை உடனடியாக நகர்ப் பகுதியில் இருந்து நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மயிலாடுதுறை பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. மாவட்ட ஆட்சியர் இதில் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Before You Go
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























