வைத்தீஸ்வரன் கோயிலில் சென்னை மாநகராட்சி என்ற ஃபைல் வைத்து வழிபாடு செய்த ராதாகிருஷ்ணன்
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட தலைமைச் செயலாளராக ராதாகிருஷ்ணன் வைத்தீஸ்வரன் கோயில் குடும்பத்துடன் வழிபாடு மேற்கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். சீர்காழி அருகே எருக்கூரில் அமைந்துள்ள நவீன அரிசி ஆலை மற்றும் நாங்கூரில் அமைந்துள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆகியோரிடம் இணைந்து கூட்டாக ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தனர்.
செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன்
ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்; தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளேன். காலையில் எருக்கூர் நவீன அரிசி ஆலையில் அமைந்துள்ள சைலோவை பார்வையிட்டேன். அதனை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை நடைபெற்று வருகிறது. விரைவில் அது பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.
70 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு பட்டுவாடா
மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரையிலும் 130 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 124 நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நடைபெற்று வருகின்றன. இதுவரையிலும் 34,859 ஆயிரம் மெட்ரிக் டன் மேல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 6444 விவசாயிகளுக்கு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு 70 கோடி ரூபாய் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு 34.46 மெட்ரிக் டன் அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 8004 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
அதிகப்படியான விவசாயம்
தமிழகத்தில் அதிகப்படியான விவசாயம் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் தான் நடைபெறுகிறது. தற்போது மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டாலும், குறுவை விவசாயம் முடிவுற்ற நிலையில் கொள்முதல் நிலையங்களில் போதிய தார்பாய்கள் இல்லாததால் அதிக கட்டணத்திற்கு வாங்கப்பட்டு வருகிறது. மேலும் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் கையூட்டு வாங்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமென்ற விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதனை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டு, இது போல் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பல்வேறு நடவடிக்கைகள்
தற்போது காலநிலை மாற்றத்தால், மழையால் விவசாயிகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அறுவடை முடிந்து நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டுவரும் நெல் மழையால் ஈரப்பதம் பாதிப்படைவதால் அதற்கும் எவ்வாறு மாற்று ஏற்பாடு செய்யப்படுவது என அதிகாளுடன் ஆலோசனை செய்து வருகிறோம். கடந்த மூன்று ஆண்டுகளில் முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கூடுதலாக பல்வேறு பகுதிகளில் நெல் பாதுகாப்பு குடோன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தரம் உயர்த்தப்பட்டு, நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோன்று கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து, விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
வைத்தீஸ்வரன் கோயிலில் வழிபாடு
முன்னதாக தனது குலதெய்வ கோயிலான தருமை ஆதீனத்துக்கு சொந்தமான உலகப் புகழ்பெற்ற செவ்வாய் ஸ்தலமாக விளங்கக்கூடிய மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் அமைந்துள்ள தையல்நாயகி உடனாகிய வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
செவ்வாய் அதிபதியான அங்காரகன், சுவாமி, அம்பாள், முருகர் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டனர். கோயில் நிர்வாகம் சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடு செய்து வைக்கப்பட்டது. அப்போது அனைத்து சாமி சன்னதிகளிலும் பெருநகரம் சென்னை மாநகராட்சி என்ற கோப்பு ஃபைலை வைத்து வழிபாடு மேற்கொண்டனர். இது குறித்து கோயிலை சார்ந்த சிலர் கூறுகையில், தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் மகனின் மேற்படிப்பு தொடர்பான கோப்புகள் என தெரிவித்தனர்.